ஓ!! ஒரு தென்றல் புயலாகி வருதே!!

தமிழ்நாட்டுல எங்கப் பார்த்தாலும் புயல், மழை, வெள்ளம். எல்லா அணைகளும் ஃபுல். ஏரிகளும் ஃபுல். சென்னைல இருந்து, பஸ்ல, எங்க ஊருக்கு போக வழக்கமா 6 மணி நேரம் ஆகும். இப்போ 12 (அ) 13 மணி நேரம் ஆகுது. அப்டியாவது ஊர் போய் சேருதே-ன்னு சந்தோஷப் படற நெலமைல இருக்கு.
சென்னைல, கழிவு நீர் மட்டுமே ஓடிட்டு இருந்த, கூவம் ஆத்துலயும் அடையார் ஆத்துலயும் மழைநீர் ஃபுல்லா ஓடுது.

புயல் மழை-ல்லாம் விட்றுச்சான்னா, இன்னும் வரலாம்-ன்னு வயித்துல புளிய கரைக்கறாங்க.
சரி, புயல் எப்படி உருவாகுது?? நான் படிச்சு தெரிஞ்சுகிட்டது, இதோ உங்களுக்காக..

புயல் உருவாவதற்கான காரணிகள்.

1. கடலோட வெப்பம் குறைந்தபட்சம் 80 டிகிரி ஃபாரன்ஹீட்டும் ஆழம் 150 அடியும் இருக்கணும்.

2. காத்துல ஈரப்பதம் அதிகமா இருக்கணும்.

3. வளி மண்டலத்தோட மேல் மட்டத்துல அடிக்கற காத்தோட வேகத்துக்கும் கீழ் மட்டத்துல அடிக்கற காத்தோட வேகத்துக்கும் வித்தியாசம் மணிக்கு 20 மைல் வேகத்த விட கம்மியா இருக்கணும்.

கடலோட வெப்பத்துனால கடல் மட்டத்துல இருக்குற காத்து சூடாகி, காத்தோட எடை கொறஞ்சு, அப்டியே.. மேல போகுது.
மே மாசத்துல ஆரம்பிச்சு நவம்பர் மாசம் வரைக்கும் இந்த புயல் சீசன் தொடரலாம்-ன்னு சொல்றாங்க. கடல் தண்ணி சூடாகி மேல்மட்டத்துல இருக்கற காத்தையும் சூடாக்குது. சூடாகி, லேசான காத்து மேல் நோக்கி போக ஆரம்பிக்குது.

கடல் மட்டத்துல இருக்கற காத்து மேல் நோக்கிப் போறதால அந்த எடத்த நெரப்பறதுக்காக சுத்தியும் இருக்கற காத்து ‘அவசரமா’ அந்த எடத்துக்கு வருது. சுத்திலும் இருக்கற காத்து வந்து மோதி, தண்ணியோட சூட்டினால இன்னும் சூடாகி, அதுவும் மேல போக ஆரம்பிக்குது. இந்த அவசர மோதல்னால காத்துல ஒரு சுழற்சி ஏற்படுது.

இந்த சுழற்சி, சுத்தி இருக்கற காத்த கூட இழுத்துகிட்டு இன்னும் பலமான சுழற்சியா ஆகுது. இந்தக் காத்தோட பலம் இன்னும் அதிகமாயிட்டே போகுது. மெதுவா நகற ஆரம்பிக்குது. வழி நெடுக, இன்னும் அதிகமாக காத்த இழுத்து, அதோட பலத்த இன்னும் அதிகமாக்கிட்டே போகுது. சின்ன காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியா இருக்கறது பலமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலாக மாறுது.

இந்த சுழற்சியோட வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டர், 40 கி.மீ-ன்னு அதிகமாயிட்டே போகுது. (இந்தக் காத்து 39 மைல் வேகத்த தாண்டும்போது, அமெரிக்கால அதுக்கு ஒரு பேரு வெச்சிடறாங்க. ‘கட்ரீனா’, ‘வில்மா’ எல்லாம் அப்படி வெக்கப்பட்ட பெயர்கள்தான்.) இந்த சுழற்சி சுத்தி இருக்கற மேகத்தோடயெல்லாம் கூட்டணி அமைச்சுகிட்டு, கூடவே கூட்டிட்டு வருது. அது கரைல வந்து முட்டும் போதுதான் அவ்ளோ மழையையும் கொட்டுது. புயல் சின்ன எச்சரிக்கையெல்லாம் அப்போதான் தர்றாங்க. 80, 90 மைல் வேகத்துல அடிக்கற காத்தோட வேகம் கரைய கடந்தப்புறம் கொறைய ஆரம்பிக்குது. ஆனா கரைய கடக்கும்போதே பெரிய பேரழிவுகள ஏற்படுத்திடுது.

இந்தக் காத்து எவ்ளோ வேகமா சுத்துது, எவ்ளோ வேகமா நகர்ந்து வருது, எப்போ வந்து கறையைமுட்டும் (அ) கடக்கும்-ங்கற எல்லா விவரங்களையும் சாட்டிலைட்கள் மூலமா தெரிஞ்சுக்க முடியுது.

இந்தக் காத்து, ராட்ஷச பலம் அடையாதபடி மொளைலயே எப்டி கிள்றது-ன்னு மட்டும் இன்னும் தெரியல.