ஒரு எழுச்சி தீபம்.

இந்த அரசியல் விளையாட்டுகளயெல்லாம் பாத்து மனசு கேக்காமதான் காலைல இலவசம் பத்தி சொன்னேன். அதே மூடோடதான் சாயங்காலம் ‘எழுச்சி தீபங்கள’ பிரிச்சு, விட்ட பக்கத்துல இருந்து தொடர்ந்தேன். அடுத்த பக்கதுல கலாம் அவர்கள் சொன்ன விஷயமே ஒரு எழுச்சி தீபத்த ஏத்தி வெச்சமாதிரி இருந்தது. அது உங்களுக்காக…

ஒரு சமயம், ஒரு குழந்தை என்னிடம் கேட்டது. நாம் மகாபாரதம் படித்திருக்கிறேனா என்றும் அப்படி படித்திருந்தால், அதில் என்னைக் கவர்ந்த கதாபாத்திரம் யார்? என்றும் அந்தக் குழந்தை கேட்டது. நல்லது கெட்டது என்ற மனித இயல்பின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிக்கும் பன்முகப் பரிமாணம் கொண்ட கதாபாத்திரங்கள் நிறைந்தது அந்தக் காவியம். என்னைக் கவர்ந்த கதாபாத்திரம், ‘விதுரர்’ என்று அந்தக் குழந்தையிடம் சொன்னேன். அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறிழைக்கும்போது, துணிச்சலாக எதிர்த்தவர் விதுரர். அதர்ம ஆட்சி செய்த கொடுங்கோலன் முன்னே எல்லோருமே மண்டியிட்ட போது, தனித்து நின்று மாற்றுக் கருத்தைத் தைரியமாக எடுத்துரைத்த அஞ்சாநெஞ்சர், விதுரர்.

இன்றோ, நமது தலைவர்களிடையே நிஜமான ஒரு விதுரரைக் காண்பது வெகு அரிது. அப்படிப்பட்ட ஞானம் நிறைந்த ஒருவரைக் கற்பனை செய்து பார்ப்பதே நமக்குக் கடினமான காரியம். அப்படிப்பட்ட ஞானத்தை எட்டுவதை நமது குறிக்கோளாகக் கொள்வது நமக்கு அதைவிட மிகவும் கடினம். இன்றைய பொது வாழ்க்கையின் தராதரம், தரம் தாழ்ந்த பேச்சு, அளவு கடந்த அகம்பாவம், ஆத்திரம், பேராசை, பொறாமை, வெறுப்பு, கொடூரம், அடங்காத இச்சை, அச்சம், துயரம், குழப்பம் என இத்தனையும் நம்பிக்கையைப் பெரிதும் குலைக்கும் வகையில் தலைவிரித்தாடுவது மிகவும் கவலைக்குரிய நிலவரம். எனக்குள்ளே ஒரு புதிய தீர்மானம் உதயமாவதை உணர்ந்தேன்.

எனது மிகவும் முக்கியமான இந்தத் தீர்மானத்தின்படி இந்திய தேசத்தின் நிஜமான சுயத்தின் இயல்பை அதன் குழந்தைகளிடம் கண்டுபிடிப்பதற்கு உதவுவது என்று முடிவு செய்தேன். எனது சொந்த வேலை, ஒரு மனிதன் என்ற முறையில் எனது நிலை, எல்லாமே பின்னுக்குத் தள்ளப்பட்டன. எனது அறிவியல் தொழில், எனது குழுக்கள், எனது விருதுகள் அனைத்துமே இரண்டாம்பட்சம் ஆகிவிட்டன. இந்தியா என்ற நிலையான ஞானக் கருவூலத்தின் ஓர் அங்கமாக இடம்பெற வேண்டும் என்று நான் விரும்பினேன். குதூகலம் பொங்கும் குழந்தைகளுடம் உரையாடி, கருத்துப் பரிமாற்றம் செய்வதன் மூலம் எனக்கு நானே மறுவடிவம் கொடுத்துக்கொள்ள முடியும் என்றும், நமக்குள்ளே உறைந்துள்ள, உள்ளார்ந்த உயர்ந்த சுயத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பினேன்.

இன்னும் நெறைய விஷயங்கள் சொல்றாரு. என் மனசுல அப்பப்போ எழற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ற மாதிரி இருந்துச்சு. ஒவ்வொரு பக்கத்துலயும் அவரோட உயர்வான எண்ணங்கள் மின்னுது.