என்ன படிச்சு.. என்ன பயன்?

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

பொருள்: நமக்கு தீமை செய்தவருக்கும்கூட நன்மையையே செய்யாவிட்டால், நாம் கற்ற கல்வியினால் அடையும் பயன்தான் என்ன?

ஒடனே, கோவில் பக்கமா ரோட்ல நடந்து போயிட்டு இருக்கும்போது ‘சார்லி’யோ இல்ல வேற யாரோ மூஞ்சில எச்சி துப்பிட்டா பதிலுக்கு நாம பெப்ஸி வாங்கித் தரணுமா? அப்டின்னு கேக்கக்கூடாது!!.

நம்மள சுத்தி இருக்கறவங்க, நண்பர்கள் இவங்கள்லாம் தெரிஞ்சோ தெரியாமலோ எதாவது தப்பு செய்யறாங்கன்னு வெச்சுக்கோங்க, அவங்ககிட்ட வறிஞ்சு கட்டிகிட்டு, போட்டி போட்டுகிட்டு நாமும் அதே தப்ப செஞ்சோம்னா, நாம படிச்ச படிப்புனால என்ன பயன் சொல்லுங்க?

‘அவன் வீட்டு விஷேசத்துக்கு என்ன கூப்டல. அதுனால என் வீட்டு விஷேஷத்துக்கு நானும் அவன கூப்ட மாட்டேன்.’
‘என் வீட்டு கல்யாணத்துக்கு நான் கூப்டு அவன் வரல. இப்போ அவன் கூப்டா மட்டும் நான் போகணுமா??’
‘அவங்க வீட்டுக்கு நான் போனப்போ, அவங்க என்ன மரியாதையாவே நடத்தல. அவங்க நம்ம வீட்டுக்கு வந்தா நானும் மரியாதையா நடந்துக்க மாட்டேன்’

இதுமாதிரியெல்லாம் அடுத்தமுறை யோசிக்கும்போது, நாம படிச்ச படிப்பினால வந்த பயன் என்ன-ன்னு ஒருதடவ நம்மளயே கேட்டுகிட்டா, படிச்ச படிப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கும். படிச்ச படிப்புன்னா பெரிய டாக்டர் இன்சினியர் படிப்புன்னு இல்ல. இந்த குறள படிச்சு புரிஞ்சுக்கறவங்கல்லாம் படிச்சவங்கதான்!!

இதுக்கு பொருத்தமா ஒரு கத சொல்லுவாங்க.
ஒரு ஊர்ல, ஒரு சாமியாரும் அவர் சீடர்களும் இருந்தாங்களாம். ஒருநாள் அவங்க குளிச்சுட்டு வர்றப்போ, ஆத்தோரமா ஒரு தேள் தண்ணில தத்தளிச்சுகிட்டு இருந்தத பாத்துருக்காங்க. சாமியார் அத காப்பாத்தியிருக்காரு. அப்போ அந்த தேள் அவர கடிச்சிடுச்சு. மருந்து போட்டுட்டு போய்ட்டாரு. மறுநாள் குளிச்சுட்டு வரும்போது அதே தேள் அதே எடத்துல தத்தளிச்சுட்டு இருந்திருக்கு. மறுநாளும் காப்பாத்தறாரு. அன்றைக்கும் தேள் கடிச்சிடுச்சு. மூனாவது நாளும் காப்பாத்தியிருக்காரு. அன்றைக்கும் கடிச்சிருச்சு.
ஒரு சீடன் பொறுக்க முடியாம, ‘அதுதான் தினமும் கடிக்குதே, இன்னமும் ஏன் காப்பத்தறீங்க? காப்பாத்தாம விட வேண்டியதுதான?’ அப்டீன்னு கேட்டானாம். அதுக்கு சாமியார். ‘கடிக்கறது’-ங்கறது தேளோட குணம். அதத்தான் அது செய்யுது. காப்பத்தறதுதான் என்னோட குணம். அதத்தான் நான் செய்யறேன். தேளோட கடிக்கற குணத்துக்காக என் குணத்த நான் ஏன் மாத்திக்கணும்-னு கேட்டாறாம் சாமியார்.