உயிரும் நீயே! உடலும் நீயே!!

டாலர் தேசம் பத்தி எழுதறதுக்கு முன்னாடியே எழுதணும்-னு நெனைச்ச சில விஷயங்கள இப்போ எழுதிடறேன்.

மொதல்ல இந்த பாட்டு.

பவித்ரா படத்துல, உன்னிகிருஷ்ணன் பாடின பாட்டு. A.R.ரகுமான் இசை. உன்னிக்கு தேசிய விருது வாங்கித் தந்த ரெண்டு பாடல்கள்ல ஒன்னு. (இன்னொன்னு காதலன் படத்துல வந்த ‘என்னவளே அடி என்னவளே’!!).

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே!
உன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே!!

இந்தப் பாட்ட உருக்கமா எத்தனையோ தடவ கேட்ருக்கேன்.

அடுத்து வர்ற வரிகள கொஞ்சம் கவனிங்க.

விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதியில்லை
சாமி தவித்தான் தாயை படைத்தான்.

பலதடவ உருக்கமா கேட்டுட்டு அப்டியே விட்ருவேன். ஆனா சமீபத்துல கேட்டப்போ ஏதோ ஒன்னு இடிச்சுது. விண்ணையும், மண்ணையும், காற்றையும், ஒளியையும், மழையையும் படைச்சதுனால சாமிக்கு நிம்மதி இல்லாம போய்டுச்சா?!?! சாமி தவிச்சு போயிட்டாரா?? அதுனால தாயை படைச்சாரா?

விண்ணும், மண்ணும், காத்தும் கடலுமா எத்தனையோ மில்லியன் ஆண்டுகள் ஜாலியா சுத்திகிட்டு இருந்த இந்த பூமில, மனித சமுதாயத்தோட மொதல் தாய சாமி படைச்சதுல ஆரம்பிச்சு இன்னிக்கு வரைக்கும் எவ்ளோ மாற்றங்கள். அணுகுண்டுகள், கன்னி வெடிகள்-ன்னு பூமிய காயப்படுத்தி, ஓசோன்ல ஓட்டை போடற அளவுக்கு பண்ணின மனித சமுதாயத்தோட முதல் தாய படைச்சுட்டு சாமி நிம்மதியா வெக்கேஷன் போய்ட்டாறோ!!