ஹௌவ்யூடூயின்?

என்னோட உற்ற நண்பனோட அண்ணன் ஒருத்தர போன மாசம் சந்திச்சேன். அவருக்கு ஒரு அஞ்சு வயசு மகன். அமெரிக்கன் சிட்டிசன். ரொம்ப கஷ்டப்பட்டு அவன தமிழ்ல பேசவெக்கணும்-னு முயற்சி செஞ்சோம். முடியல. அவன் பேசின நாலு தமிழ் வார்த்தைகள் வடை, பொங்கல், கில்லி, விஜய். சக்கரப் பொங்கல some kind of பொங்கல்-ன்னான். தமிழ்ல பேசினா புரிஞ்சுக்கறான். ஆனா பேச முடியல. ஆங்கிலம் அவ்ளோ ஊறிடுச்சு அவனுக்குள்ள. ஆங்கிலம் அவ்ளோ ஊறிடுச்சு அமெரிக்கால. ஆமா, அமெரிக்காவுக்கு ஆங்கிலம் எப்டி வந்துச்சு. அமெரிக்காவோட கம்பேர் பண்ணினா சின்ன நிலப்பரப்புதான் இந்தியா. ஆனா முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசறோம். ஆனா அமெரிக்கா முழுசும் எப்டி ஆங்கிலம் பேசறாங்க??
காலத்த அப்டியே கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாப்போமா??

1492 வது வருஷம்தான் கொலம்பஸ் அமெரிக்காவ கண்டுபிடிக்கறார். அதாவது உலக வரைபடத்துல அமெரிக்கா-ன்னு ஒரு கண்டம் இருக்கறத கண்டுபிடிச்சே சுமாரா ஐனூத்தி சொச்சம் வருஷம்தான் ஆகுது. (வட அமெரிக்கா தென்னமெரிக்கா-ன்னு ரெண்டெல்லாம் அப்போ இல்ல) அப்போ அமெரிக்கால ஆதிவாசிகள்தான் இருந்திருக்காங்க. ‘ஓ..ஊ..ஓ..ஊ..ஓ..ஊ..ஓ..ஊ..’ ‘ஊஹூ…’ ‘ஓ..ஊ..’-ன்னு டார்ஜான் மொழில பேசிட்டு இருந்திருக்காங்க. கொலம்பஸ்க்கு அப்புறம் அமெரிகோ வெஸ்புச்சி என்ற இத்தாலியர் அமெரிக்காவுக்கு ஒரு விசிட் வந்துட்டு, பயண விவரங்கள ‘புதிய உலகம்’-னு ஒரு புத்தகமா எழுதியிருக்காரு. அமெரிக்காவ உலகத்துக்கு அறிமுகம் பண்ணின புத்தகம் இதுதான்.

அந்தக்காலத்துல, அதாவது 1500-கள்ல போப்பாண்டவர்கள் ரொம்ப அதிகாரம் பெற்றிருந்தவங்களா இருந்திருக்காங்க. ஐரோப்பிய நாடுகள் அத்தனையும் அவர்கள் சொல்படி கேட்ட காலம். 1494-வது வருஷம் போப்பாண்டவரா இருந்த அலெக்ஸாண்டர், வீட்டுக்கு நடூல விசு கோடுபோட்ட மாதிரி, அமெரிக்கா மேப்-ப எடுத்து குறுக்க ஒரு கோட்ட போட்டு, கோட்டுக்கு கிழக்குபக்கம் போர்ச்சுகீசியர்களுக்கும், மேற்குபக்கம் ஸ்பெயின்காரங்களுக்கும் சொந்தம்-னு சொல்லிட்டாரு.

உடனே போர்ச்சுகீசியர்களும், ஸ்பெயின்காரங்களும் அமெரிக்கா பக்கம் வந்து குடியேற ஆரம்பிச்சாங்க. 1513 வது வருடம் ஸ்பானியர்கள் ஃப்ளோரிடா பக்கமா வந்து மெக்ஸிகோ பக்கம் குடியேற ஆரம்பிச்சாங்க. அப்டியே தென்னமெரிக்கால பெரும்பகுதியையும் மெக்ஸிக்கோவையும் ஆக்கரமிச்சாங்க. (மெக்ஸிக்கோ ஃபுள்ளா ஸ்பானிஷ் எப்டி வந்துச்சுன்னா இப்டிதான்)

அதுவரைக்கும் குச்சி ஐஸ் சாப்டுக்கிட்டு இருந்த இங்லாந்து, ஹாலந்து, ஃப்ரான்ஸ் மாதிரி நாடுகள்லாம் அப்போதான் முழிச்சுகிட்டாங்க. கத்தோலிக்க மத குருவான போப்பாண்டவர் சொல்றத மீறி அமெரிக்காவுக்குள்ள வரணுமே!! உடனே, இங்கிலாந்து தன்ன ப்ராட்டஸ்டண்ட் தேசம்-னு அறிவிச்சுட்டு, இனிமே போப்புக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சத்தமா சொல்லிட்டு, சூட்டோட சூடா அமெரிக்கா நோக்கி களம்பிட்டாங்க!! பின்னாடியே ஹாலந்தும், ஸ்பெயினும் அதே வழில அமெரிக்காவ நோக்கி களம்பிட்டாங்க.

வர்ஜீனியா பக்கமா வந்து அமெரிக்கால கால வெச்சு, ஆங்கிலேய காலனிகள அமைக்க ஆரம்பிச்சாங்க இங்கிலாந்துகாரங்க. இங்கிலாந்து மன்னருக்கு கீழ இயங்கற காலனிகள். ‘Hey! This place is kind’a cool!!’-ன்னு அமெரிக்கால மொதல்ல ஆங்கிலம் பேசுனவங்க அவங்கதான்.

இங்கிலாந்து காரங்களுக்கு முன்னாடி இராஜராஜ சோழன் இந்தப் பக்கம் வந்து காலனிகள அமைச்சிருந்தா, என் நண்பனோட அண்ணன் மகன் சுத்த தமிழ் பேசியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்!!