குர்ஆனை ஏன் படிக்கவேண்டும்?

அமெரிக்கா ஈராக்கில் போர்தொடுத்த நாட்களில், ஆக்கிரமித்த நாட்களில் பல நாட்கள் மனது மிகவும் சோகமாகவே இருந்தது. போரைத்தடுக்க ஐ.நா வால் எதுவும் செய்யமுடியாததுபோல், மனது சோகமாவதைத் தவிர்க்க என்னாலும் எதுவும் செய்ய இயலவில்லை. ஒவ்வொருமுறை அப்பாவி மக்கள் மீது தாக்குதல்கள் நடந்ததை தொலைக்காட்சியில் பார்க்கும்பொழுதும் மன வேதனை அதிகமாகத்தான் ஆனது.

அதே சமயம், ஈராக்கில் வேலைசெய்ய, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து சென்ற பத்திரிக்கையாளர்கள், மருத்துவர்கள், வாகன ஓட்டுனர்கள் என பல தொழில்களைச் செய்பவர்களையும் ஈராக்கில் உள்ள தீவிரவாத அமைப்புகள் கடத்திச் சென்று தலையை வெட்டிக் கொலை செய்த கொடூரங்களை பத்திரிக்கைகளில் படித்தபொழுது வேதனை இன்னும் அதிகமாககிக்கொண்டுதான் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு நேரத்தில்தான், ஒரு தனியார் தொலைக்காட்சியில், ஒரு மசூதியில் நடந்த பிரார்த்தனையை ஒளிபரப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் குர்ஆன் படிக்கப்படிவதை ஆங்கில மொழிபெயர்ப்போடு ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தபொழுது குர்ஆனை படிக்க வேண்டுமென்று தோன்றியது. நான் படித்ததை இங்கு உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்..