வெற்றிப் பாதை..

நான் இது வரைக்கும் படிச்ச புத்தகங்கள்ல/தொடர்கள்ல மிகவும் விரும்பிப் படிச்சது காந்தியடிகளோட ‘சத்திய சோதனை’தான்.

காந்தியடிகள் மேல, இந்தப் புத்தகத்த படிக்கறதுக்கு முன்னாடியே நெறைய மரியாதை இருந்துது. அது பல மடங்கு அதிகமாயிடுச்சு-ன்னுதான் சொல்லணும்.

அவரைப் பத்தி மட்டும் இல்ல. சுதந்திரப் போராட்ட காலத்துல மக்களோட மனநிலை, மற்ற தலைவர்களோட விடுதலை விஷன், அந்தக் காலத்துல ஒரு குஜராத்தி இளைஞனோட வேலை வாய்ப்புகள், பாரிஸ்டர் படிக்கறவங்களோட பழக்க வழக்கங்கள், சிறுவர் திருமணத்தோட(பால்ய விவாகம்) விளைவுகள், அந்தக் காலங்கள்ல சமுயாயத்துல இருந்த சமய நம்பிக்கைகள் அப்டி இன்னும் எவ்ளவோ தெரிஞ்சுக்க முடியுது!!

‘வெற்றி நிச்சயம்.. இது வேத சத்தியம்’-ன்னு ஒரு பாட்ட பின்னணி இசையா போட்டுட்டு, பாட்டு முடியறதுக்குள்ள வெற்றியடைஞ்சுடற கதை இல்ல காந்தியடிகளோடது.

‘வெள்ளையனே வெளியேறு’-ன்னு சொல்லி ஆங்கிலேயர்கள வெளியேற்றின காந்தியடிகள், ஆரம்ப காலங்கள்ல ஆங்கிலேய விசுவாசியா இருந்திருக்காரு. ஆங்கிலேயர்களின் தயவு இருந்தால்தான் உலகம் உய்யும்-ன்னு அவர் நெனைச்ச காலங்களும் இருந்திருக்கு. இவர், ஒரு குழுவோட, இங்கிலாந்து ராணுவத்தோட போயி மருத்துவ உதவிகள் செஞ்ச காலங்களும், இங்கிலாந்து ராணுவத்தோட சேர்ந்து போருக்குப் போக, இந்திய கிராமங்கள்ல அலைஞ்சு ஆள் சேர்த்த காலங்களும் இருந்திருக்கு.

உணவுக் கட்டுப்பாடு-ன்னா காந்தியடிகளை மாதிரி வேற யாரையும் சொல்ல முடியாது. உயிர் போகக் கூடிய அளவுக்கு உடம்பு சரியில்லாம போன நேரத்துலகூட, டாக்டர்கள் வற்புறுத்தி சொல்லியும் கூட, Beef soup-ஓ, முட்டையோ, அவ்ளோ ஏன், பால் கூட குடிக்காம இருந்திருக்காரு.

காந்தியடிகள பத்தி சொல்லும் போது, அவரு எப்பவும் ரெண்டு சிஷ்யைகள ‘வெச்சிருந்தாரு’ அப்டின்னு பேசற ஆளுகள பாத்திருக்கேன். ‘ப்ரம்மச்சரியம்’ எவ்ளோ கஷ்டம்-னு அவரோட முப்பதுகள் நாற்பதுகள்லயே சோதிச்சிருக்காரு. சாப்பாட்டுக்கும் காமத்த உண்டு பண்ற எண்ணங்களுக்கும் உள்ள சம்பத்தம் பத்தியெல்லாம் ஆராய்ச்சி செஞ்சு அப்படிப்பட்ட உணவுகளையெல்லாம் தவிர்த்திருக்காரு. அதன் மூலமா ‘ப்ரம்மச்சரியத்த’ கடைபிடிச்சிருக்காரு. அதனால அவர் அடைஞ்ச பலன்கள பக்கம் பக்கமா சொல்றாரு. So… சிஷ்யைகள ‘வெச்சிருந்தாரு’-ன்னு சொல்றதெல்லாம், சொல்றவங்களோட கற்பனைகளா மட்டும்தான் இருக்கமுடியும்-னு தோனுது.

(*’மிட்நைட் மசாலா’ உணவுகளையெல்லாம் தவிர்த்து ‘ப்ரம்மச்சரியத்த’ ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, அவரோட மனைவிட்ட பர்மிஷன் வாங்கியிருக்காரு.
*நாமெல்லாம் ‘திருடன் போலீஸ்’ வெளையாண்ட வயசுகள்லயே பால்ய விவாகம் பண்ணதுனால அவரு ‘அம்மா அப்பா’ வெளையாட்டு வெளையாடியிருக்காரு!!)

நான் ‘சத்திய சோதனை’ படிக்கணும்-னு நெனைச்சது என்னொட உற்ற நண்பன் ஒருத்தனாலதான். அடிக்கடி ‘நமக்கு வயசாயிடுச்சு. இனிமே நம்மால என்ன செய்யமுடியும்’ அப்டின்னு அவன் சொல்ற வார்த்தைகள்னாலதான். 1869-ல பொறந்த காந்தியடிகள் தென்னாப்பிரிக்கால இருந்து இந்தியாவுக்கு வந்தது 1916 ல (கூட்டி கழிச்சு பாத்தா 47 வயசுல). அவரு வர்றதுக்கு முன்னாடியே காங்கிரஸ் இருந்திருக்கு. மற்ற தலைவர்கள்லாம் இருந்திருக்காங்க. காந்தியடிகள் பங்கேற்ற மொதல் காங்கிரஸ் மாநாட்ல, மாநாட்டு கமிட்டிகிட்ட ‘எனக்கு எதாவது வேலை இருக்கா?’-ன்னு கேட்றுக்காரு. அவருக்கு அவங்க கொடுத்த வேலை, கக்கூஸ் கழுவுறது. ‘பாரீஸ்டர் M.K.காந்தி’ அந்த வேலையையும் சிரத்தையோட செஞ்சிருக்காரு.