இன்ஃபீரியன் அந்நியன் 5.

நியூ ஜெர்சி-ல ஒரு ரேடியோ ஸ்டேஷன்ல, ஒரு நிகழ்ச்சி வருது. நம்ம ‘அபி பதில்கள்’, ‘செல்வி பதில்கள்’ மாதிரி. மக்கள் அவங்களோட ப்ரச்சனைகள எழுதிப் போடலாம் (அ) இ-மெயில் அனுப்பலாம். அந்த ப்ரச்சனை பத்தி ரேடியோல ஒரு மணிநேரம் பேசுவாங்க. மக்கள் ஃபோன் பண்ணி அவங்க பதில்கள சொல்லுவாங்க. அதேமாதிரி ப்ரச்சனை வந்தப்போ அவங்க எப்டி சமாளிச்சாங்க, என்ன பண்ணலாம் -ங்கற மாதிரி ஐடியாக்கள் தருவாங்க.

அன்னிக்கு, அந்த நிகழ்ச்சில, ஒரு பொண்ணு எழுதின ப்ரச்சனையப் பத்தி பேசினாங்க. ப்ரச்சனை இதுதான்.
‘அந்தப் பொண்ணு பேரு எமிலி(ரேடியோ நிலையத்துக்காரங்க கொடுத்த கற்பனைப் பேரு). அந்தப் பொண்ண, சின்ன வயசில அவளோட வளர்ப்பு அப்பா பாலியல் பலாத்காரம் பண்ணிட்டாராம். அதுனால ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டு, அந்தப் பொண்ணு யார்கிட்டயும் அவ்வளவா பேச மாட்டாளாம். வெளில போயி மத்தவங்களோட பழக மாட்டாளாம். ஸ்கூல்ல ஆவரேஜ் ஸ்டூடெண்ட்டாம். யார்கிட்டயும் பேச மாட்டாளாம். ஒரே ஒரு பையன்ட்ட மட்டும் பேசுவாளாம், அவன்கிட்ட மட்டும்தான் அவளுக்கு நடந்த கொடுமையப் பத்தி சொல்லியிருக்காளாம். அவனும் அதுபத்தி அலட்டிக்காம நல்லாதான் பழகினானாம். கொஞ்ச நாள் முன்னாடி அந்தப் பையன காதலிக்கறதா சொல்லியிருக்கா. அதுக்கப்புறம் அந்தப் பையன் இவ கிட்ட இருந்து விலகி விலகி போறது மாதிரி தெரியுதாம்!!’.

‘என்னோட ப்ராம்ளம் தெரிஞ்சும், என்கிட்ட இருந்த கொறைதெரிஞ்சும் என் கிட்ட நல்லா பழகின அவன்தான் எனக்கு கணவனா வரணும்-னு ஆசப் படறேன். அதுக்கு என்ன பண்ணனும்-னு சொல்லுங்க’-ங்கறதுதான் அவளோட கேள்வி.

‘மக்கள்லாம் ஃபோன் பண்ணி அந்தப் பையன்கிட்ட பேசு, டேக் ஹிம் அவுட், அந்தப் பையன்ட்ட, ஏன் விலகி விலகி போறான்னு கேளு.’ இப்டி பல ஆலோசனைகள் சொன்னாங்க.

‘என்னோட ப்ராம்ளம் தெரிஞ்சும், என்கிட்ட இருந்த கொறைதெரிஞ்சும்…’ அப்டின்னு அந்தப் பொண்ணு சொன்னது கொஞ்சம் யோசிக்க வெச்சுது. அதை யாரும் கவனிக்காதது ஆச்சர்யமா இருந்தது. நல்லா யோசிச்சுப் பாருங்க? சின்ன வயசுல, வளர்ப்பு அப்பா அவள பாலியல் பலாத்காரத்துல ஈடுபடுத்தினது, அவளோட ப்ராப்ளமா? அவளோட கொறையா?? அந்த வளர்ப்பு அப்பாவோட ப்ராப்ளம். அந்த ஆளோட ‘சிக்னஸ்’. அது எந்தவிதத்துல அந்த பொண்ணோட கொறையாகும் சொல்லுங்க? இந்த வயசு வரைக்கும் அத அவளோட கொறையாவே நெனைச்சுட்டு இருக்கா அந்தப் பொண்ணு. அத போக்கறதுக்கு வழிசொல்லாம, அந்தப் பையன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு வழி சொல்லிட்டு இருந்தாங்க ரேடியோ நேயர்கள்.

‘சின்ன வயசுல நடந்ததுக்காக குற்ற உணர்வோட இருக்கணும்-னு அவசியம் இல்ல. நீ குற்றவாளியில்ல. ஊர்ல, மக்கள் பணத்த கொள்ளையடிக்கறவன், பொறுக்கித்தனம் பண்றவன்லாம் மிடுக்கா போறான். நீ ஏன் குற்ற உணர்வோட இருக்கணும்? இன்ஃபீரியரா ஃபீல் பண்ணனும்?’ அப்டீன்னெல்லாம் ஒருத்தர்கூட கேக்கல.

வீட்டுக்கு வந்து யோசிச்சுப் பாத்தப்போ நம்ம ஊர்லயும் செலபேரு அப்டி இருக்கற மாதிரி தோனிச்சு.
‘அப்பா குடிகாரனா இருக்கான்’, ‘அப்பா வீட்டுக்கே வர்றதில்ல’, ‘அம்மா கோவக்காரி!!’, ‘அக்கா ஓடிட்டா!!’ இப்டி மத்தவங்க கொறைகளையெல்லாம் தன் கொறைகளா நெனைச்சு இன்ஃபீரியரா ஃபீல் பண்றவங்க இருக்கத்தான் செய்றாங்க.

மத்தவங்க சுமைகள தன் சுமைகளா நெனைச்சு உதவலாம். மற்றவங்க கஷ்டங்கள தன் கஷ்டங்களா நெனைக்கலாம். மத்தவங்க குறைகள நம்ம குறைகளா ஏன் நெனைக்கணும் சொல்லுங்க?