திருக்குர்ஆன்

திருக்குர்ஆன் என்பது ஒரு அரபிச் சொல். இதற்கு, ‘ஓதப்பட்டது’ என்று பொருள். ‘நபிகள் நாயகம்’ அவர்களுக்கு ‘ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம்’ அவர்கள் மூலமாக ஓதப்பட்டது. குர்ஆன் என்பது ஒரு நாளிலேயோ அல்லது ஒரு மாதத்திலேயோ ஓதப்பட்டது அல்ல. நபிகள் அவர்களின் நாற்பதாவது வயதில், ரமலான் மாதத்தின் பிந்தய இரவில், ஹிராக் குகையில் இறைவனை தியானித்திருந்த நேரத்தில்தான் குர்ஆன் முதன்முதலாக ஓதப்பட்டது. அன்று தொடங்கி, நபிகள் அவர்கள் வாழ்ந்த 23 வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஓதப்பெற்றுது.

குர்ஆன், பாடல்களாகவோ, கவிதைகளாகவோ அல்லது கதைகளாகவோ சொல்லப்பட்டது அல்ல. 6666 வசனங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவை 3 வசனங்கள் உள்ள சிறிய அத்தியாயம், 286 வசனங்கள் உள்ள பெரிய அத்தியாயம் என 114 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன் ஓதப்பட்ட 23 வருடங்களில் நபிகள் அவர்கள், 10 ஆண்டுகள் மெக்காவிலும், 13 ஆண்டுகள் மெதீனாவிலும் வாழ்ந்திருக்கிறார். இந்த 23 வருடங்களில், வெவ்வேறு சூழ்நிலைகளில், ஒரு ஒழுக்கமுள்ள, சிறந்த அறிவுள்ள தந்தை, ஒரு மகன் அருகிலேயே இருந்து கூறிய அறிவுரைகளைத் தொகுத்தால் அது எப்படி அமைந்திருக்குமோ, அப்படித்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டிருக்கிறது.

குர்ஆன் அரபு மொழியில் எழுதப்பெற்றது. எனக்கு அரபு தெரியாது. நான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களிலும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களிலும், இணைய தளங்களிலும் படித்ததை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். சில வருடங்களுக்குமுன் எழுதப்பட்ட ஒரு ஆங்கில புத்தகத்திலிருந்து நான் படித்து புரிந்துகொண்டதை தமிழில் எழுதவே மிகவும் சிரமப்பட்டேன். தமிழில் நேரடியாக மொழிபெயர்க்க முடியாத வார்த்தைகள் நிறைய இருந்தன. பல நூற்றாண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட குர்ஆன் போன்ற நூல்களை மொழிபெயர்ப்பது மிக மிக கடினமாகவே இருந்திருக்கும். அப்படித் தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டவைகளைப் படித்து, நான் புரிந்துகொண்டவைகளை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். இதில் பிழைகள் இருப்பின், அல்லாஹ் பொருத்தருள்வாராக!!!