விரும்பிச் செய்த பிழை.

வழக்கமாகவே தொண்டர்கள் கூட்டம் நிறம்பி வழியும் தலைவரின் வீடு அன்று சற்று பதட்டத்துடன் காணப்பட்டது. கூட்டம் குறைவாக இருந்தது. ஒரிரு தொண்டர்கள் இங்குமங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.

முந்தைய தலைவர்களின் படங்கள் விஸ்தாரமான வரவேற்பறை முழுவதும் மாட்டப்பட்டு வாடா மல்லியான ப்ளாஸ்டிக் மல்லி மாலைகள் போடப்பட்டிருந்தன. வரவேற்பறையை தாண்டியதும், 100 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரிய ஹால். ஹாலின் மையமாக மாட்டப்பட்டிருந்த படத்தில், விபூதிப் பட்டை குங்குமம் சகிதமாக சிரித்துக் கொண்டிருந்தார் தலைவர். ஹாலில் இருந்து வலைந்து ஏறிய மரப் படிகள் மாடிக்கு அழைத்துச் சென்றன. படிகளுக்கு வலது புறம் சற்று உள்ளடங்கி டிவி அறையில் பெரிய டிவியும், சோபாக்களும் போடப்பட்டிருந்தன. ஹாலை ஒட்டி இடதுபுறத்தில் மணிகள் பொறுத்தின மரக்கதவுபோட்ட பூஜை அறை திறந்தே இருந்தது. உள்ளிருந்து பகவானுக்கும் பக்தனுக்கும் பாலமாக அமையும் ஊதுபத்திகளின் புகை கசிந்துகொண்டிருந்தது. உள்ளே பெரிய பழநி தண்டபாணி முருகன் படமும், அதன் கீழேயே சிறிய வெண்கல சிலைகளில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள் புரிந்துகொண்டிருந்தார்கள். முருகன் படத்திற்கு இடதுபுறம் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று வலமிருந்து இடமாக உருதுவில் எழுதப்பட்ட எழுத்துகளுடம் மெக்கா படமும், வலதுபுறம் ‘இயேசு உங்களை ஆசிர்வதிப்பாராக’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இயேசு கிருஸ்து படமும் மாட்டப் பட்டிருந்தன.

ஹாலின் மையத்தில் போடப்பட்டிருந்த சொகுசு சோபாவில் சோகமான முகத்துடன் அமர்ந்திருந்தான் ‘சின்னையா’ என்று தொண்டர்களால் அழைக்கப்படுகின்ற செந்தில். தலைவரின் மகன். இரண்டு நாள் தாடியும், ஒரே ஒரு உத்திராட்சம் தொங்கும் கழுத்தை ஒட்டிய சங்கிலியும், வெள்ளை முண்டா பனியனும் கதர் வேஷ்டியுமாக, கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். நெற்றியில் பூசியிருந்த விபூதி வியர்வையில் கொஞ்சம் அழிந்திருந்தது. தலைவரின் மனைவி டிவி அறையில் கலங்கிய கண்களுடன் உக்கார்ந்திருந்தார்.

செல்போன் மணி அழைக்க, அவசரமாக எடுத்த செந்தில், உடனடியாகக் கோவப்பட்டவனாய்,
‘பைப்பாஸும் இல்ல ஒன்னும் இல்ல!! போன வைய்யா!!’ என்று கத்தினான்.

‘ஜிங்குல் பெல் ஜிங்குல் பெல் ஜிங்குல் ஆல்தவே’ பாட்டைப் பாடி காலிங் பெல் வாசலில் யாரோ வந்திருப்பதை அறிவிக்க,
‘குமாரு! வாசல்ல யார்ன்னு பார்றா!!’ என்று வேகமான குரலில் சொன்னான்.

‘இதோ பாக்கறேங்கய்யா’ என்று வாசலுக்கு ஓடிய குமார், அவசரமாக உள்ளே வந்தான்.

கண்கள் கொஞ்சம் கலங்கி, தயங்கித் தயங்கி, ‘சின்னய்யா, பெரியய்யா எறந்துட்டாருன்னு தந்தி வந்து..’

குமார் சொல்லி முடிப்பதற்குள் செந்திலின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. உடலெங்கும் ஒரு நொடி மின்சாரம் பாய்ந்ததைப் போல உணர்ந்தான். இன்னும் அதிகமாக வியர்க்க ஆரம்பித்தது.
‘இப்படி ஆகிவிட்டதே! இப்படி ஆகிவிட்டதே!! என்ன செய்யப் போகிறாய்?!? என்ன செய்யப் போகிறாய்?!?’ என்று மனது திரும்பத் திரும்ப கேட்டு கண்களில் கண்ணிரை சேர்த்துக்கொண்டிருந்தது.
‘இதையெல்லாம் சமாளித்துத்தான் ஆகவேண்டும்! சமாளித்துத்தான் ஆகவேண்டும்!! சமாளி! சமாளி!! சமாளி!!!’ என்று, அறிவு, கண்ணீருக்கு தடை போட ஆரம்பித்தது.
நினைக்க நினைக்க கோவமும், இயலாமையும் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

சோபாவில் இருந்து எழுந்து, செய்வதறியாது இங்கும் அங்கும் நடந்தவன் பூஜையறை வாசலில் நின்றான்.5547 2213.

‘டேய் முருகா!? என்னடா பண்ணிட்டு இருக்க நீ?’
‘அப்பா, எவ்ளோ பெரிய தலைவர். அவர நம்பி எத்தன குடும்பங்கள் இருக்கு?’
‘உயிரயும் கொடுக்க எவ்வளவு தொண்டர்கள் இருக்காங்க?’
‘அவருக்கு இப்டியெல்லாம் நடக்குது, நீ வேடிக்கை பாத்துகிட்டு இருக்க?!?’
‘என்னடா பண்ணீட்டு இருக்கீங்க நீங்கள்லாம்?’
‘மாசம் தவறாம அப்பா கொடுக்கற ‘காணிக்கை’ய வாங்கறீங்கல்ல?’
‘தேவையான நேரத்துல ஓடி ஒளிஞ்சிருவீங்களே!!’
‘இந்த நேரத்துல என்னடா பெருஸ்ஸா புடுங்கிட்டு இருக்கீங்க??’
‘மவனே! நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது!!’
‘இன்னும் அஞ்சு நிமிஷத்துல, அப்பாக்கு ஒன்னும் ஆகல. நல்லா இருக்காருன்னு எல்லா டிவிலயும் ஃப்ளாஷ் நியூஸ் வர்ற மாதிரி பண்ணனும்.’
‘வரல, நாளைக்கு நீ கூவத்துல கடப்ப!!’.
கோவமாக கத்தினான். கையில் இருந்த செல்போனை வீசி எறிந்தான். அது பழநி முருகன் படத்துக்கு கீழ் விழுந்து தேங்காய் போல் சிதறியது. இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருந்தான்.

ஐந்து நிமிடத்திற்குள் டி வியில் ஃப்ளாஷ் நியூஸ் வந்தது.
‘காலில் பட்ட சிறு காயத்திற்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தலைவரின் உடல்நிலை சீராக உள்ளது. ‘பைப்பாஸ் அறுவை சிகிச்சை பலனலிக்கவில்லை’ ‘தலைவர் உடல்நிலை கவலைக்கிடம்’ என்றெல்லாம் வரும் எந்த வதந்திகளையும் தொண்டர்கள் நம்ப வேண்டாம். ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் செய்திகளில் அவரே நேரிடையாகப் பேசுவார்’

எட்டு நிமிடத்தில் டெலிபோன் அடிக்க, குமார் எடுத்துப் பேசினான்.
‘சின்னய்யா!! டி வி ஸ்டேஷன்ல இருந்து முருகன் பேசறாரு…’ என்று போனை செந்திலிடம் நீட்டினான்.

பின்குறிப்பு: இந்தக் கதைல விரும்பிச் செய்த பிழை என்னன்னு புரியாதவங்களுக்கு.
‘சின்னய்யா, பெரியய்யா எறந்துட்டாருன்னு தந்தி வந்து..’-ன்னு வேலைக்காரன் குமார் சொல்றதுல ‘வதந்தி’ ங்கறதுக்கு பதில் ‘தந்தி’-ன்னு எழுதி நான் செஞ்ச எழுத்துப் பிழைதாங்க!! :) ஹி ஹி!!