டாலர் தேசம்.

எனக்கும் வரலாற்றுக்கும் கொஞ்சம் நஞ்சம் இல்ல, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம். ஆறாவது படிச்ச காலத்துல இருந்தே வெறும் பாஸ்மார்க் மட்டுமே வாங்கி பாஸ் பண்ணிட்டுதான் வந்தேன். அசோகர் எந்த வருஷம் மரம் வெச்சாரு, எந்த வருஷம் ரோடு போட்டாரு-ன்னு ஞாபகம் வெச்சுக்கறதோ, ஔரங்கசீப், எத்தன சீப்பு வெச்சிருந்தார்னோ ஞாபகம் வெச்சுக்கறது ரொம்ப பேஜாரான விஷயம் எனக்கு. எப்டியாவது வரலாறு புவியியல்ல பாஸ்பண்ண வெச்சுடு, மறக்காம வந்து தேங்கா ஒடைக்கறேன்-னு புள்ளையார்கிட்ட வேண்டிக்கிட்டு, மறக்காம போயி பலதடவ தேங்கா ஒடைச்சிருக்கேன்.

மொதல் மொதலா விரும்பி படிச்ச வரலாற்று புத்தகம் பா.ராகவன் எழுதின ‘பாக். ஒரு புதிரின் சரிதம்’தான். அப்புறம் அவர் சமீபத்துல, குமுதம் ரிப்போர்ட்டர்ல எழுதின ‘நிலமெல்லாம் ரத்தம்’ தொடர். பக்கத்துலயே ஒக்காந்து கதை சொல்ற மாதிரி சொல்லுவாரு/எழுதுவாரு.

இந்த முறை இந்தியா போயிருந்தப்போ அவர் எழுதின ‘டாலர் தேசம்’ புத்தகம் வாங்கிட்டு வந்தேன். அமெரிக்கா கண்டத்துல கொலம்பஸ் வந்து எறங்கின காலத்துல ஆரம்பிச்சு வரலாற்று கதை சொல்றாரு. இதுவும் தொடரா வந்ததுதான். அப்புறம் புத்தகமா வெளியிட்டிருக்காங்க. நியூ ஜெர்ஸி, நியூ யார்க், பாஸ்டன், வாஷிங்டன்-ன்னு நாங்க அடிக்கடி சுத்துற எடங்களுக்கு பின்னாடி எவ்ளோ வரலாறு இருக்கு. பக்கத்துலயே இருக்கற ஃப்பிலடெல்ஃபியால எவ்ளோ முக்கியமான யுத்தங்கள் நடந்திருக்கு-ன்னு கேக்கும்போது ஆச்சரியமாவும் வியப்பாவும் இருக்கு. ‘இது தெரியாம இவ்ளோநாள் இருந்துட்டேன் சாமி’-ன்னு விவேக் படத்துல தாமு சொல்ற மாதிரி பல எடங்கள்ல சொல்லத்தோனுது.

‘Brave Heart’ திரைப்படம் பாத்ததுல இருந்து, வரலாற்றுப் படங்கள் மேலயும் ஒரு ஆர்வம் வந்துச்சு. வரலாற்றுத் திரைபடங்கள்ல, வரலாற்று நிகழ்வுகள அப்டியே படம் பிடிச்சு காட்டினாலும், ஒன்னர மணி நேரத்துக்குள்ள ஒரு பெரிய கதைய சொல்ல வேண்டிய அவசரம் அவங்களுக்கு இருக்கும். அது இவருக்கு இல்ல. கதை போற மெயின் ரோட்ல கடிவாளம் போட்டுகிட்டு ஓடாம, சாலையோர டீக்கடைல உக்காந்து டீ குடிச்சுட்டு, டிபன் சாப்டுட்டு பொறுமையாத்தான் போறாரு.

‘சரி! இதயெல்லாம் ஏன் இங்க சொல்ற’-ன்னு கேக்கறீங்க!!
நமக்குதான் வரலாறு, வருஷங்கள்னா தூரமாச்சே. அதுனால நான் படிக்கற முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகள (அ) காட்சிகள இங்க எழுதி வெக்கலாமேன்னு பாத்தேன். இதுவரைக்கும் இந்த புத்தகத்த வாங்கிப் படிக்காத நண்பர்கள் நான் சொல்ற செலத படிச்சுட்டு, அப்புறம்கூட அந்த புத்தகத்த வாங்கிப் படிக்கலாம். இல்ல, புத்தக சைஸ(800+ பக்கங்கள்) பாத்து பயந்து படிக்காம விட்ட நண்பர்கள், நான் சொல்ற சிலத மட்டுமாவது தெரிஞ்சுகலாம் இல்லயா.
என்ன சொல்றீங்க?? என்கூட வரலாறு படிக்க வர்றீங்களா??

முதல்ல ஒரு சின்ன பிட்டு. (பிட்டு-ன்னா பொய் இல்லீங்க. நிஜம்). கூட வேல பாக்கற அமெரிக்கர்களுக்கே ஒரு ஆச்சர்யத்த ஏற்படுத்தின பிட்டு.
அமெரிக்க சுதந்திரப் போர்ல ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ முக்கியப் பங்கு வகிச்சு சுதந்திரந்துக்கு வழி வகுத்தாரு(காந்திஜி மாதிரி அற வழில இல்ல. அறுவா வழில)-ன்னும், அதுனால அவர் அமெரிக்காவின் தந்தை-ன்னு அழைக்கப்படறாருன்னும், சுதந்திரத்துக்கு அப்புறம் அவரே அமெரிக்காவோட முதல் ஜனாதிபதியானார்-னும் படிச்சிருக்கலாம்.

ஆனா அமெரிக்கால போர் முடிஞ்ச வருஷம் 1783. ஜி.டபிள்யூ முதல் ஜனாதிபதியான வருஷம் 1789. இந்த இடைப்பட்ட காலத்துல ஏழுபேர் ஜனாதிபதியா இருந்திருக்காங்க. அவங்களையெல்லாம் ஒரு பூதம் விழுங்கி ஏப்பம் விட்றுச்சாம்!!