தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

நான், என் மனைவி, என் தம்பி, என்னோட நண்பர்கள், எல்லாரும் பேசிட்டு இருந்த சில உரையாடல்கள (அ) வாக்குவாதங்கள உங்களோட பகிர்ந்துக்கலாம் (அ) உங்களோட தொடரலாம்-ன்னு தோனுச்சு.
அதுல ஒன்ன, அப்டியே இங்க எடுத்துவுடறேன்.

வலைப்பதிய ஆரம்பிக்கறதுக்கெல்லாம் முன்னாடி ஒருநாள், எதோ படிச்சுகிட்டு இருந்தப்போ, ‘பாரதி’ சொன்ன ‘தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!‘ ங்கற வரிய படிச்சேன். அது ஒரு கவிதைல வர்ற வரியா, இல்ல வேற எதுலயும் வர்றதான்னு தெரியல. அந்த ஒரு வரி மட்டும் தான் நானும் கேள்விப்பட்ருக்கேன். அன்னிக்கு என்ன மூடுல இருந்தேன்னு தெரியல. அந்த வரி, தமிழன்ங்கற ஒரு கர்வத்த காட்றமாதிரி தோனுச்சு. ‘தமிழன்’ங்கறதுல அப்டியென்ன கர்வம், அதுலயென்ன ஒரு முறுக்கு, மிடுக்கு அப்டின்னெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சேன். மத்த மொழி பேசறவங்களோட தமிழ் பேசறவனுக்கு அப்டி என்ன ஸ்பெஷல்?

அன்னிக்கு சாயங்காலம், தம்பி, மற்றும் நண்பர்களோட கேரம் ஆடும் போது அவங்ககிட்ட கேட்டேன். ஆனா நேரடியா கேக்கல.
‘நீங்க உங்க பிள்ளைங்களுக்கு தமிழ் சொல்லித் தருவீங்களா?’-ன்னு கேட்டு ஆரம்பிச்சேன்.
‘கண்டிப்பா’-ன்னு நான் எதிர்பார்த்த பதிலத்தான் சொன்னாங்க.

‘ஏன்’னு கேட்டேன்.
‘ஏன்னா தமிழ் என்னோட தாய்மொழி! அதுனால!!’ அப்டின்னான் ஒரு நண்பன்.
‘தமில் ஈஸ் எ நைஸ் லாங்வேஜ்! அதுனால!!’ இது இன்னொரு நண்பன்.

‘உங்க பிள்ளைங்க தமிழ் மொழி பேசறதுங்கறத ஒரு பெருமையா நெனைப்பீங்களா?’ ன்னு கேட்டேன்.
ஆமாம்-ன்னு சொல்லுவாங்கன்னுதான் எதிர்பார்த்தேன், அதையேதான் சொன்னாங்க.

”தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!’ -ன்னு சொல்லித் தருவீங்களா?’ இது அடுத்த கேள்வி.
சில வினாடிகள் யோசிச்சிட்டு ‘ஆமா’ -ன்னு சொன்னாங்க.

‘தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!’ -ன்னு சொன்னா மத்த மொழிகளோட மதிப்ப கொறைவா சொல்ற மாதிரி இருக்கே’ -ன்னு கேட்டேன்.

‘ஆமா, தமிழ் மொழில, திருக்குறள் இருக்கு, கம்ப ராமாயணம், அகநானூறு புறநானூறு-ன்னு எவ்ளோ இருக்கு? தமிழ் மொழி சிறந்தமொழிதான்!!’ ன்னு ஒரு நண்பன் சொன்னான்.

‘நானும் ஒத்துக்கறேன். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்‘-ன்னு பாரதி சொன்னத ஒத்துக்கறேன். ஆனா, ‘தலை நிமிர்ந்து நில்லடா!’-னு சொல்றது மத்த மொழிகள விட தமிழ் மொழிதான் உயர்ந்தது-ன்னு சொல்ற மாதிரி இருக்கு. அத என்னால ஒத்துக்க முடியல, ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க தாய்மொழிதான உயர்ந்தது’ அப்டீங்கறது என்னோட வாதம்.

‘தமிழ் மொழி எவ்ளோ பழசு!! மூவாயிரம் வருஷத்துக்கும் முன்னாடியே தமிழ் பேசியிருக்காங்க’ அப்டினெல்லாம் நண்பர்கள் சொன்னத, அவ்ளோ கன்வின்சிங் பதிலா என்னால ஏத்துக்க முடியல.

அப்போதான் என் தம்பி, ‘தமிழ்’-ங்கறது ஒரு மொழி மட்டும் இல்ல. அது ஒரு கலாச்சாரம். ஒரு பண்பாடு. மூவாயிரம் வருஷத்துக்கும் மேலா வளர்ந்துட்டு வர்ற கலாச்சாரம். சிலப்பதிகாரம், திருக்குறள்-ல்லாம் இலக்கியங்கள் மட்டும் இல்ல. அதெல்லாம் வாழ்க்கை நெறிய கத்துக்கொடுக்கற காவியங்கள். தமிழ்ப் பண்பாட்ட கத்துக்கொடுக்கற நூல்கள்’ அப்டீன்னு சொன்னான்.

மத்த நண்பர்களும் அதையே சொன்னாங்க.
‘மனைவிய விட்டுட்டு வேற ஒருத்திகூட சுத்தாதடா’-ன்னு சிலப்பதிகாரம் சொல்லுது.
‘நீதி தவறிட்டு, மீதியிருக்கற உயிர மட்டும் வெச்சுட்டு என்னத்த பண்ணப்போற?’-ன்னும் சிலப்பதிகாரம் கேட்குது.
‘விருந்தோம்பல், மத்தவங்கள இகழாமை, மக்களோட கடமைகள், அரசோட கடமைகள்’ இப்டி பல விஷயங்கள திருக்குறள் சொல்லுது.
‘அறம் செய விரும்பு’ -ன்னு ஆத்திச்சூடி சொல்லுது…
இன்னும் நெறைய உதாரணங்கள் சொன்னாங்க.

‘தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!’-ங்கறது, தமிழ் மொழி பேசறவங்களுக்குன்னு இல்ல. தமிழ் பண்பாட்டோட வாழறவங்களுக்கு. தமிழ் கலாச்சாரத்த கட்டிக்காக்கறவங்களுக்கு.’
‘மூவாயிரம் வருஷமா வாழற தமிழ் பண்பாட்டு ஆலமரத்தோட புது விழுது நீ. அதுக்காக பெருமைப் படு.’ -ன்னு சொல்லுதே தவிர மத்த மொழி பேசறவங்கள மதிக்காதன்னு அர்த்தம் கெடையாது’ அப்டீன்னு சொன்னாங்க.

முழு மனசோட நானும் ஏத்துக்கிட்டேன். கேரம் வெளையாட்ல அன்னிக்கு தோத்துட்டாலும், நல்ல விஷயம் பேசின மன நிறைவு இருந்துச்சு.

இந்த உரையாடல் இப்போ ஞாபகம் வந்ததுக்கு காரணம், தமிழ்நாட்ல ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்-ன்னு வலைப்பதிவுல யாரோ போட்ருந்தத படிச்சது. அது சொன்ன விஷயம் இதுதான்.

‘மத்த மாநிலத்து நடிகைகளுக்கு கோயில் கட்றேன்’ சொல்ற
தமிழனான ஒரு ‘இயக்குனர’ மன்னிப்பு கேட்க சொல்றியே,
நீயெல்லாம் ஒரு தமிழனா??’

நீங்க என்ன நெனைக்கறீங்க? தமிழன்-ங்கறவன், தமிழ் மொழி பேசறவனா? இல்ல தமிழ் பண்பாட்டு ஆலமரத்தோட விழுதா??