இந்தியப் பெருமிதம். 1.

‘அந்த நாட்ல அத கண்டுபிடிச்சான், இந்த நாட்ல இத கண்டுபிடிச்சான்’-ன்னு மத்த நாட்டு கண்டுபிடிப்புகளோட பெருமைய பேசறவங்கள பாத்திருக்கோம். அவங்க இந்தியாவோட இந்தியர்களோட கண்டுபிடிப்புகள கண்டுக்கவே மாட்டாங்க!
விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும், கணித ஆராய்ச்சிகளுக்கும் இந்தியர்களோட பங்கு ஏராளம். Infact, இந்தியர்களோட பங்கு ஸ்ட்ராங்கான அடித்தளம்-ன்னுகூட சொல்லலாம்.
இந்தியர்களோட பங்கு பத்தி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ‘எழுச்சி தீபங்கள்’ புத்தகத்துல சொல்ற விஷங்கள எழுதறேன். தங்களுக்கு பிடிச்ச தலைவர் பேர, மகனுக்கோ, நடிகை பேர மகளுக்கோ வெக்கறவங்கள பத்தி நமக்கு தெரியும். ஆரியப்பட்டா, பாஸ்கரா-ன்னு இந்த அறிஞர்கள் பேயர்கள, அப்துல் கலாம் அவரோட குழந்தைகளுக்கு வெச்சிருக்காரோ!!.

குசுமபுரம் என்ற இடத்தில் (இன்றைய பாட்னா) கி.பி. 476-ல் பிறந்த ஆரியபட்டர் வான சாஸ்திர வல்லுநராகவும், கணித மேதையாகவும், பெரும்புகழ் பெற்று விளங்கினார். அந்தக் காலக்கட்டத்தின் ஒட்டு மொத்தமான, கணித அறிவின் வடிவமாகப் பெருமை பெற்றுத் திகழ்ந்தவர். இரண்டு பகுதிகளாக ஆரியப்பட்டீயத்தை அவர் வடித்தபோது அவருக்கு 23 வயதுதான். அரித்மெடிக், அல்ஜீப்ரா, ட்ரிக்னாமெண்ட்ரி மாற்றும் வான சாஸ்திரத்தை உள்ளடக்கிய ஒப்பற்ற நூல், ஆரியப்பட்டீயம்.
ஒரு வட்டத்தின் குறுக்களவு மற்றும் குறுக்களவின் விகிதமாக ‘பை’ (Pi) என்பதின் தோராய மதிப்பை கண்டுபிடித்து 3.1416 என்று நிர்ணயித்தவர் அவர்தான்.

ஹர்ஷ சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்திருந்த ராஜஸ்தானில் பில்லமலா என்ற இடத்தில் கி.பி. 598ல் பிறந்தவர் பிரம்மகுப்தர். தமது 30வது வயதில் ‘பிரம்ம ஸ்புத்த சித்தாந்தம்’ என்ற நூலை இவர் இயற்றினார். இதில் வானசாஸ்திரம் பற்றிய விஷயங்களை அன்றைய காலக்கட்டம் வரையிலும் தொகுத்தித் தந்துள்ளார்.

தமது காலத்தில் ஒரு தனித்துவத்துடன் அறிவுச் சுடராய்ப் பிரகாசித்த இன்னொரு நட்சத்திர அறிஞர் பாஸ்கராச்சார்யார். இன்றைய மஹாராஷ்ட்ரா எல்லையிலமைந்துள்ள விஜ்ஜில்பாடா என்ற இடத்தில் கி.பி.1114ல் பிறந்தவர் இவர். சித்தாந்த சிரோமணியை நான்கு அத்தியாயங்களாக இவர் வடித்துத் தந்துள்ளார். வான சாஸ்திரம் பற்றியும் அல்ஜீப்ரா பற்றியும் அலசியுள்ளார். பூஜ்ஜியத்திற்கான மதிப்பைக் கண்டுபிடித்தவர் என்ற அங்கிகாரம் பெற்ற முதல் கணித மேதை இவர்தான்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இந்தியாவுக்கு சூட்டிய புகழாரம் இந்த மூன்று கணித மேதைகளின் பங்களிப்புக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.

“எப்படி எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும் என்று நமக்குக் கற்றுத் தந்த இந்தியர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். இந்த எண்ணிக்கை அறிவு கிடைக்காமல் போயிருந்தால் எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் சாத்தியமில்லாமல் போயிருக்கும்” என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.