பாஸ்போர்ட்.

‘ஹாப்பி பர்த்டே மது’ என்றேன்.
திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு ‘தேங்க்ஸ்’ என்றபடி அவசரமாகக் குளிக்கச் சென்றாள் மது என்கிற மதுவந்தி. என் மகள்.
காலை 5 மணிக்கு குளித்து முடித்துவிட்டு அவசரம் அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தவளிடம் ‘எல்லா டாக்குமெண்ட்ஸும் மறக்காக எடுத்துகிட்டியா?’ என்றேன்.
‘யெஸ் டாட். ஹவ் மெனி டைம்ஸ் வில் யூ ஆஸ்க் த சேம் திங்?’ என்று கோபப்பட்டாள்.
‘மோரோவர், இட்ஸ் ஆல் பிகாஸ் ஆப் யுவர் மிஸ்டேக். த ஒன் யூ டிட் சிக்ஸ்டீன் இயர்ஸ் அகோ’ என்று பொரிந்து தள்ளினாள்.

25 வருடத்திற்கு முன் நான் எப்படி இருந்தேனோ அதே மாதிரி இவள் இருப்பதாகத் தோன்றியது.
1997-ம் வருடம், இதேபோல காலை 3 மணிக்கு எழுந்து நான் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது சென்னையில் ஒரு வாடகை வீட்டில் (அ) ரூமில் தங்கியிருந்தேன். முதல்நாளே கிராமத்திலிருந்து என் அம்மாவும், பாட்டியும், தங்கையும் வந்திருந்தார்கள். அம்மா காலையிலேயே எழுந்து காஃபி போட்டுக்கொண்டிருக்க, பாட்டி கந்த சஷ்டி கவசம் சொல்லிக்கொண்டிருக்க, தங்கை என் சட்டையை அயர்ன் பண்ணிக்கொண்டிருந்தாள். காலை 5 மணிக்குள் போய் க்யூவில் நின்றுவிட வேண்டும். அன்று எனக்கு அமெரிக்க விசாவுக்கான அப்பாய்ண்ட்மெண்ட்.

4 மணிக்கு குளித்து முடித்துவிட்டு வந்து ‘இன்னுமா அயர்ன் பன்ற?’ என்று தங்கையை விறட்டினேன். ‘காஃபி குடிக்கிறியாப்பா?’ என்ற அம்மாவைப் பார்த்து ‘அதுக்கெல்லாம் இப்போ நேரமில்ல’ என்றபடி தங்கையிடம் இருந்து சட்டையை வாங்கி அவசரமாக அணிந்தேன். சஷ்டி கவசம் சொல்லி முடித்துவிட்டு விபூதி பூசிவிட வந்த பாட்டியிடம், ‘விபூதில்லாம் பூசிக்கிட்டு ஞானப்பழம் மாதிரி போயி நிக்கமுடியாது பாட்டி. உன் கூட பெரிய்ய்ய்யா தொல்ல’ என்றபடி புறப்படத் தயாரானேன்.

‘தம்பி, இன்னிக்கு திங்கக்கெழம! ஏழற ஒம்போது ராவுகாலம். எழற மணிக்குள்ள அமெரிக்க ஆபீஸுக்குள்ள போயிட முடியும்ல?’ என்ற அம்மாவின் மீது கோவமாக வந்தது. ‘எழற மணிக்குள்ள போகமுடியலன்னா ஒம்போது மணிக்குமேல போப்பா!!’ என்றார். பதிலேதும் பேசாமல் புறப்பட்டு ஓடினேன்.

5 மணியிலிருந்து 8 மணிவரைக் காந்திருந்து 8.10 மணிக்கு உள்ளே போனேன். ‘ராவுகாலத்தில் உள்ள போற! என்ன ஆகப்போகுதோ!!’ என்று மனது அம்மா சொன்னதை ஞாபகப்படுத்தி படுத்தியது. ‘H1 விசாவா? அமெரிக்க கம்பெனிக்கு போறீங்களா?? அந்தக் கம்பெனியோட டாக்ஸ் டாக்குமெண்ட்லாம் வெச்சிருக்கீங்களா??’-ன்னு முன்னால் நின்ற ஆந்திராக்காரன் பயத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினான்.

‘டு யு ஹாவ் த பிக்சர்ஸ் ஆப் த கம்பெனி இன் யூயெஸ்?’ என்று விசா அதிகாரி அமெரிக்க கம்பெனியின் புகைப்படம் கேட்டார். அதுமட்டும் இல்லை என்று சொல்ல ‘யூ ஹாவ் டு கோ அண்ட் கெட்டிட்’ என்றார். வேறு எதையும் சொல்லி சமாளிக்க முடியாமல் வீட்டிற்கு வந்தேன்.

வந்த கோவம் முழுவதையும், ‘ராவுகாலத்துல உள்ள போகாதேன்னு போகும்போதே சொன்னேனே கேட்டியா?’ என்று கேட்ட அம்மாவிடம் கொட்டி தீர்ந்துக்கொண்டேன்.

இன்று, மார்ச் 15, 2021 திங்கட்கிழமை, என் மகளுக்கு அப்பாய்ண்ட்மெண்ட். நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில். இன்றோடு பதினாறு வயது முடிவடைவதால், ‘பீப்புள் ஆஃப் இந்தியன் ஆரிஜின்’ என்ற வகையில் இந்தியன் சிட்டிசன் ஆகும் வாய்ப்புக்கான இண்டர்வியூ. இந்தியன் சிட்டிசன் ஆகிவிட்டால் வேலைவாய்ப்பிற்காக இந்தியா செல்ல விசா தேவைப்படாது. அவளை இந்தியாவில் பெற்றுக்கொள்ளாதது நான் செய்த தவறு என்று அடிக்கடி சொல்வாள். ஜீன்ஸ் பேண்ட்டும், டீ ஷர்டுமாகவே எப்போதும் இருக்கும் என் மகள், இன்று சுடிதாரில் தயாரானாள்.

‘ஆல் த பெஸ்ட்மா!!’ என்று நான் சொல்ல. ‘ஏழற மணிக்குள்ள உள்ள போய்டும்மா!!’ என்றாள் என் மனைவி.