சிறுகதை எழுதுவது எப்படி?

‘முத்தம்மாவின் முதல் முத்தம்’, ‘சங்கரன் B.E, என் காதலன்’, ‘ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா??’, ‘காதல் போயின் சாதல்’ இப்படி, கிராமத்துக் காதல், ஊரைவிட்டு ஓடிய காதல், கல்லூரிக் காதல் என பலவகைப்பட்ட காதல் கதைகளில், பலபேரை காதலிக்க வைத்த எனக்கு, என் சொந்தக் காதல் கதையை எழுதும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.

ஜானகி. அவளை நான் முதன் முதலில் சந்தித்தது என் வீட்டில்தான். அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து அப்போது ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. வீட்டுப்பொருட்கள் யாவும் தன்னுடைய இடம் எது என்று தெரியாமல் மூலைக்கு மூலை கிடந்தன. டிவியும் ரேடியோவும் ஒருவாரமாக மின்சாரம் உண்ணாமல் வாடிப்போய் மூலையில் கிடந்தன. கிழக்கு மேற்காகப் போடலாமா தெற்கு வடக்காகப் போடலாமா என்பது முடிவாகாததால் சோபா ஹாலுக்குக் குறுக்கே வட கிழக்காகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது. நான் ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதனாக’ எழுதிய முதல் சிறுகதை வந்த வாராந்திரத்திலிருந்து, ‘ஸ்ரீரங்கனாக’ எழுதிய சமீபத்திய குறுநாவல் வரை அத்தனை புத்தகங்களும் சோபாவின் மேல் கிடந்தன. அட்டைப்படங்களில் இருந்த அசினும், த்ரிஷாவும் ‘எப்போதான் எங்கள தூசுதட்டு எடுத்துவைக்கப் போறியோ!?’ என்பதுபோல அழுக்குப் பார்வை பார்த்தார்கள்.

‘சார்! சார்!!’ என்று அழைத்துக்கொண்டே வீட்டை நோட்டமிட்டபடி உள்ளே நுழைந்தாள் ஜானகி. ஒரிரு வினாடிகளுக்கு மேல் ஒரே இடத்தில் நில்லாமல் அவளது பார்வை, இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தது. அவள் கண்களில் ஒரு குறும்பு கலந்த கவர்ச்சி இருந்தது. பச்சை நிறத்தில் ரெடிமேடா, அல்லது துல்லியமாக அளவெடுத்து, தமிழ்நாட்டின் சிறந்த தையல்காரரால் தைக்கப்பட்டதா என்று தெரியாத அளவுக்கு கச்சிதமான சுடிதார் அணிந்திருந்தாள்.

‘சார் இருக்காங்களா?’ என்றாள்
‘நாந்தாம்மா சார். என்ன விஷயம்?’
‘உங்கபேரு ஸ்ரீரங்கனா சார்?’
‘ஆமாம்மா. நீ யாரு?’
‘என் பேரு ஜானகி, பக்கத்து வீட்ல குடியிருக்கோம். உங்க வீட்டுக்கு வர வேண்டிய லெட்டர் தவறுதலா எங்க வீட்டுக்கு வந்துடுச்சு. இந்தாங்க சார்’ என்று என்னை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்து லெட்டரை நீட்டினாள்.
‘அப்டியே அந்த டேபிள்ல வெச்சிடு!!’

டேபிளில் வைத்துவிட்டு வாசல் நோக்கி விரைந்தவள், வாசல் அருகே நின்று திரும்பி, ‘நீங்க எழுத்தாளர் ஸ்ரீரங்கனா சார்?’ என்றாள்.
‘ஆமாம்’ என்பதுபோல் நான் தலையாட்ட, ஒரு வினாடி என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஓடிவிட்டாள்.

இரண்டுநாட்களுக்குப்பின் மீண்டும் வந்தாள். இன்று இளஞ்சிவப்பு சுடிதார் அணிந்திருந்தாள். வெள்ளை துப்பட்டா அடிக்கடி சரிய, சரி செய்தவண்ணம் இருந்தாள். இப்பொழுது சோபா கிழக்கு மேற்காக இடம்பிடித்துக்கொண்டிருந்தது. த்ரிஷாவும் அசினும் அலமாரிக்குள் அடங்கியிருந்தார்கள். டிவி, மின்சாரத்தை விழுங்கிக்கொண்டு தெம்பாக இருந்தது.
டிவியில், ரஜினி, ‘வா! வா!! மஞ்சள் மலரே’ என்று ராதாவுடன் ஆடிக்கொண்டிருந்தார்.

‘சார் நீங்க நெஜம்மாவே எழுத்தாளர் ஸ்ரீரங்கனா சார்?’ ஜானகி படபடவென்று பேசியதற்கேற்ப கண்களும் படபடத்தன.

டிவி ‘ம்யூட்’டிவிட்டு, ‘ஆமா! உன் பேரு என்ன சொன்ன??’ மறந்துவிட்டவன் போல் கேட்டேன்.

‘ஜானகிசார். நான் உங்க தீவிர ரசிகைசார்’.
‘குமுதம் விகடன்லயெல்லாம் நீங்க எழுதின கதைல்லாம் படிச்சிருக்கேன் சார்’ மீண்டும் படபடத்தாள்.
‘ஓ!! ரொம்ப சந்தோஷம்!!’
‘வரும்போது உங்க அக்கா வெளில போறத பாத்தேன்! கோவிலுக்கு போறாங்களா சார்?? ‘
‘யாரு?’
‘உங்க அக்காசார்! அப்டியே, உங்க சாயல்!!’
‘ஓ மைதிலி!! ஆமா. கோவிலுக்குதான்!!’

‘சார், உங்க கதைன்னா எனக்கு கொள்ளை பிரியம் சார்.’
‘படிச்சு முடிக்காம வேற எந்த வேலையையும் பார்க்க மாட்டேன் சார்!!’
‘ஓடிப்போயி கல்யாணம் கட்டிக்கலாமா?- கதை என்னோட ஃபேவரிட் சார்!’
நான் பேசுவதைத் தவிர்த்து அவள் பேசும்போது செய்யும் சிறு சிறு சினுங்கள்களையும், வந்து வந்து போகும் கண்ணக்குழியையும் ரசித்துக்கொண்டிருந்தேன். வளைந்து வளைந்து நிமிர்ந்த அவள் புறுவங்கள் என் மீது அம்பு தொடுத்துக்கொண்டிருந்தன.

‘சார்! உங்க குறுநாவல்லாம் புத்தகங்கள்ல்லாம் வெச்சிருக்கீங்களா சார்? எனக்கு கெடைக்குமா சார்?’
‘அந்த ஷெல்ஃப்ல அசின், த்ரிஷா படம் போட்ட புத்தகங்கள் இருக்கும் பாரு!! எடுத்துக்கோ!!’
‘சார், உங்க கல்யாணம் நடந்தா காதல் கல்யாணம்-ன்னு ஒரு பேட்டில சொல்லியிருந்தீங்களே! உண்மையா சார்?’
பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டேன்.
‘உங்க காதல் அனுபவம் பத்தி கேட்ட ஒரு கேள்விக்கு, நீங்க சுஜாதா, பாலகுமாரன் எழுத்துக்களத்தான் காதலிக்கறதா சொல்லியிருந்தீங்க’
‘நீங்க நெஜம்மாவே வேற யாரையும் காதலிக்கலியா சார்?!’ கேட்ட பொழுது அவள் கண்களில் ஒரு சிறு மின்னல் தெரித்தது தெரிந்தது.
இதுவரைக்கும் இல்லை என்பதுபோல சிரித்தேன். அவள் கண்களில் பிறந்த மின்னல் என் கண்களை இனிமையாக தாக்கியதை உணர்ந்தேன்.

‘உங்க கிட்ட இவ்ளோ பக்கத்துல உக்காந்து பேசுவேன்-னு நெனைச்சுகூட பாக்கல சார்’
‘அடிக்கடி வந்து உங்ககிட்ட பேசலாமா சார்?’ பேசும் போது அவள் விட்ட அவசர மூச்சு என் மூச்சை திணறச்செய்தது.

டிவியில் சத்தமில்லாமல் ரஜினி மீனாவை வீணையாக வாசித்துக்கொண்டிருந்தார்.

‘சிறுகதை எழுதற எப்டின்னு எனக்கு சொல்லிக்கொடுங்க சார்!! ப்ளீஸ்’
‘நிச்சயமா சொல்லித்தர்றேன்!!’

‘நாளைக்கு வரவா சார்?’

‘இல்ல சனிக்கிழமை சாயங்காலம் வா!! மைதிலியக்கா சங்கட சதுர்த்திக்காக கோவிலுக்கு போய்டுவாங்க. அப்போ சொல்லித்தர்றேன்.’
சனிக்கிழமைக்காக இந்த நொடி முதலே காத்திருக்கத்த் தொடங்கினேன்.

‘சரி சார்!! போய்ட்டு வரேன் சார்!!’, அசினையும், த்ரிஷாவையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

சனிக்கிழமை வெளியில் செல்ல வேண்டிய வேலைகளையெல்லாம் சீக்கிரமாக முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
வீட்டில் நுழைந்ததும் அசினும் த்ரிஷாவும் டேபிள் மேல் இருந்ததை பார்த்ததும் வந்த மகிழ்ச்சி உள்ளிருந்து மைதிலி வெளிப்பட்டதும் மாயமாய் மறைந்தது.

‘நீ கோவிலுக்குப் போகல?’
‘இல்லங்க, பஞ்சாங்கப்படி நாளைக்குதான் சங்கட சதுர்த்தியாம்!!’

‘பக்கத்து வீட்டு பொண்ணு வந்துச்சா?’
‘ம்ம்ம்.. வந்துச்சுங்க. அது சரியான லூசு பொண்ணா இருக்குதுங்க!! என்னப்போயி உங்க சிஸ்டர்-ன்னு நெனைச்சுகிட்டு இருந்துதாம். நம்ம ரெண்டுபேருக்கும் ஒரே மாதிரி முகச்சாயலாம். எனக்கு சிரிப்புதான் வந்துச்சு. நான் உங்க சிஸ்டர் இல்ல வொய்ஃப்-ன்னு சொல்லிட்டு இருந்தேன். எடுத்துட்டு போன புத்தகத்தையெல்லாம் வெச்சிட்டு இப்போதான் போகுது! கூப்டவா!’ என்றாள்.

‘வெள்ளைப்புறா ஒன்று போனது கையில் வராமலே’-என்று டிவியில் ரஜினி பாடிக்கொண்டிருந்தார்.