ஒரு(புத்தகம்-கவிதை-குறள்-உரையாடல்)

போன சில வாரங்கள்ல “கற்பனைக்கும் அப்பால்…”-ங்கற புத்தகத்த படிச்சேன். இது சுஜாதா எழுதிய அறிவியல் தொடர்களோட ஒரு தொகுப்பு. இதுல மில்க்கி வே, காலக்ஸி, ப்ரபஞ்சம் பத்தியெல்லாம் அவர் படிச்ச புத்தகங்களோட சாரத்த எழுதியிருக்காரு.
அதுல இருந்து ஒரு பகுதி..

நாம் இரவில் வானில் காணும் நட்சத்திரங்களில் பெரும்பாலானவை ‘மில்க்கி வே’ எனப்படும் நட்சத்திரக் குடும்பத்தை சேர்ந்தவை. இதில் சூரியனும் ஒரு நட்சத்திரம். இதற்கு மிக அருகாமையில் உள்ள நட்சத்திரமே சுமார் நான்கு ஒளி வருட தூரத்தில் இருக்கிறது. ஒளி ஒரு செகண்டுக்கு சுமார் முப்பதுகோடி மீட்டர் பிரயாணம் செய்கிறது. ஒரு வருடத்தில் எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளுங்கள். அது ஒரு ஒளி வருடம். இந்த ‘மில்க்கி வே’ எனப்படும் ஒரு காலக்ஸியின் குறுக்களவு சுமார் ஒரு லட்சம் ஒளி வருடம். மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரம் கோடி.. பிரபஞ்சம் என்பது இது மாதிரி எத்தனையோ கோடிக்கணக்கான காலக்ஸிகள் என்று சொல்கிறார்கள்…

மனத்தால் நினைத்துப் பார்க்க முடியாத இத்தனை பிரம்மாண்ட தூரங்கள் வியாபித்திருக்கும் பிரபஞ்சத்தில் சூரியனும் பூமியும் நம் தேசமும், நம் வீடும், நாமும், எத்தனை துச்சம் என்பதை அறியலாம். நம் வாழ்நாள், ஏன் – நம் சூரியனின் வாழ்நாள் என்பதே அந்தப் பிரபஞ்ச இயலில் ஒரு கணத்திற்கு சமானமானது.

இதப் படிச்சுட்டு நானும் என் மனைவியும் பிரபஞ்சம் பத்தியும், அதுபத்தி அறிவியல் சொல்றதையும், மதங்கள் சொல்ற கதைகள பத்தியும் பேசிட்டு இருந்தோம்.

ரெண்டு நாள் முன்னாடி, நான், என் மனைவி, என் தம்பி, அவர் மனைவி நாலுபேரும் பேசிட்டு இருந்தப்போ, என் தம்பி எப்பவோ பருகிய ‘கொஞ்சம் தேனீரைப்’ பத்தி சொல்லி அதுல இருந்து ஒரு கவிதையை சொல்ல, வைரமுத்து எழுதிய ‘கொஞ்சம் தேனீர் நிறைய வானம்’ புத்தகத்த எடுத்து அந்தக் கவிதையை திரும்பவும் படிச்சோம். சுஜாதா சொன்ன கருத்துகளோட தொடர்பு இருக்கறமாதிரி இருந்த அந்தக் கவிதை இதுதான்.

கால ராட்சசன்

யுகம் அவன் நகம்
உள்மூச்சு ஜனனம்
வெளிமூச்சு மரணம்

நட்சத்திரங்கள்
அவன் துடைத்தெறிந்த
தூசுத்துகள்கள்

சந்திர சூரியர்கள்
அவன்
காலிடை மிதிபடு
கல்லிடைக் கிளர்ந்த சிறுபொறிகள்

வியர்வைத் தாரையின்
ஒரு துளி கடல்

அதில் விளைந்த கிருமிகள்
ஜீவராசிகள்

மழிக்கையில் உதிர்ந்த
மருக்கள் மலைகள்

கட்டைவிரல் நகம் இடறச்
சிதறிப்போன சிற்றில்கள்
சாம்ராஜ்ஜியங்கள்

போர்கள் தெருக்கூத்து
கொட்டாவி பூகம்பம்
பெருமூச்சு புயல்

மனிதர்கள்
மைக்ரோ வினாடிகளில்
அவன் படைத்துப் படைத்து
உடைக்கும் குமிழ்கள்

பூகோளம் சரித்திரம்
தத்துவம் இலக்கியம்
கலை கலாசாரமெல்லாம்
அரைகுறையாய் எழுதி அவன்
எச்சில் துப்பியழிக்கும்
சிலேட்டுச் சித்திரங்கள்

விஞ்ஞானம்
அவன் ஒழுகவிட்ட
ஒரு சொட்டறிவு

பூமியாகப்பட்டது
அவன் கணக்கில் சில நாட்கள்
பறக்கவிட்ட பலூன்

இஃதிவ்வாறிருக்க -
காலத்தை வென்றதுகள் என்று
தருக்கிச் சிலதுகள் திரியுதுகள்
சிகையலங்காரப் பொழுதிலவன்
தலையினிழிந்த மயிரனையதுகள்.

கவிதைய ரசிச்சு படிச்சுட்டே வந்து கடைசீல ‘தலையின் இழிந்த மயிரனையதுகள்’ ல வந்து நின்னோம். இந்த உவமை புதுசா இருக்கேன்னு நாங்க சொல்ல, என் தம்பியோட மனைவி, வள்ளுவரே இந்த உவமைய பயன்படுத்தியிருக்கறதா சொல்லி அந்தக் குறளையும் சொன்னாங்க. அந்தக் குறள் இதுதான்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

இதுக்கு கலைஞர் உரைல இருந்து தேடிப்பிடிச்ச பொருள்.

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்விட்ட அந்த உரையாடல அதோட முடிச்சுட்டு சாப்ட போய்ட்டோம்.