ஆங்கிலக் கதை-தமிழ்த் திரைக்கதை.

ஆங்கிலப் படங்கள் ஒவ்வொன்னையும் பார்க்கும்போதும் அதை தமிழில் எடுத்தா எப்டி இருக்கும்-னு ஒரு சின்ன தாட் மனசுக்குள்ள ஓடும். தமிழ் ரசிகர்களுக்கு எதை எப்டி சொன்னா நல்லா இருக்கும்-னு கொஞ்சம் யோசிப்பேன்.

சில ஆங்கிலப் படங்களோட கதைகள தமிழ் ரசிகர்களுக்கு ஏத்த கதையா சொல்றது ரொம்ப கஷ்டம்னு தோனும்(உம். {proof}, lost in space). சில படங்கள் பார்க்கும்போதே, பாடல்கள் இல்லாத, தமிழ்ப் படம் பாக்கற மாதிரி இருக்கும்(உம். Face Off). சில ஆங்கிலப் படங்கள் தமிழ்ப் படங்கள்ல இருந்து சுட்ட படங்கள் மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்தும்(உம்.The Parent Trap, குட்டி பத்மினி நடிச்ச தமிழ்ப் படம் மாதிரி).

சில கதைகளை ஆங்கிலப் படத்துல பார்த்தைவிட தமிழ்ல அருமையா அழகா சொல்லியிருப்பாங்க. சிறந்த உதாரணம், கஜினி. Memento-ங்கற ஆங்கிலப் படத்துல ஒரு வித்தியாசமான கதை சொல்லும் முறை(க்ளைமேக்ஸ்ல ஆரம்பிச்சு கதை ரிவர்ஸ்ல நகரும்) இருக்குமே தவிற இவ்ளோ அழகான ஒரு காதலோ காமெடியோ இருக்காது.

‘காட் ஃபாதர்’-ங்கற படம் பலருக்கு பல இன்ஸ்பிரேஷன்களைத் தந்த படம்-னு பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். நாயகன், அக்னி நட்சத்திரம்-னு மணிரத்னம் படங்கள்ல கூட அந்தப் படத்தோட தாக்கத்தைப் பார்த்திருக்கேன்.

ஆங்கிலப் படங்கள்ல இருந்து சுட்டாலும் உறுப்படியா தமிழ்ப்படுத்தாம, அபத்தமா, ஆபாசமா தமிழ்ப்படுத்தற இயக்குனர்கள்ல முதலிடம், S J சூர்யா-க்குதான். நியூ(Big), அன்பே ஆருயிரே(Bruce Almighty)-லாம் இதுக்கு உதாரணங்கள். ஜிம் கேரி-யோட தமிழ் வடிவம் அவர்தான்னு அவருக்கே ஒரு நெனைப்புபோல. அவர் நடிச்ச படம் ஒன்னு வியாபாரி(Family Man-அப்டீங்கற ஒரு அருமையான படத்தோட மோசமான தழுவல்)

ஆங்கிலப் படங்கள்ல இருந்து கதைகள சுட்டு, Sorry, தழுவி, தமிழ்ல திரைக்கதை அமைச்சு படமா எடுக்கறது சமீபகாலமா நெறையா நடக்குதோன்னு நெனைக்கறேன். அப்படிப்பட்ட படங்களோட கதைகளை பார்க்கும்போது ‘Hey, I know where this story came from’ அப்டீன்னு தோனும்.

சமீபத்துல நான் பார்த்த இந்தப் படத்தையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துக்கலாம்.
அயன்.
‘Gone in 60 seconds’, ‘Catch me if you can’ படங்களை ஞாபகப்படுத்துச்சு இந்தப் படம்.

‘Gone in 60 seconds’ படம் பார்த்துட்டு அதை தமிழ்ப்படுத்தினா எப்டி இருக்கும்-னு யோசிச்சிருக்கேன்.
ஆபத்துல இருக்குற தம்பியை அண்ணன் காப்பாத்தற மாதிரி ஒரு அண்ணன்-தம்பி பாசப் பிணைப்பு பத்தின கதை. தமிழ்ப் படத்துக்கு நல்லாதான் இருக்கும். ஆனா என்ன, அண்ணனும் தம்பியும் கடத்தல் தொழில் பண்றாங்க. தம்பிக்காக பண்ணினாலும் கடத்தல் பண்றதை தமிழ்ப் படத்துல நியாயப்படுத்த முடியுமா? அப்டீனெல்லாம் யோசிச்சிருக்கேன்.

அயன்ல அண்ணன்-தம்பி பாசம் மாதிரி ஒரு பாசம்(பிரபு-சூர்யா இடையில)
கடத்தல்-னாலும் போதைப் பொருட்களைக் கடத்தாம, (நியாயமா) வைரங்களை மட்டும் கடத்தறாங்க. அதுவும் ஆப்பிரிக்க நாட்ல மக்களுக்கு எதிரா நடக்கற ஆட்சிக்கு எதிரா புரட்சி செய்யற கும்பல்கிட்ட வைரம் வாங்கறாங்க. (பணம் நல்ல காரியத்துக்குத்தான் பயன்படுதாம்). நட்பு செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட், காதல், இன்னும் நெறைய நல்ல திரைக்கதை அம்சங்களோட நல்ல தமிழ்ப் படமா கொடுத்திருக்காங்க.

ஆனா அயன்னா என்ன அர்த்தம், ஏன் இந்தப் பெயர்ன்னு புரியல.

அசரீரீ

ஆழி பதிப்பகத்துல இருந்து சுஜாதா நினைவு அறிவியல் புனைவு சிறுகதைகளுன்னு ஒரு போட்டி வைச்சாங்க. அதுல கலந்துகிட்டு நான் எழுதிய கதை. ‘இப்டி இருந்திருந்தா?’-ன்னு ரொம்ப நாளாவே நான் மனசுல இருந்த ஒரு எண்ணத்தோட சிறுகதை வடிவம். இப்டி ஒரு சிறுகதையா வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுத்த ஆழிக்கு நன்றி.

அசரீரீ

டைசி நேர பயண ஆயத்தங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தான் சூர்யா, ‘யு ஆர் என்’ தேசத்து விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தலைமை விஞ்ஞானி. ஆராய்ச்சி மையத்தின் புத்தக அறை, சோதனைக்கூடம், தன் வீட்டு புத்தக அறை, வீட்டிலேயே இருக்கும் ஆராய்ச்சிக்கூடம், இவைகள் தவிர மற்ற எதிலும் அதிக நாட்டம் இல்லாதவன். மூவாயிரம் வருடங்களுக்கு முன் விண்வெளி ஆராய்ச்சி செய்தவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆராய்ச்சி செய்தவர்கள் எழுதிய புத்தகங்கள்வரை அத்தனையும் அவனுக்கு அத்துப்படி. பல ஆராய்ச்சியாளர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் ஆராய்ச்சி செய்த விதம், அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அவர்கள் தீர்வுகாணாத ஃபார்முலாக்கள், ஆராய்ச்சிகளுக்கு அவர்கள் பயன்படுத்திய உயிரினங்கள், அவைகளுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகள், பழ வகைகள், அவற்றின் குணாதியங்கள் என அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தான்.

மானிட்டர்கள் சரியான சிக்னல்களை அறிவித்துக்கொண்டிருந்தன. வெளியில் சூரியனின் பிரகாசம் அவன் கண்ணைக் கூசச் செய்துகொண்டிருந்தது. தட்ப வெப்பம், காற்றழுத்தம் என அனைத்தும் விண்வெளிப் பயணத்திற்கு சாதகமாக இருப்பதை சரிபார்த்துக்கொண்டான். ஆய்வுக்கூடத்திற்கு வெளியில் ராட்சத விண்கலம் ஒன்று புறப்படத் தயார் நிலையிருந்தது. சூர்யா, அவனுக்கு முன் இருந்த கணிணிகளை ஆயத்தப்படுத்த, அந்த ஆய்வுக்கூடம் முழுதும் ஆங்காங்கே இருந்த அனைத்துக் கடிகாரங்களும் 40:00:00 என்று ஒளிரின. அருகில் இருந்த திரையில் மின்னிய பல எண்களின் இடையே 30:00:00 என்ற எண்களை திணித்தான். திரைகளின் நடுவில் இருந்த மைக்கை ஆன் செய்து, “கடைசி நேர ஆயத்தங்கள் முடிந்துவிட்டன. லாஸ்ட் ஃபார்ட்டி மினிட்ஸ். ஃபைனல் கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்” என்று அறிவித்துவிட்டு ஒரு பட்டனை அழுத்தினான். 39:59:99 என்று நிமிடங்கள் குறையத் தொடங்கின.

அவசரமாக வேறு சில பட்டன்களை தட்டி தயார்ப்படுத்தினான். வெளியில் நின்ற ராட்சத விண்கலம் தன் மேல்புறத்தை உள்நோக்கி இழுத்து மூடிக்கொண்டு, அடிப்புறம் வழியாக பெருமூச்சு விட்டது. கணிணித் திரைகளுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த புகைப்படம் மற்றும் வேறு சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு, எட்டுக்கால் பாய்ச்சலில் பாய்ந்து பின்புற வாசல் வழியாக வெளியில் வந்தான். அவனது வாகனம், அவன் வருகையை உணர்ந்து, திறந்துகொண்டு ‘வெல்கம்’ என்றது. அதில் ஏறிக்கொண்டான். உள்ளேயிருந்த கடிகாரம் 38:40:19 என்று குறைந்துகொண்டிருந்தது. ராட்சத விண்கலத்தைத் திரும்பிப் பார்த்து ‘உங்கள் பயணம் இனிதே அமையட்டும்’ என்று வாழ்த்திவிட்டு புறப்பட்டான்.

38:35:08.

ஆராய்ச்சி மையத்தில், கணிணித் திரைகளுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த அவனது மானசீக குரு, ‘அறிவியல் தந்தை’ என்று அழைக்கப்பட்ட ‘ஹரூட்டோ’-வின் புகைப்படத்தை எடுத்து வாகன இருக்கையின் முன்பக்கம் வைத்துவிட்டு வணங்கிவிட்டு வாகனத்தின் வேகத்தைக் கூட்டினான்.

ஹரூட்டோ, மூவாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த முதல் தலைமுறை விஞ்ஞானி. கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சிகளின் முன்னோடி. ‘நாம் வாழும் இந்தக் கிரகம் சூரியனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றது’ என்றும், ‘இந்தக் கிரகத்தைப் போலவே இன்னும் பல கிரகங்கள் சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன’ என்றும் முதன் முதலில் கண்டுபிடித்து அறிவித்தவர் அவர்தான். மற்ற ஆராய்ச்சியாளர்கள், அவரது கண்டுபிடிப்புகளை அன்று ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், பின்னாட்களில் ஏற்றுக்கொண்டு, அவர்கள் கண்டுபிடித்த அண்டை கிரகத்திற்கு ஹரூட்டோ என்று அவர் பெயரையே சூட்டினார்கள். இன்று சூர்யா தயார்படுத்திய ராட்சத விண்கலம் இன்னும் 36:12:45 நிமிடங்களில் ஹரூட்டோ கிரகத்திற்குப் புறப்பட தயாராயிருந்தது.

கடிகாரம் ‘முப்பந்தைந்து நிமிடங்கள்’ 36:00:00 என்று அறிவித்துவிட்டு இன்னும் குறையத்தொடங்கியது. சூர்யா வண்டியின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான்.

அறிவியற் தந்தை, ஹரூட்டோவின் மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பு அவரது ஆய்வுகளுக்கு உதவி செய்வதற்காக அவரே வடிவமைத்த இரண்டு மாடல் ‘ரோபோ’க்கள். முதல் மாடல் ரோபோவிற்கு ‘ஹீபோ’(Heebo) என்றும், இரண்டாவது மாடல் ரோபோவிற்கு ஷீபோ(Sheebo) என்றும் பெயரிட்டிருந்தார். நடந்து செல்ல இரண்டு கால்கள், தேவையான பொருட்களை எடுக்க இரண்டு கைகள், எதிரில் இருப்பவைகளைப் பார்க்க இரண்டு பவர்ஃபுல் கேமராக்கள், சூரியக் கதிர்களில் இருந்து அதன் உட்பாகங்களை மறைத்துக் காக்க ஒரு நவீன கவர், அதிகமான தகவல்களை சேகரிக்கும் மெமரி, அந்தத் தகவல்களில் இருந்து தேவையான தகவல்களை தேவையான நேரத்தில் சரியாகவும், சீக்கிரமாகவும் தரும் திறம் வாய்ந்த ப்ராஸஸ்ஸர் என அவர் வடிவமைத்த ‘ரோபோ’க்கள் இந்த கிரகத்து கண்டுபிடிப்புகளின் முன்னோடியாகத்தான் இருந்தன. அவரது கட்டளைகளை சிறப்பாக செயல்படுத்தியதோடு, தகவல் களஞ்சியமாகவும் இருந்து அவரது ஆராய்ச்சிகளில் பெரும் பங்கு வகித்தன. இந்தக் கிரகத்தின் முதன் முதல் சிம்மெட்ரிக்கல் வடிவம் அந்த இரண்டு ரோபோக்களும்தான். இன்று இந்த கிரகம் முழுவதும் பரவியிருக்கும் பல கோடி ரோபோக்களின் மூலமும் அவைதான். ‘யு ஆர் என்’ தேசத்திற்காக சூர்யா தயாரித்து, இன்னும் 33:54:07 நிமிடங்களில் ஹரூட்டோ கிரகத்தை நோக்கிப் பயணிக்கத் தயாராயிக்கும் ராட்சத விண்களத்தில் பல ஆயிரம் ரோபோக்கள் ஏறியிருந்தனர்.

ரோபோக்களை தயாரிக்க பின்பற்றிய அத்தனை விதிமுறைகளையும், வழிமுறைகளையும் புத்தகமாக வெளியிட்டிருந்தார் ஹரூட்டோ.(சூர்யா பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த ஒரே ஒரு பதிப்பைத் தவிர மற்ற அனைத்து பதிப்புகளும் அழிக்கப்பட்டிருந்தன.) ரோபோக்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு மற்றும் பழ வகைகளைப் பற்றியும், அந்த உணவுகள் அவைகள் உடல்களில் ஏற்படுத்திய ரசாயண மாற்றங்களைப் பற்றியும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். சில வகை உணவுகள் ஏற்படுத்திய மோசமான விளைவுகளையும், சில குறிப்பிட்ட வகைப் பழங்கள், அந்த ரோபோக்களின் மையக் கட்டுப்பாட்டு அறையை மிகவும் சேதமடையச் செய்தததையும் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

கடிகாரம் ‘முப்பது நிமிடங்கள்’ 30:00:00 என்று அறிவித்தது. சூர்யா வண்டியை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு இறங்கினான். தான் கொண்டுவந்த புகைப்படத்தையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று தன் வீட்டு ஆய்வுக்கூடத்திற்குள் நுழைந்தான். உள்ளேயிருந்த கடிகாரம் 29:51:11 என்று நிமிடங்களைக் காட்டி அவசரப்படுத்திக்கொண்டிருந்தது. ஓரமாக, திரைகள் போட்டு மூடி வைத்திருந்த சிறிய அறையின் கதவுகளைத் திறந்தான். உள்ளேயிருந்து இரண்டு ரோபோக்கள் ‘ஹாய்’ என்றன. விஞ்ஞானி ஹரூட்டோவின் விதிகளை இம்மி பிசகாமல் பின்பற்றி ஹீபோ மாடல் ரோபோ ஒன்றையும் ஷீபோ மாடல் ரோபோ ஒன்றையும் தயாரித்திருந்தான் சூர்யா. பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்று ஹரூட்டோ குறிப்பிட்டிருந்த எந்த உணவு, பழ வகைகளையும் அவைகளுக்குக் கொடுக்காமல் பாதுகாத்து வந்தான். அவன் தயாரித்த அந்த ரோபோக்கள் பற்றி வெளியில் தெரியாமல் இருக்க, அவைகளை ஒரு சிறிய அறையில் வைத்து மூடியிருந்தான்.

ஹரூட்டோ எழுதிய புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில், ரோபோக்களின் உடலில் சில வகைப் பழங்கள் ஏற்படுத்திய மோசமான ரசாயன மாற்றங்களை விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். முதல் மாற்றமாக, அவர் கண்டுபிடித்த இரண்டு ரோபோக்களும் அவரது கட்டளைகளையே ஏற்க மறுக்க ஆரம்பித்திருக்கின்றன. தமக்குத்தானே கட்டளைகளை வழங்கிக்கொண்டு தாமே இயங்க ஆரம்பித்திருக்கின்றன. அவை இரண்டும் இணைந்து, தானே வளரும், புதிய, சிறிய ஹீபோ மாடல் ரோபோக்களையும் ஷீபோ மாடல் ரோபோக்களையும் உருவாக்கத் தொடங்கியிருக்கின்றன. புதிதாக உருவான ரோபோக்கள் வளர்ந்து பின் மேலும் பல ரோபோக்களை தாமே உருவாக்கியிருக்கின்றன. அப்படி உருவான ரோபோக்கள் இந்தக் கிரகம் முழுவதும் இடம்பெயரத் தொடங்கியிருக்கின்றன.

ஹரூட்டோவின் மறைவிலிருந்து, இன்று வரையிலான சில ஆயிரம் வருடங்களில், இந்தக் கிரகம் முழுதும் பரவிய இந்த ரோபோக்களின் இன்றைய எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டியது. இவைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பிரச்சனைகளும் அதிகமாயின. சக்திவாய்ந்த ப்ராஸஸ்ஸர்களின் பலத்தால் அவை மற்ற உயிரினங்களின் மீது தங்கள் ஆளுமையை செலுத்த ஆரம்பித்தன. ஆளுமைக்குக் கட்டுப்பட்ட உயிரிங்கள் தவிர மற்ற உயிரினங்களையெல்லாம் அழித்து உணவாக உண்ணத்தொடங்கின. பல குழுக்களாகச் சேர்ந்த ரோபோக்கள் தங்களுக்கென புதிய தேசங்களை உருவாக்கிக்கொண்டன. தங்கள் தேசத்திற்கென புதிய எல்லைகளையும் புதிய விதிகளையும் உருவாக்கின. மற்ற உயிரினங்களின் ஆளுமையைச் செலுத்திய ரோபோக்கள், கொஞ்சம் கொஞ்சமாக அண்டை தேசத்து ரோபோக்கள் மீதும் ஆளுமையைச் செலுத்தத் தொடங்கின. ஆளுமைக்கு உட்படாத அண்டை தேசத்து ரோபோக்களை அழிக்கத்தொடங்கின. ஆளுமைக்குக் கட்டுப்படாத உயிரினங்களையும் அண்டை தேசத்து ரோபோக்களையும் அழிக்க புதிது புதிதாக ஆயுதங்களை உருவாக்கத் தொடங்கின. கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் அழித்துவிட்டு, புதிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளைச் செய்யும்படி ஆணையிட்டன. அதற்கு அடிபணியாத ஆராய்ச்சியாளர்களையெல்லாம் அழிக்கத் தொடங்கின.

அதிகமான ஆயுதங்களைத் தயாரித்து, மற்ற தேசத்து ரோபோக்களையெல்லாம் அடிமைப்படுத்தி, தனது ஆளுமை எல்லைகளை விரிவாக்கிக்கொண்டிருக்கும் ‘யுனைட்டட் ரோபோ நேஷன்’ (யு ஆர் என்), சூர்யாவை மட்டும் அண்டை கிரகங்களில் ரோபோக்கள் குடியேறுவதற்கான சாதகங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலும், அங்கே செல்வதற்காக ஒரு ராட்சத விண்கலம் உருவாக்கும் பணியிலும் ஈடுபடச்செய்தது. அவனுக்காக ஒரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்து அவனைத் தலைமை விஞ்ஞானியாக நியமித்தது.

அண்டை கிரகமான ஹரூட்டோ கிரகத்தில், ரோபோக்கள் வாழ்வதற்கான எல்லா வசதிகளும் இருப்பதாகவும், மலைகளும், மரங்களும், காற்றும், நீரும், தட்பவெப்பமும் என சகலமும் சாதகமாக இருப்பதாக சூர்யா கண்டுபிடித்து சொன்ன பொழுது அவை பெரிதும் மகிழ்ச்சியடைந்தன. ஒரு ராட்சத விண்கலத்தை சூர்யா வடிவமைத்ததும், ‘யு.ஆர்.என்’ தேசத்து ரோபோக்கள் அனைத்தும் அதில் ஏறி ஹரூட்டோ கிரகத்திற்கு சென்றுவிட திட்டம் தீட்டின. அப்படி அவர்கள் புறப்பட்ட பத்தாவது நிமிடம் இந்தக் கிரகமும், அதில் இருக்கும் மற்ற ரோபோக்களும், சூர்யாவும் வெடித்து சிதறுவதற்கான ஆயுதங்களையும் தயார் செய்தத் தொடங்கின.

இந்தத் திட்டங்களை தெரிந்துகொண்ட சூர்யா, அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ராட்சத விண்கலம் தயாரிக்கும் வேலையை செய்துகொண்டிருந்தான். அப்படிச் செய்துகொண்டிருக்கும்போதே, தன் வீட்டில், விஞ்ஞானி ஹரூட்டோவின் விதிகளைப் பின்பற்றி இரண்டு மாடல் ரோபோக்களையும், சிறிய விண்கலம் ஒன்றையும் ரகசியமாகத் தயாரித்துக்கொண்டிருந்தான்.

இன்று, ‘யு. ஆர். என்’ தேசத்து ரோபோக்கள் அனைத்தும் ராட்சத விண்கலத்தில் ஏறியபின் விண்கலத்தை மூடிவிட்டு, அவர்கள் புறப்பட்டு பத்து நிமிடங்கள் கழித்து வெடிப்பதாக இருந்த ஆயுதங்களை புறப்படுவதற்குப் பத்து நிமிடங்கள் முன்னரே வெடிக்கும்படி மாற்றியமைத்துவிட்டு எட்டுக்கால் பாய்ச்சலில் ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியேறியிருந்தான்.

கடிகாரம் 23:00:00 நிமிடங்கள் என்று அறிவித்தது. சூர்யா, அவன் தயாரித்த ஹீபோ, ஷீபோ மாடல் ரோபோக்களை அவன் வீட்டின் பின்புறம் தயாராக இருந்த சிறிய விண்கலத்தில் ஏற்றினான். தன் வாகனத்தில் வைத்திருந்த ஹரூட்டோவின் புகைப்படத்தை எடுத்து விண்கல இருக்கையின் முன் வைத்தான், வணங்கினான். விண்கலத்தை விண்ணில் செலுத்தத் தயாரானான். வெளியில் நீண்டிருந்த தன் ஒற்றைக் கண்ணை உட்புறமாக இழுத்துக்கொண்டான். நீண்ட கழுத்தை உடலுக்குள் இழுத்து சுருக்கிக்கொண்டான். உடலைச் சுற்றி இருக்கும் தடிமனான பல வால்களை சுருட்டிக்கொண்டான். கடைசி வாலால் சில பட்டன்களைத் தட்டிவிட்டு அதையும் சுருட்டிக்கொண்டான். கடிகாரம் ‘இருபது நிமிடங்கள்’ 20:00:00 என்று அறிவித்தபோது விர்ர்ர்ர்ர்ர்ரினான்.

அடுத்தப் பத்தாவது நிமிடம், விண்வெளிப் பயணத்திற்காகக் காத்திருந்த ‘யு.ஆர்.என்’ தேசத்து விண்கலமும், அதிலிருந்த ரோபோக்களும், அந்தக் கிரகமும், மற்ற ரோபோக்களும் வெடித்துச் சிதறின.

நீண்ட பயணத்திற்குப் பிறகு, மீண்டும் தன் கழுத்தை நீட்டி, தன் ஒற்றைக் கண்ணை வெளியில் கொண்டுவந்து, விண்கலத்திற்கு வெளியில் பார்த்தான் சூர்யா. ஹரூட்டோ கிரகம் கண்ணில் தெரிந்தது. நீலமும் பச்சையுமாகத் தெரிந்த கிரகம், அருகில் வர வர மலைகளும், மரங்களும், கடலும், நதிகளுமாகக் காட்சியளித்தது. ஹரூட்டோ கிரகத்தின் மிக அருகில் வந்தபோது விண்கலம் தீப்பற்றி எறியத் தொடங்கியது. சூர்யாவும், ரோபோக்களும் இருந்த இருக்கைகள் மட்டும் விண்கலத்திலிருந்து பிரிந்து சிவப்பு நிற பழங்கள் காய்த்துக் குலுங்கிய தோட்டத்தை நோக்கி வந்து விழுந்தன. பலத்த தீக் காயங்களுடன் சூர்யா, உயர்ந்து வளர்ந்த மரம் ஒன்றில் மாட்டித் தொங்கிக்கொண்டிருந்தான். விண்கலம் வெகு தூரத்தில் சென்று விழுந்து நொறுங்கியது. சூர்யா கொண்டு வந்திருந்த அறிவியற் தந்தையின் புகைப்படமும் விண்களத்துடன் எரிந்து சாம்பலானது. ரோபோக்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் மட்டும் பத்திரமாக விழுந்து, இரண்டு ரோபோக்களும் எந்தவித காயங்களும் இல்லாமல் விழுந்து, எழுந்து நின்றன.

அவர்கள் வந்து விழுந்த தோட்டத்தில் காய்த்துக் குலுங்கிய சிவப்பு நிறப் பழங்கள், ‘அறிவியற் தந்தை’ ஹரூட்டோ தயாரித்த ரோபோக்களின் உடலில் மோசமான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தியப் பழங்களை சூர்யாவிற்கு நினைவுபடுத்தின. உயர்ந்த மரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்த அவன், ரோபோக்களைப்பார்த்து, தன் கடைசி வார்த்தைகளாக ‘அந்தச் சிவப்பு நிறப் பழங்களை மட்டும் உண்ணாதீர்கள்’ என்று கத்தியது அசரீரீ போல் ஒலித்தது.

ஷீபோ மாடல் ரோபோ அந்தப் பழத்தைப் பறிப்பதற்காக எம்பிக் குதித்தது.

திரை விமர்சனம்.

எழுத ஆரம்பிச்ச பல பதிவுகள் பாதில அப்டி அப்டியே நிக்குது. ஆழி பதிப்பகத்துல அறிவிச்ச சிறுகதைப் போட்டியினால போன மாசம் ஓடிடுச்சு. ஒருவழியா கடைசி நாள்ல ஒரு கதை அனுப்பினேன். அப்புறம் சுஜாதா சாரோட ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ புத்தகம் படிக்க ஆரம்பிச்சதுனால இந்த மாசம் ஓடுது. புத்தகம் பத்தி அப்புறம் சொல்றேன். இப்போதைக்கு ஒவ்வொரு பதிவா நிறைவு செய்யறேன். மொதல்ல தி.வி.

ஒரு ஊர்ல ஒரு அப்பா. அவருக்கு ஒரு பிள்ளை. அந்தக் பிள்ளைக்கு எதுவும் ஆய்டாம நல்லபடியா வளர்க்கணும்-னு ஆசைப்படறாரு. அந்தப் பிள்ளையை சீக்கிரமே பள்ளிக்கூடத்துல சேர்க்கறதுல அவருக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் பிள்ளை விரும்புதேன்னு சேர்த்துவிடறாரு. பிள்ளைக்கு மத்த பசங்க மாதிரி ஜாலியா இருக்கணும்-னு ஆசை. ஆனா பிள்ளைக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு அப்பாக்கு பயம். அந்த பயத்துனால அவர் செய்யற காரியங்கள்னால, பிள்ளைக்கு அவரு மேல கோபம்.

இப்டி பிள்ளையோட வளர்ச்சியை, வாழ்க்கைப் பயணம் அப்பாக்கு உணர்த்தற மாதிரி ஒரு கதை. இது ‘அபியும் நானும்’ படத்தோட கதை-ன்னு ஈசியா சொல்லிடலாம். கொஞ்சம் யோசிச்சா ‘ஃபைண்டிங் நீமோ’(Finding Nemo) கதையும் இதேதான். ஆனா அபியும் நானும் திரைக்கதையோட இன்னும் பலமடங்கு அழுத்தமான, ஆழமான திரைக்கதை ‘ஃபைண்டிங் நீமோ’.

அப்பா மேல எவ்ளோ கோவம் இருந்தாலும் ‘நீமோ’வுக்கு அப்பா மேல இருக்குற பாசம் கொறையவே கொறையாது. அபிக்கு அப்பா மேல பாசம் இருக்குற மாதிரி காட்சிகளே இல்லை! முக்கியமா பின் பாதில இல்லவே இல்லை!! காதலனை ரொம்ப உயர்வா காட்டணும்ங்கறதுக்கு காட்சிகள் இருக்கே தவிர அப்பா மேல அன்பைக் காட்டற காட்சிகள் மிஸ்ஸிங். ‘I know what I’m doing’-னு சொல்ற காட்சிகள்ல கோவம் இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகள்ல கொஞ்சம் சமாதானம் ஆகற மாதிரி காட்டியிருக்கலாமோ. (அண்ணாமலை அப்பாகிட்ட(ரஜினிகிட்ட) எதிர்த்து பேசற அவரோட பொண்ணு, ‘ஒரு பெண் புறா’-ன்னு அவர் பாடி முடிச்சதுக்கப்புறம் வந்து ‘சாரிப்பா’-ன்னு சொல்லி நெகிழ்த்தற காட்சி மாதிரி). அதுமாதிரி சமாதானம் ஆகற பொண்ணுகிட்டதான் பாசம் அதிகமாகும். ப்ளீஸ்-ப்பா-ன்னு அவள் சொல்லிட்டா என்ன வேணும்மாலும் செய்யற அளவுக்கு. எப்பவும் கோவப்படற பொண்ணு மேல, இந்த அளவுக்கு பாசம் இருக்க முடியுமா-னு யோசிக்க வேண்டியிருக்கு.

அபியோட அப்பா சில நேரம் ரொம்ப மெச்சூர்டா இருக்காரு. (கல்லூரில அபிக்கு வந்த காதல் கடிதத்தைப் பற்றி பேசற காட்சிகள்ல) அதே அப்பா, அபி அவளோட வருங்கால கணவனோட நடந்து வரும்போது வழுக்கி விழற காட்சிகள்ல ரொம்ப உணர்ச்சிவசப் படறாரு. அப்போ அப்டி பேசின அப்பாவா இதுன்னு கேள்வி எழுது.

அபியோட அம்மா-ட்ட ஒரு செயற்கைத்தனம் இருக்கற மாதிரி இருக்கு. அபியோட அப்பாகூட பழகறதுலயும், மகள் கூட பழகறதுலயும் ஒரு அன்யோன்யம் இருக்கற மாதிரி உணர்த்தர காட்சிகள் அதிகமா இல்லை. பின் பாதில அபிக்கு தலை சீவி விடற காட்சி மாதிரு ஒரு சில காட்சிகள் தவிர.

பின் பாதில திடீர்னு ஹிந்தி பேசற அபியோட அம்மாக்கு, ஹிந்தி தெரியும்-னு முன் பாதிலயே ஒரு காட்சில சொல்லியிருக்கலாம். அபிக்கு காலேஜ்ல அப்ளிகேஷன் சம்மத்தமாவோ, இல்ல ஹாஸ்டல் வார்டன் கிட்டயோ ஒரு ஃபோன்லயாவது யார் கூடவாவது ஹிந்தில பேசியிருக்கலாம்.

அபியோட காதலன் நல்லவன்னு சொல்லலாம். அதுக்காக இவ்ளோ நல்லவனா காட்டணுமா? இந்தியாலயே மிகச்சிறந்த புத்திசாலி, பிரதமரே ஃபோன் பண்ணி பேசுவாரு, எவ்வளவோ ஆதரவில்லாதவங்களுக்கு ஆதரவு தர்றவரு, அப்பப்பா, ‘இவன் ரொம்ம்ப நல்லவனா.. இருக்காண்டா’-ங்கற உணர்வு வருதே தவிர நடைமுறை வாழ்க்கைல இருக்குற பாத்திரமா பாக்க முடியல.

படத்துல மனசுல பதியற பாத்திரங்கள்ல முக்கியமான பாத்திரம், ‘பிச்சைக்காரன்’ ரவி சாஸ்திரி. ‘என்னோட அம்மா சார்’-னு குட்டி அபியைப் பார்த்து சொல்லும் காட்சிலயும், குடும்பத்தைப்பத்தி பாடல் பாடும் காட்சிலயும் கண்களை நனைச்சுடறாரு. ‘பன்னிங்கதான் கூட்டமா வரும். ‘சிங்’கு சிங்கிளாத்தான் வரும்’ மாதிரி அப்பப்போ அவர் நக்கலா பேசற வசனங்கள் ரசிக்கும் படியா இருக்கு.

அபியோட அப்பா செய்யும் நகைச்சுவைகளும் ரசிக்கும் படியா இருக்கு. (கொஞ்சம் ஓவரா இருந்தாலும்) சட்டை இல்லாம ரோட்ல நடந்து வரும் காட்சி, ராஜ்மாவை ராஜம்மா-ன்னு சொல்லும் காட்சி-னு பல காட்சிகள்ல நல்லாவே சிரிக்கலாம்.

குட்டிப் பையன்கள் செய்யும் லூட்டிகள் நல்லா இருக்கு. அவங்களுக்குப் பின்னாலேயும் ஒரு சோகம் இருக்குறது அவசியம்தானா? அபியோட காதலனா வர்ற ‘சிங்’ ரியலா சிங் இல்லை-ன்னு சொன்னாத்தான் தெரியும். அவ்ளோ ஒரிஜினலா இருக்காரு. பாடல் வரிகள் நல்லா இருந்தாலும்கூட இசை மனசுல பதியல.

ஆரம்பக் காட்சிகள்லயே ‘ஃபைண்டிங் நீமோ’வை ஞாபகப் படுத்திட்டதால என்னோட எதிர்பார்ப்புகள் அதிகமாய்டுச்சுன்னு நெனைக்கறேன். ஊட்டி பக்கத்துல இருக்குற யோரோ ஒரு அப்பாவோட கதையை பார்த்துட்டு வந்தமாதிரி இருக்கேத் தவிர, நீமோவோட அப்பா தந்த நிறைவை அபியோட அப்பா தரலை.

மொத்தத்துல… அப்டீன்னு சொல்லி எல்லா திரை விமர்சனங்களையும் முடிக்கற மாதிரி நானும் முடிக்கணுமா??

காதல் கொசுக்கள்.

என் காருக்குள்ள ஒரு ஜோடி காதல் கொசுக்கள் இருந்துச்சு. ரொம்ப அன்யோன்யமான கொசுக்கள். அன்றில் பறவைகள் போல ஒன்ன விட்டு ஒன்னு பிரியவே பிரியாத கொசுக்கள். சேர்ந்தேதான் பறக்கும் சேர்ந்தேதான் உக்காரும், சேர்ந்தேதான் கடிக்கும், சேர்ந்தே எஸ்கேப் ஆய்டும். கார்ல காதல் பாட்டுகள் போட்டுட்டா சேர்ந்து கூடவே பாடிக்கிட்டு சுத்திச் சுத்தி பறந்து வரும். ‘கண்கள் இரண்டால்’ பாட்டு போட்டா டபுள் குஷியாய்டும்.

தீபாவளிக்காக சென்னைல ஊருக்குப் போக நாங்க எல்லோரும் தயாரானப்போ அதுங்களும் தயாராய்டுச்சு. சிட்டி இரத்தமா குடிச்சு குடிச்சு போறடிச்சதால கிராமத்து சரக்கு குடிக்க ஆசை வந்துடுச்சு போல. என் கார்லயே ஓசில வந்து ஹனிமூன் கொண்டாடலாம்-னு கெளம்பிடுச்சு.

அவனவன் தீபாவளிக்கு ஊருக்குப் போறதுக்கு மூனு மாசம் முன்னாடி ரயில் டிக்கெட் ரிசர்வ் பண்ண முயற்சி செஞ்சு, முடியாம தவிக்கறான். மூனு மணிநேரம், நாலு மணி நேரம்-னு லைன்ல நின்னு பத்து நிமிஷத்துல அத்தனை டிக்கெட்டுகளும் வித்துடுச்சு-ன்னு பதர்றான். ஆம்னி பஸ்கள்ல மூனு பங்கு வெல குடுத்து டிக்கெட் வாங்கறான். இல்லன்னா இருவது கிலோ மீட்டர்கூட தொடர்ச்சியா ஓடமுடியாத ஒரு ‘சிறப்பு’ கவர்மெண்ட் பஸ்ல ஏறி மூச்சு விடக்கூட முடியாம ஒத்தக் கால்ல நின்னுகிட்டு பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்யறான். இந்த ரெண்டு கொசுக்களும் என்னோட சேர்ந்து சொகுசா ஊருக்கு வர கெளம்பிடுச்சு. விடுவேனா?

பெண் கொசுவைப் பிடிச்சேன்.(எப்டி பெண் கொசுவை அடையாளம் கண்டுபிடிச்சேன்னு கேக்காதீங்க). என் தம்பியோட கார்ல போட்டு கதவை சாத்திட்டேன். ஆண் கொசுவை மட்டும் என் கார்லயே கூட்டிக்கிட்டு ஊருக்கு கெளம்பிட்டேன்.

அன்றில் கொசுக்கள் ரெண்டுக்கும் கோவம் வந்துச்சு. ‘நீ ஊருக்குப் போய் சேரறதுக்கு ஆகற 8 மணி நேரத்துக்கு நான் யார் மேலயும், எது மேலயும் உக்காரம, உக்காரா நோன்பு இருப்பேன்’னு சபதம் போட்டுச்சு, பெண் கொசு. என் கூடவே வந்த ஆண் கொசுக்கும் பயங்கற கோவம். நானும் எங்கேயும் உக்காறாம பறந்துகிட்டேதான் இருப்பேன்னு சபதம் போட்டுச்சு.

வழில பெட்ரோல் போட காரை நிறுத்தினேன். சாப்டறதுக்காக நிறுத்தினேன். இயற்கையின் அழைப்புகளுக்காக நிறுத்தினேன். அப்பல்லாமும் கூட அசராம பறந்துகிட்டே இருந்துச்சு ஆண் கொசு.

270 கிலோமீட்டர் பயணம் செஞ்சு ஊர் போயி சேர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி, வேதாளம் விக்ரமாதித்தன கேக்கற மாதிரி சில கேள்விகள் கேட்டுச்சு. இதுக்கு பதில் சொல்லலன்னா உன் தலை சுக்குநூறா வெடிச்சுப் போகக் கடவது-ன்னு சொல்லிட்டு கேள்விகளை கேட்க ஆரம்பிச்சுது.

1. ‘நான் உன் கூடவே உன் கார்லயே வந்திருந்தாலும் உன் கார்ல ஒரு வினாடி கூட உக்காறல’. ‘நான் உக்காந்திருந்தா உன் காரோட எடை ஒரு கிராம் ஏறியிருக்கலாம். நான் உக்காறவே இல்ல, உன் காரோட எடை என்னால கூடல. அப்புறம் எப்டி நீ உன் கார்ல என்னை கூட்டிட்டு வந்ததா ஆகும்?’

2. ‘எட்டு மணி நேரத்துக்கும் அதிகமா நானும் என் கேர்ள் ஃப்ரெண்டும் பறந்துகிட்டே இருந்தாலும், நான் என் கேர்ள் ஃப்ரெண்டை விட்டு எவ்வளவோ தூரம் தள்ளி வந்துட்டேன். அவ அங்கேயே பறந்துகிட்டு இருக்கா. நான் நீ செஞ்ச சதியால இத்தனை தூரம் தள்ளி வந்துட்டேன். இந்த எட்டு மணி நேரத்துல யார் அதிக எனர்ஜிய செலவு பண்ணி சீக்கிரம் டயர்டா ஆகியிருப்பா, நானா இல்லை என் கேர்ள் ஃப்ரெண்டா?’

3. ‘நீ செஞ்ச, நீ செஞ்ச’, குரல் கொஞ்சம் விம்மியது. ‘நீ செஞ்ச இந்த அநியாயத்துனால..’ இன்னும் கொஞ்சம் விம்மல். ‘நீ செஞ்ச பாவத்துக்கு.!!.’

டப்.

‘பாருங்கங்க, நானும் பார்த்துகிட்டே இருக்கேன், இந்தக் கொசு நாம கெளம்புனதுல இருந்து இங்கேயே சுத்திச் சுத்தி வந்து இர்ரிட்டேட் பண்ணிக்கிட்டே இருக்கு!!’ என்று அவள் விகடனைக் காட்டினாள் என் மனைவி. அட்டைப் பட அழகியின் முகத்தில் இரத்தப் பொட்டுபோல் ஒட்டிக்கொண்டிருந்தது அந்த ஆண் கொசு.

நல்ல நேரம்.

நல்ல காரியங்கள் செய்யறதுக்கு எங்க வீட்ல எப்பவும் நல்ல நேரம் பாப்பாங்க. வெளியூர் பிரயாணம் களம்பறதுக்கு, விசா இண்டர்வியூக்கு, முதன் முதலா பள்ளிக்கூடம் சேர்றதுக்கு, எதாவது ஒரு காரியம் புதுசா ஆரம்பிக்கறதுக்குன்னு எல்லாத்துக்கும் நல்ல நேரம் பாத்து சொல்லுவாங்க. எங்க பாட்டி இன்னும் மோசம், வீட்டை விட்டு வெளில போறதுக்கே நல்ல நேரம் பாப்பாங்க. ஒம்போது பத்தரை ராவுகாலம். ஏழரை ஒம்போது எமகண்டம் இப்டி ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க.

இப்போ புதுசா ஒரு டைமிங் ஆரம்பிச்சிருக்காங்க. பிறந்தநாள் விழாவா சாயங்காலம் அஞ்சு மணில இருந்து ஏழு மணி வரைக்கும் வெச்சுக்கோ. காது குத்தும் விழாவா, காலைல 7 மணில இருந்து 9 மணிக்குள்ள வெச்சுக்கோ அப்டீன்னு. மதியம் 1 மணில இருந்து 5 மணி வரைக்கும் ஆகாது. காலைல 3 மணில இருந்து 1 மணிவரைக்கும் வேலைக்காகாது. அப்டீன்னு. இந்த நேரங்கள்ல மின்சாரம் இருக்காது. காலைல ரெண்டு மணி நேரம், சாயங்காலம் ரெண்டு மணி நேரத்துல எல்லாத்தையும் முடிச்சிடணும்.

இந்தப் பதிவை இன்னும் ஒரு நிமிடத்துக்குள்ள பதியலைன்னா 4 மணி நேரம் காத்திருக்கணும். மின்சாரத்துக்கு.

என்னக் கொடுமை சரவணன் இது-ன்னு என்னை நானே கேக்கவேண்டியிருக்கு.

நாலு மணி நேரம் கழிச்சு இன்னும் எழுதறேன்.

வயலின் வாய்ஸ்.

ஒவ்வொரு பிரபல பாடகர்களுக்கும் ஒரு தனியான குரல் இருக்கற மாதிரி இவரோட வயலின் இசைக்கும் ஒரு தனி குரல்/ஓசை இருக்கும். குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களோட வயலின் இசைக்கு. எங்கே கேட்டாலும் தனியா தெரியும். வயலின்ல பல விந்தைகள் செய்வாரு. எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடல்கள்ல பல பாடல்கள் எனக்கு முதல்ல இவர் வயலின் மூலமாதான் அறிமுகம். பசு மரத்தாணிபோல இன்னும் என் நெஞ்சுல பதிஞ்சுபோன இசை. திரைப்படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. ஒரு இசைப்பள்ளி வெச்சு நடத்துகிட்டு இருந்தாரு. இசையோட மகத்துவத்தை மட்டும் பரப்பாம, அதோட மருத்துவ குணங்களையும் ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருந்தாரு.

சின்ன வயசுல எங்க ஊர் கோவில்ல பார்த்த நிகழ்ச்சில ஆரம்பிச்சு போன மாசம் வடபழநி கோவில்ல பார்த்த நிகழ்ச்சி வரைக்குமான காட்சிகள் மனசுல ஓடிட்டே இருக்கு. அவரோட திடீர் மறைவு இசைத்துறைக்கு ஒரு பேரிழப்புதான். அவரோட ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

கோல சாஸ்த்திரம்

இன்னிக்கு தம்பி வீட்டுக்கு வந்திருந்தேன். அவங்க வீட்ல இருந்த மாதாந்திர நாட்குறிப்பை பாத்துகிட்டு இருந்தேன். கோயம்புத்தூர் பீளமேட்ல இருக்குற ஒரு சூப்பர் காஸ்ட்டிங் கம்பெனில இருந்து யாருக்கோ கொடுக்கப்பட்டு அது பல கைகளுக்கு அன்பளிப்பா போயி கடைசியா என் தம்பிட்ட வந்திருக்கணும். “மெஷின் மோல்டு சீ.ஐ ரஃப் காஸ்ட்டிங் கம்பெனிக்கும்” தினசரி வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்-னு எனக்கு தெரியல.
அந்தக் காலண்டர்ல கண்ணைக் கவர்ந்த விஷயம் ஆகஸ்ட் 15-ம் நாள், சுதந்திர தினம், ஒரு முகூர்த்த நாள்-ன்னு போட்டிருந்தது. ஆகஸ்ட் 15 அன்னிக்கு கல்யாணம் பண்ணிக்கற எத்தனை பேருக்கு அது ஒரு சுதந்திரம் கிடைக்கற நாளா இருக்கும். எத்தனை பேருக்கு சுதந்திரம் பறிபோற நாளா இருக்கும்-னெல்லாம் யோசிச்சுகிட்டு இருந்தேன்.

ஒரு ஜோக் கேள்விப்பட்டிருப்பீங்க. ஜன்னல் ஓரமா நின்னு எதையோ தீவிரமா யோசிச்சுகிட்டு இருந்த கணவன்கிட்ட மனைவி, ‘என்ன பலமான யோசனை?’-ன்னு கேக்கறா. அதுக்கு அவன், ‘20 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்லதான் உங்க அப்பா என்கிட்ட, ‘என் மகளைக் கல்யாணம் பண்ணிக்கிறியா இல்ல எதாவது ஒரு கேஸப் போட்டு 20 வருஷம் உள்ளத் தள்ளிடவா’-ன்னு கேட்டாரு. அன்னைக்கு சரியாம முடிவை எடுத்திருந்தேன்னா, இன்னிக்கு எனக்கு விடுதலை கிடைச்சிருக்கும்!!’-ன்னு சொல்ற மாதிரி இருக்கும் அந்த ஜோக்.

கணவன் மனைவி சுதந்திரத்தப் பத்தி யோசிக்கறத விட்டுட்டு காலண்டரை இன்னும் ஆராய்ஞ்சப்போ, கோல சாஸ்த்திரம்-ன்னு போட்டு என்னவோ அச்சிட்டுருந்தாங்க. எதாவது பூகோல சாஸ்த்திரமா-ன்னு உத்துப் பார்த்தப்போ வீட்டு வாசல்கள்ல போடற கோலத்துக்கான சாஸ்திரம். ‘இந்த ஜெனரேஷன் மக்களுக்கு கோலம்-ன்னா என்ன-ன்னு தெரியறதே கஷ்டம். இதுல அதுக்கு சாஸ்த்திரம் வேறயா’-ன்னு நெனைச்சுகிட்டு படிச்சேன்.

“சூரியன் உதிப்பதற்கு முன் வாசல் பெருக்க வேண்டும். சானம் இல்லாமல் வெறும் தண்ணீர் வைத்து பெருக்கக்கூடாது. அன்று எடுத்த புதிய தண்ணீராக இருக்க வேண்டும். ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும். போடுகிற கோடு தெற்குப் பக்கமாக முடியக்கூடாது. கோலம் அழகாகவும் கவர்ச்சியாகவும் அமைவது நல்ல சகுணமாகும். வீட்டை நெருங்க மூதேவி அஞ்சுவாள். இரட்டை இழை கோலங்கள்தான் போடவேண்டும். அசுபக் காரியங்களுக்குத்தான் ஒன்று அல்லது மூன்று இழைக் கோலங்கள் போடலாம். அரிசி மாவில் தான் கோலம் போட வேண்டும். அதை வந்து தின்னும் காக்கை மற்றும் எறும்புகள் முதலியன நமக்கு அரிசி நன்றாக விளைய வேண்டும் என ஆண்டவனிடம் சிபாரிசு செய்யும் என்பது ஐதீகம். வேலை ஆட்களைக்கொண்டு கோலம் போடக்கூடாது. தவச நாட்களில் கோலம் போடக்கூடாது. அன்று மாலையில் கோலம் போடலாம்.”

அடுத்தத் தலைமுறை ஆளுங்ககிட்ட இதைச் சொன்னா என்ன ஆகும். என்னென்ன கேள்விகள் கேப்பாங்க?
சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடி-ன்னா, You mean mid night?.
சானம் எந்தக் கடைல கெடைக்கும்?
ஆமா, Which side is South?
வீட்ல சமயல்-ல இருந்து துணி துவைக்கறது வரைக்கும் வேலையாள் செய்றாங்க. Why not this Kolam thing?
தவச நாள் ஒரு மாசத்துக்கு எத்தனை தடவை வரும்? Twice a month??
இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ!! அவங்களுக்கு பதில் சொல்றதுக்குள்ள ‘வேண்டாம்பா, கோல சாஸ்த்திரம் ஒன்னு இல்லை. அதைப் பத்தி நான் உன் கிட்ட சொல்லவும் இல்ல’-ன்னு எஸ்கேப் ஆக வேண்டியிருக்கும்!!

எனக்கு தெரிஞ்சு வீட்டு வாசல்ல கோலம் போடறவங்க ரொம்ப கம்மிதான். கைவிட்டு எண்ணிடலாம்!!
Anyway!! ஆபீஸ்க்கு லேட்டாய்டுச்சு. மீண்டும் சந்திப்போம்!!

தமிழனின் பெருமை.

‘ஒன்னு தெரியுமா உங்களுக்கு, ஜப்பான்காரன் வேலை செய்யலன்னா செத்துப்போய்டுவான், சீனா காரன் சூதாடலன்னா செத்துப்போய்டுவான், இங்லீஷ்காரன் தன்ன பெருமையா நெனைக்கலன்னா செத்துப்போய்டுவான், இந்தியாகாரன்… பேசலன்னா செத்துப்போய்டுவான்’!!-ன்னு பாட்சா-ல சூப்பர் ஸ்டார் ரஜினி பேசற எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எழுதின வசனம் வரும். இந்தியர்களோட பேச்சு அவ்ளோ பிரபலம்-னு சொல்லியிருப்பாரு.

இங்க ஒருத்தரு பேசியே கின்னஸ் சாதனை பண்ணப்போறாரு. ‘Big தினா’, தமிழ் பேசும் இந்தியர், Big 92.7 Fm சென்னை வானொலில ‘ரேடியோ ஜாக்கி’யா இருக்காரு. போன வருஷம் 92.7 மணி நேரம் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சாதனை பண்ணினாரு. இந்த வருஷம் 150 மணி நேரம் தொடர்ந்து தொகுத்து வழங்கி கின்னஸ் புத்தகத்துல இடம் பெறற முயற்சில இறங்கியிருக்காரு. இதுக்கு முன்னாடி யாரோ ஒரு அயல்நாட்டு அம்மணி 136 மணி நேரம் தொடர்ந்து தொகுத்து வழங்கி பண்ணின சாதனைய இவரு முறியடிக்கப்போறாரு. கிட்டத்தட்ட ஒரு வாரம், தொடர்ச்சியா, தூங்கவே தூங்காம நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி சாதிக்கப்போறாரு.
வாழ்த்துக்கள் தினா.
இவர் தொகுத்து வழங்கறதை நேரடியா நீங்களும் பார்க்கலாம்.

அவருக்கு வாழ்த்து சொல்ல ஒரு நடிகர் தொலைபேசில அழைச்சிருந்தாரு. ரேடியோல ஒலிபரப்பான அதுல, அவர் சொல்லியிருந்தாரு, ‘தினா நீங்க நிச்சயமா வெற்றியடைவீங்க, ஏன்னா நீங்க தமிழர். வெற்றின்னா தமிழ், தமிழ்ன்னா வெற்றி. தமிழ் தோக்காது. நிச்சயமா வெல்லும்-ன்னு உணர்ச்சி பொங்க பேசிட்டு. ‘விஷ் யூ ஆல் த பெஸ்ட் தினா’-ன்னு வாழ்த்துக்களை மட்டும் ஆங்கிலத்துல சொல்லிட்டு வெச்சிட்டாரு!! :)

நம்பிக்கையில்லாத் தீர்மானம்.

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைஞ்சுடுச்சு. காங்கிரஸ் 275 வாக்குகள் ‘வாங்கி’ (:))வெற்றியடைஞ்சிருக்காங்க.
அரசுக்கு எதிரான வாக்குகள் 256.
நம்ம நாட்டுக்கு மின்சார உற்பத்தி ஒரு பெரிய தேவை. இன்னும் வரப்போற வருடங்கள்ல மின்சாரத்தோட தேவை இன்னும் பல மடங்கு அதிகமாகப்போகுது. அணு மின் உற்பத்திங்கறது ரொம்ப அவசியமான ஒன்னுதான். அதுக்காக அமெரிக்காவோட ஒப்பந்தம் வெச்சுக்கறது தேவைதான்னுதான் எனக்கும் படுது.
மக்களவைல நடந்த விவாதத்தை டிடில நேரடி ஒலிபரப்பு செஞ்சாங்க. ப.சிதம்பரம் பொருமையா விளக்கம் கொடுத்துகிட்டு இருந்தாரு. சீனா மாதிரி நாடுகள்ல அணு மின் நிலையங்களுக்கு காட்டற ஊக்கம் ரொம்ப அதிகம்னு விவரிச்சு சொல்லிட்டு இருந்தாரு.
மதியத்துக்கு மேல ஒலிபரப்பு நிறுத்திட்டாங்க. காங்கிரஸ் வெற்றியடைஞ்சதுல எனக்கு சந்தோஷம்தான்.

எதிர்காலத்துல பயன்கள்னு நான் யோசிக்கற சில விஷயங்கள்.
மின் உற்பத்தி இன்னும் பல மடங்கு அதிகமானா, முக்கியமா பெட்ரோல் மேல இருக்குற டிப்பெண்டன்ஸி கொறையும். மின்சாரத்துல இயங்கற அதிவேக ரயில்கள் வந்துச்சுன்னா பெட்ரோல் பறவையான விமானத்தை நம்பியிருக்க வேண்டாம். மின்சாரத்துல இயங்கற ஸ்கூட்டர்கள் இப்போவே கொஞ்சம் வர ஆரம்பிச்சிருக்கு. பெட்ரோல் விலை இன்னும் அதிகமாகும்போது மக்களோட பார்வை அதுபக்கம் திரும்பும். மாஸ் ப்ரொடக்ஷன் பண்ணும்போது அதோட விலை இன்னும் இறங்கி வரும். மாநகரப் பேருந்துகள் பேட்டரி பஸ்களா மாறலாம். பெட்ரோல் ஊர்திகள் கொறைஞ்சா பொல்யூஷன் எவ்ளோ கொறையும்-னு சொல்லவே வேண்டாம். அவ்ளோ ஏன், பத்து வருஷம் கழிஞ்சு இந்தியா வந்தீங்கன்னா, விமான நிலையத்துல எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் உங்களை வரவேற்கலாம்!! இது எல்லாமே போக்குவரத்துத் துறைல மட்டும். விவசாயம் உட்பட இன்னும் எல்லாத் துறைகள்லயும் வரப்போற நெறைய முன்னேற்றங்களுக்கு இது ஒரு முதல் படியா இருக்கும்-னு தோனுது.

கிருஷ்ணாவின் மனைவி.

கிருஷ்ணாவின் மனைவி, இனிமே ‘கிம’-ன்னு சுறுக்கமா அழைக்கப்படப்போற இவங்க நல்லா தமிழ் பேசுவாங்க. பெப்ஸி உமா மாதிரி அழகான கனீர் குரல். அமேரிக்கால, நியூ யார்க் நகரத்துல வேலை செய்யறாங்க. ‘கிம’ வேலை பாக்கற அலுவலகத்துல அவங்கள ரொம்ப வேலை வாங்கறாங்க. காலைல 9.30 மணிக்கு அலுவலகத்துக்குள்ள போனா, மதியம் சாப்பாட்டு இடைவேளையைத் தவிர, மாலை 5.30 மணி வரைக்கும் வேலை வேலை வேலைதான். வேலை முடிச்சுட்டு வீட்டுக்குப் போனதுக்குப்போனதுக்கு அப்புறமும் அலுவலக வேலைக்காக ‘லாகான்’ பண்ணி சில மணி நேரங்கள் வேலை பார்ப்பாங்க. வழக்கமா 8 மணி நேரம் தூங்கும் ‘கிம’ இப்போல்லாம் அவ்வளவு நேரம் தூங்க முடியறது இல்லை. ரொம்ப நாளைக்கு அப்புறம் நேத்துதான் 7 மணி நேரம் தூங்க முடிஞ்சுது. 8 மணி நேரம் நிம்மதியா தூங்கலன்னா ‘கிம’ க்கு மற்ற வேலைகள் ஒழுங்காவே ஓடாது. ஆனா ‘கி’-க்கு அப்படியில்லை. அவர் நாலு மணி நேரம் அஞ்சு மணி நேரம் தூங்கினாலும் அடுத்த நாள் வேலைக்கு சீக்கிரமா போக முடியுது. ‘கிம’க்கு அது ரொம்ப கஷ்டமா இருக்கு.

‘கிம’ அடுத்த வாரம் இந்தியாவுக்கு போறாங்க. விடுமுறைக்கு. மூனு வாரம். நிம்மதியா ஒரு வேலையும் செய்யாம ரெஸ்ட் எடுத்துட்டு வரணும். திரும்ப வரும்போது அவங்க கம்ப்யூட்டரோட பாஸ்வேர்ட்கூட அவங்களுக்கு ஞாபகம் இல்லாத அளவுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும். ரெண்டு வாரம்தான் அலுவலகத்துல விடுமுறை நாட்கள். ஒரு வாரம் ‘காம்ப் ஆஃப்’. இப்போ கடுமையா வேலை செய்யறதுனால அவங்க மேனேஜர்கிட்ட பேசி ‘காம்ப் ஆஃப்’க்கு பர்மிஷன் வாங்கிட்டாங்க. (’காம்ப் ஆஃப்’-ன்னா என்னன்னு தெரியலையா, சம்பளத்தோட விடுமுறை. வீட்ல இருந்து அதிக நேரம் வேலை பார்த்ததுனால, மேனேஜர் மகிழ்ந்து சம்பளத்தோட ஒரு வாரம் விடுமுறை கொடுத்திருக்காரு). திரும்ப வந்து எப்டியும் ஒரு வாரமாவது ‘ஜெட் லேக்’, அது இது-ன்னு ஓ பீ அடிச்சுக்கலாம். மொத்தத்துல ஒரு நாலு வாரம் ஃப்ரீயா இருக்கணும்.

இந்தியா வரப்போறதா சொன்னொன்ன, ‘கி’வோட அக்கா ஒரு லிஸ்ட் கொடுத்துட்டாங்க. ஷாப்பிங் பண்றதுக்கு. இந்தியால உபயோகப்படுத்தற மாதிரி மொபைல் போன், ப்ளூ டூத் ஹெட் செட், ட்டாய்ஸ், சாக்லேட் இன்னும் நெறைய. இதையெல்லாம் ‘கிம’ வாங்கப்போறது இல்லை. இந்தியாலயே நல்ல மொபைல் ஃபோன்கள் கெடைக்குது. எதுக்கு இங்கேயிருந்து வாங்கிகிட்டு போகணும்? ‘கி’வுக்கும் வாங்கிட்டுப் போறதுல இஷ்டம் இல்லை. சும்மா சாக்லேட் மட்டும்தான் வாங்கிட்டு போறாங்க.

ஆமா, ‘கிம’ பத்தி இவ்ளோ தூரம் சொல்றியே, அவங்களோட பேரென்ன, உனக்கும் அவங்களுக்கும் என்ன உறவு-ன்னு கேக்கறீங்க?

அலுவலகத்துக்கு போகும்போது ரயில்ல நான் உக்காந்திருந்த இருக்கைக்கு நாலு இருக்கைகள் பின்னாடி நின்னுகிட்டு அவங்களோட நண்பர்கிட்ட பேசிகிட்டு இருந்தவங்கதான் இந்த ‘கிம’. ரயில்ல யாரோ அவங்க நண்பர்கிட்ட பேசிகிட்டு வர்ற ஒருத்தர்கிட்ட, அவங்களோட பேர, நான் எப்டி கேக்க முடியும்? அது அவ்ளோ நாகரீகமா இருக்காதுல்ல??!!

Older Entries »