இலவசம்.

நான் படிக்கற புத்தகங்கள்ல சொல்ற நல்ல விஷயங்களையும், கத்துக்கற விஷயங்களையும் பத்தி மட்டும் எழுதலாம், நம்ம ஊர்ல நடக்கப்போற தேர்தல் பத்தி எழுத வேண்டாம்-ன்னுதான் நெனைச்சுகிட்டு இருந்தேன். நேத்து வெளியான தி.மு.க வோட தேர்தல் அறிக்கைய படிச்சப்புறம் இந்த பதிவ எழுதாம இருக்க முடியல.

தேர்தல் அறிக்கைல முக்கியமான ஐட்டங்கள் சில.

* மகளிர் மனம் மகிழ்ந்து பொது அறிவு பெற்றிட வீடுதோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி.
* ஏழை எளிய தாய்மார்களுக்கு எரிவாயு அடுப்பு இலவசம்.
* நிலமற்ற ஏழை எளிய குடும்பங்களுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம்.

இலவசம்-ன்னாலே ஏமாத்துவேலை-ன்னு மக்களுக்கு புரியாதா? யார் உழைச்சு சம்பாதிச்ச காசுல இலவசமா T V கொடுக்கறாங்க? எங்கே இருந்து வரும் காசு எல்லோருக்கும் இலவச கேஸ் அடுப்பு கொடுக்க? தி.மு.க கட்சி நிதியில இருந்து கொடுக்கறாங்களா? அரசு கஜானா-வா?

ஓட்டு போடற மக்கள் இதையெல்லாம் யோசிக்க மாட்டாங்களா? இலவசமா ஒரு ரூபா தர்றோம்ன்னு சொன்னாங்கன்னா 10 ரூபா ஆதாயம் எதிர்பாக்கறாங்கன்னு மக்களுக்குத் தெரியாதா? இலவசமா இதத் தர்றோம் அதத் தர்றோம்-ன்னு சொல்றவங்ககிட்ட எப்டித் தருவ-ன்னு கேக்க மாட்டாங்களா?

கஜானாக்கு வேட்டு வைக்கற இதற திட்டங்கள்.
* விவசாயிகள் வேதனை தீர கூட்டுறவு கடன்கள் அறவே தள்ளுபடி.
எல்லா விவசாயிகளுக்குமா, எவ்ளோ ரூபா இழப்புன்னு கணக்கு வெச்சிருக்காங்களா?

* மீண்டும் திருமண நிதி உதவித் திட்டம் 15 ஆயிரம் ரூபாயாக உயர்வு.
இதுனால மக்களுக்கு என்ன நன்மைன்னு எனக்கு புரியல. உங்களுக்கு புரியுதா?

* கர்ப்பிணி பெண்களுக்கு பேறு கால உதவி மாதம் ஆயிரம் ரூபாய் ஆறு மாதங்களுக்கு.
அரசு மருத்துவமனைகள்ல சிறப்பான மருத்துவம் வழங்கப்படும்-னு சொல்லுங்க நியாயம். ஆயிரம் ரூபாவா? வருஷத்துக்கு ஒன்னு பெத்துகலாம் போலருக்கே!! அதுவும் ஓகேதான். ஓட்டுபோட இன்னும் நெறைய பேர் பொறப்பாங்களே. ‘ஆமா, மாசம் ஆயிரம் ரூபா கொடுக்க பணம் எங்கேயிருந்து வருது’-ன்னு யாரு கேக்கப்போறா.


* சினிமா வெளிப்புற காட்சி படப்பிடிப்புக்கு ஜெயலலிதா அரசு உயர்த்தியுள்ள கட்டணங்களை பெரிதும் குறைப்போம்.
* அ.தி.மு.க., ஆட்சியில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள், ரயில் கட்டண அளவுக்கு குறைக்கப்படும்.

இதுனால கஜானால ஏற்படற இழப்புகள சமாளிக்க என்ன வழி பண்ணப் போறாங்க?


* அ.தி.மு.க., ஆட்சியில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை அதே இடத்தில் நிறுவப்படும்.
* நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை மற்றும் மணி மண்டபத்தை விரைவில் அமைப்போம்.

அடடா!.. Great!!

யார் யாரெல்லாம் எந்தெந்த விஷயத்த கேட்டா சந்தோஷப்படுவாங்க, எப்டியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு ஓட்டு போடுவாங்கன்னு யோசிச்சு யோசிச்சு எழுதியிருக்காங்க.

விவசாயிகள் மாதிரி, நெசவாளிகளுக்கும் இலவச மின்சாரம் அப்டீங்கறாங்க. இலவச மின்சாரம் கொடுத்தா அவங்க தயாரிக்கற துணியெல்லாம் வித்துடுமா? துணிகள விக்கறதுக்கு உதவி? இந்த வருஷத்துல இருந்து கைத்தறி நெசவாளர்கள் தயாரிக்கற துணிலதான் அரசு ஊழியர்களுக்கு சீருடைகள் தைத்து வழங்கப்படும்-னு சொல்லுங்கன்னு மக்கள் யாராவது கேக்கவா போறாங்க? இலவசமா கேஸ் ஸ்டவ் வந்தா சரிதான்!!

இந்த வருஷம் நல்லா மழை பொழிஞ்சுடுச்சு. அடுத்த வருஷம் விவசாயத்துக்கு தண்ணி? ஊர் ஊரா குளங்கள சீரமைக்கணும்-னு தண்ணி இல்லாதப்போ எல்லா மக்களும் பேசினாங்க. இப்போ மறந்துட்டாங்க. தேர்தல் அறிக்கைல அது விஷயமா எதையும் எதிர்பார்க்கல. இன்னும் இருவது வருஷத்துல இந்தியால தண்ணிப் பஞ்சம் வரப்போகுதுன்னு உலக வங்கி சொல்லுது. அதுபத்தி நமக்கு என்ன கவலை. அதான் இலவசமா ரெண்டு ஏக்கர் நிலம் வருதே!!

சுனாமி மாதிரி பேரிழப்பு வந்தா மக்கள பாதுகாக்க, கடலோர கிராமங்கள்ல பாதுகாப்பான ஷெல்ட்டர்கள் கட்டலாம், பொருளாதார இழப்புகள சமாளிக்க, சின்னச் சின்ன படகுகளையும் இன்ஷியூர் பண்ணலாம், மீனவர்களுக்கு லைஃப் இன்சூரண்ஸ் பண்ணலாம்-னெல்லாம் பேச்சு அடிபட்டுச்சு. அதெல்லாம் இப்போ எதுக்கு? அதான் இலவசமா T.V வருதே!!

நேத்து காலைலதான், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் எழுதின ‘எழுச்சி தீபங்கள்’ புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன். மனசுல நெறைய எழுச்சியோட போயி இரவு செய்திகள் பார்த்தேன். இலவச தீபங்கள்தான் எறிஞ்சுது. மனசு கேக்கல. அதான் உங்க கிட்ட கொட்டிட்டேன்.