ப்ரமோஷன்.

காட்சி – 1: கார்த்திகேயன் வீடு / நள்ளிறவு.
தூக்கிக்கொண்டிருந்த கார்த்திகேயன் அலறியடித்துக்கொண்டு எழுத்துகொள்கிறான். முகமெல்லாம் வியர்த்திருக்கிறது. அருகில் படுத்துறங்கிக்கொண்டிருந்த மனைவி மேகலா பதற்றம் சிறிதும் இல்லாமல் எழுந்து விளக்கை போடுகிறாள். அருகில் இருந்த தண்ணீர் சொம்பை எடுத்து அவனிடம் கொடுத்தபடி,

மேகலா : என்ன திரும்பவும் அதே கனவா?

கார்த்திகேயன் தண்ணீரை வாங்கி குடித்தபடி,
கார்த்திகேயன் : ம்ம்ம்ம்ம்
மேகலா : அதேமாதிரி பாலைவனமா?
கார்த்திகேயன் : ம்ம்ம்ம்ம்

கார்த்திகேயன் முகத்தில் இன்னும் பயத்தின் ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன.
மேகலா : சுட்டெரிக்கற வெய்யிலா?
கார்த்திகேயன் : ம்ம்ம்ம்ம்
மேகலா : சுத்திலும் தீவிரவாதிகளா? எல்லார் கையிலும் துப்பாக்கியா??
கார்த்திகேயன் : ஆமா!
மேகலா : உங்க கைல அதே நியூஸ் பேப்பரா??
கார்த்திகேயன் : உனக்கு நக்கலா இருக்குடி! எனக்கு குடிக்கற தண்ணி தொண்டைல எறங்க மாட்டேங்குது!!
மேகலா : இன்னிக்கு ஏதும் புதுசா வல்லயா கனவுல?
கார்த்திகேயன் : நியூஸ் பேப்பர நான் கைல வெச்சுகிட்டு முட்டிபோட்டுகிட்டு இருக்கேண்டி. கழுத்துல ஏதோ ஒன்னு மாட்டி விட்ருக்காங்க. அதுல யாரோட போட்டோவோ போட்டு என்னவோ எழுதியிருந்துச்சு. தெரிஞ்ச மொகம் மாதிரிதான் இருந்துச்சு. என்னதுன்னு உத்து பாக்கறதுக்குள்ள ஒருத்தன் என்ன கீழ தள்ளி சுட வந்துட்டான்.

மேகலா : அப்போதான் அலறி அடிச்சு எழுந்திட்டீங்களாக்கும். ஒங்களுக்கு வேற கனவே வராதா? ஒரு வாரமா இதையே சொல்லிப் படுத்தறீங்க? உங்களுக்கும் பாலைவனத்தும் என்ன சம்பந்தம்? ஒரு ரோஜாவனத்த சினிமால கூட பாக்காத ஆளு நீங்க!. பாலைவனம், மாலைவனம்-னுகிட்டு!! பேசாம படுத்து தூங்குங்க. மனுஷன நிம்மதியா தூங்க விடம!!
கார்த்திகேயன் : சரி சரி!! நீ தூங்கு.

என்றபடி பாத்ரூமை நோக்கி நடந்தான்.

காட்சி – 2 : கார்த்திகேயன் வீடு / காலை
குளித்து முடித்து அலுவலகம் செல்லத் தயாராகி பூஜையறை முன் வந்து நின்றான் கார்த்திகேயன்.

‘கணேசா! இன்னிக்கு சாயங்காலம் விருது அறிவிக்கப்போறாங்க. போன வருஷமே எனக்கு கெடைக்க வேண்டியது. சாயங்காலம் என்ன நடக்கப் போகுது, எனக்கு விருது உண்டா?, விருது கடைக்கறதுனால ஆஃபீஸ்ல எதாவது பிரமோஷன் உண்டா? இதையெல்லாம் கனவுலயாவது வந்து சொல்லுவன்னு பார்த்தேன். கண்ட கண்ட கனவுதான் வருதே தவிர நீ வந்து எதுவும் சொல்ல மாட்டேங்குற. என் கைல மட்டும் இப்போ ஒரு ரிமோட் இருந்தா, ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பட்டன அமுக்கி நேரா சாயங்காலத்துக்கு போயி யாருக்கு விருதுன்னு பார்த்துடுவேன். கணேசா! நீதான்ப்பா கவனிக்கணும்’-னு மனசுக்குள்ளயே நெனைச்சுகிட்டு,

கார்த்திகேயன் : வரேன் மேகலா!!

என்றபடி புறப்பட்டான்.

காட்சி – 3 : மௌண்ட் ரோடு மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் / பகல்.
இரண்டு பக்கங்களிலும் நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் விரைந்துகொண்டிருந்தன. நெரிசலான சாலையை கடந்து அலுவலகத்துக்குள் செல்கிறான். வழியில் வரும் நண்பர்கள் அவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். கார்த்திகேயன் சிரித்துக்கொண்டே வாழ்த்துக்களை வாங்கியபடி அலுவலகத்திற்குள் சென்றான்.

நண்பர் : உங்களுக்குத்தான் விருது கார்த்தி, ஆல் த பெஸ்ட்.
கார்த்திகேயன் : தாங்க்ஸ்.
சுரேன். இன்னொரு நண்பர் : குட் லக் கார்த்திக்.
கார்த்திகேயன் : தாங்க்ஸ் சுரேன்.

ரிஸப்ஷனிஸ்ட் : குட் மானிங் சார்.
கார்த்திகேயன் : குட் மானிங்.
ரிஸப்ஷனிஸ்ட் : குட் லக் சார்.
கார்த்திகேயன் : தாங்க்யூ.

அனைவருக்கும் காலை வணக்கங்களையும், வாழ்த்துக்களுக்கு நன்றியையும் சொல்லியபடி, ‘கார்த்திகேயன் – போட்டோ எடிட்டர்’ என்ற பெயர் ஒட்டப்பட்டிருந்த கண்ணாடிக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

காட்சி – 4 : அரசு பொது மருத்துவமனை / மதியம்.
அலுவலகத்திற்குள் நுழைந்து அரை மணி நேரத்தில் அரசு பொது மருத்துவமனை நோக்கி விரைந்தான். அரசு பொது மருத்துவமனை வாசலில் மருத்துவர்கள் அணி அணியாகத் திரண்டு, பேரணி நடத்தி ‘தமிழக அரசே! தமிழக அரசே!! மருத்துவர்களை தண்டிக்காதே!!’ ‘கோரிக்கைகளை நிறைவேற்று!’ என்று கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர். கார்த்திகேயனின் ரிப்போர்ட்டர் நண்பன், அந்தக் கூட்டத்தை முன்னின்று நடத்திக்கொண்டிருந்த மருத்துவரிடம் பேட்டியெடுத்துக்கொண்டிருக்க, கார்த்திக் போராட்டக் காட்சிகளை பல்வேறு கோணங்களில் போட்டோ எடுத்துக்கொண்டான்.

காட்சி – 5 : மருத்துவமனை வளாகம் / மாலை.
மருத்துவமனைக்குள் சென்று போராட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளையும் கார்த்திகேயனின் ரிப்போர்ட்டர் நண்பன் பேட்டி எடுக்க கார்த்திகேயன் போட்டோ எடுத்துக்கொண்டான். அப்பொழுது கார்த்திகேயனின் செல்போன் அழைக்க, காமெராவை கழுத்தில் தொங்கவிட்டுவிட்டு செல்போனை எடுத்தான்.

கார்த்திகேயன் : ஹலோ!!
மறுமுனை : -
கார்த்திகேயன் : யெஸ் சார்!!
மறுமுனை : -
கார்த்திகேயன் : ஷ்யூர் சார்!!
மறுமுனை : -
கார்த்திகேயன் : வில் பி தேர் இன் 15 மினிட்ஸ் சார்!!

சீனியர் எடிட்டர் அவசரமாக அழைப்பதாக நண்பரிடன் சொல்லிவிட்டு அவசரமாகப் புறப்பட்டான்.

காட்சி – 6 : அலுவலகம் / மாலை
அலுவலகத்தின் ரெஸப்ஷனிலோ மற்ற இடங்களிலோ யாரும் இல்லாததை கவனிக்காமல் அவசரமாக அலுவலகத்திற்குள் நுழைந்த கார்த்திகேயனுக்கு அங்கே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக நண்பர்கள் ‘சர்ப்ப்ரைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று கத்தி மலர்களைத் தூவினார்கள். சென்ற வருடத்திற்கான சிறந்த ஃபோட்டோ எடிட்டர் விருது அவனுக்கே கிடைத்திருப்பதாக அறிவித்தனர். அனைவரும் கைகளைத் தட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

நண்பர்1 : கங்ராஜிலேஷன் கார்த்திக்.
நண்பர்2 : வாழ்த்துக்கள் கார்த்தி.
நண்பர்3 : கங்ராஜிலேஷன் கார்த்திகேயன்.
நண்பர்4 : வாழ்த்துக்கள் கார்த்திக்.
நண்பர்5 : கங்ராஜிலேஷன் கார்த்திகேயன்.

கார்த்திகேயன் : தாங்க்யூ.
கார்த்திகேயன் : தாங்க்யூ வெரி மச்.
கார்த்திகேயன் : ரொம்ப நன்றி.
கார்த்திகேயன் : தாங்க்யூ சோ மச்.

சீனியர் நியூஸ் எடிட்டர் : கங்ராஜிலேஷன் கார்த்திகேயன்.
கார்த்திகேயன் : தாங்க்யூ வெரி மச் சார்.
சீனியர் நியூஸ் எடிட்டர் : இன்ஃபேக்ட் டபுள் கங்ராஜிலேஷன் என்ற சொல்ல,

கூட்டத்தினர் அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாகி சீனியர் நியூஸ் எடிட்டரையும், கார்த்திகேயனையும் மாறி மாறி பார்த்தனர்.

சீனியர் நியூஸ் எடிட்டர் : யெஸ்! யு ஹாவ் பீன் ப்ரமோட்டட் ஆஸ் சீனியர் போட்டோ எடிட்டர்!!

கூட்டத்தினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்து வாழ்த்தினார்கள். சீனியர் நியூஸ் எடிட்டர் கார்த்திகேயனுக்கு வாழ்த்து சொல்லி, கார்த்திகேயனின் புகைப்படம் போடப்பட்டு, ‘கார்த்திகேயன், சீனியர் போட்டோ எடிட்டர்’ என்று அச்சிடப்பட்ட புதிய ஐடெண்டிஃபிகேஷன் கார்டினை வழங்கினார். அந்த ஐடி கார்டை பெரிய சைஸில் பிரிண்ட் போட்டு அதை மாலையாக அணிவித்தபடி.

சீனியர் நியூஸ் எடிட்டர் : கங்ராஜிலேஷன் கார்த்திகேயன்.
கார்த்திகேயன் : தாங்க்யூ சார்
என்றபடி மாலையாக போடப்பட்ட அந்த பெரிய சைஸ் ஐடெண்ட்டிஃபிகேஷன் கார்டைப் உற்றுப்பார்த்தான். அதை ஏற்கனவே எங்கேயோ பார்த்தது போலத் தோன்றியது.

சீனியர் நியூஸ் எடிட்டர் : ஹியர் ஈஸ் த ஆர்டர்.
என்றபடி ஆர்டரை நீட்டினார்.

வாங்கிப் பிரித்துப் படித்தான்.

டியர் கார்த்திகேயன், சென்ற வருதத்தின் சிறந்த போட்டோ எடிட்டர் விருது வாங்கியதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அதைப் பாராட்டும் விதமாக, தங்களை சீனியர் போட்டோ எடிட்டராக ப்ரமோட் செய்வதில் மகிச்சியடைகிறோம். உங்களுக்கான புதிய அசைன்மெண்ட்டாக, உங்கள் முழுத்திறமையையும் பயன்படுத்தும் விதமாக, உங்களை ஈராக்கில் நடக்கும் அமெரிக்க ஈராக் போர் காட்சிகளை படம்பிடிப்பதற்காக ஈராக் அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

கார்த்திகேயனின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் காணாமல் போயிருந்தன.