கனவு.

‘கோகிலாட்ட சீக்கிரம் காஃபிய கொடுத்து அனுப்புங்க!!’ உரத்த குரலில் சொன்னார் கோகிலாவின் அப்பா.

பெண் பார்க்க வந்த மனோகரும் அவனது மாமா மாயியும் சோபாவில் உட்கார்ந்திருந்தார்கள். உறவினர் பெருசுகள் சில தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் உட்கார்ந்திருந்தன.

கோகிலாவின் உறவுக்காரச் சிறுவன் ஒருவன் ஓடிப்போய் மனோகரின் மடியில் ஏறிக்கொண்டான். வெட்கம், எதிர்பார்ப்பு, பதற்றம், அவசரம் என மாறுபட்ட உணர்ச்சிகள் மனோகரின் முகத்தில் வந்து வந்து போயின. முந்தின இரவு கண்ட கனவை ஒரு முறை அசைபோட்டுக்கொண்டான்.

அனைவருக்கும் காஃபி கொடுத்துவிட்டு கோகிலா ஓரமாக உட்கார்ந்தாள். மூலையில் உட்காந்திருந்த ஒரு பாட்டி பாக்கு இடிக்க தயாராகிக்கொண்டிருந்தாள்.

‘பொண்ணு நல்லா பாடுவாங்கன்னு சொன்னாங்க!!’ மனோகர் கோகிலாவின் அப்பாவைப் பார்த்து கேட்க, கோகிலாவின் பக்கம் திரும்பி ‘பாடும்மா’ என்றார் கோகிலாவின் அப்பா.

‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி’ என்று ஜானகி குரலில் இனிமையாக பாடத் தொடங்கினாள் கோகிலா.

‘உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்’
‘ஊமையைப் போலிருந்தேன்’
‘ஊமையைப் போலிருந்தேன்’

கோகிலாவுக்கு அதற்குமேல் பாடல் வரிகள் மறந்துவிட, மனோகர் ஜேசுதாஸ் குரலில் பாடலைத் தொடர்ந்தான்.

பாட்டியின் பாக்கு இடிக்கும் தாளத்திற்கு ஏற்ப தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.

மாயி மாமா தோளை ஆட்ட, கனவை அசைபோடுவதை நிறுத்திவிட்டு கோகிலா நீட்டிய தட்டில் இருந்து காஃபியை எடுத்துக்கொண்டான்.

அனைவருக்கும் காஃபி கொடுத்துவிட்டு கோகிலா ஓரமாக உட்கார்ந்தாள்.

காஃபியை குடித்துவிட்டு, கோகிலாவைப் பார்த்து ‘என்னை பிடிச்சிருக்கா?’ என்று கைகளை அசைத்து ஜாடையில் கேட்டான் வாய் பேச முடியாத மனோகர்.

‘பிடிச்சிருக்கு’ என்று கைகளை அசைத்தாள் கோகிலா.