பட்டிமன்றம்.

அறுவதாவது சுதந்திர ஆண்டுல அடியெடுத்து வெச்சிருக்கற இந்தியாவுக்கும் இந்தியர் எல்லோருக்கும் என்னோட வாழ்த்துக்கள்.

சுதந்திர தினத்துக்காக சிறப்பா எதுவும் செஞ்சீங்களா? நான் ஒன்னும் செய்யல. வீட்ல மாட்டியிருக்கற மகாத்மா காந்தி படத்த பாத்து சில வினாடிகள் கண்ண மூடி கும்பிட்டத தவிர. ட்ரெயின்ல அலுவலகத்துக்கு வரும்போது சின்ன வயசுல கொண்டாடின சுதந்திர தினங்கள நெனைச்சுகிட்டே வந்தேன்.

இப்போல்லாம் பண்டிகைகளோட அர்த்தங்கள் கொஞ்சம் கொஞ்சமா மறையுதோன்னு தோனுது. சுதந்திரதினமும் குடியரசு தினமும் வெறும் விடுமுறை நாளா மட்டும் ஆய்டுச்சோன்னு சில சமயம் தோனும். சுதந்திர தினத்தன்னிக்கு பள்ளிக்கூடம் போயி, கொடிக்கு வணக்கம் சொல்லிட்டு, ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ பாட்டு பாடிட்டு மிட்டாய் வாங்கிட்டு வர்ற பழக்கம் இப்போ படிக்கற நகரத்து மாணவ மாணவிகளுக்கெல்லாம் இருக்கான்னு தெரியல. சின்ன வயசுல நாங்க போனது நல்லா ஞாபகம் இருக்கு. யூனிஃபாம் போட்டுகிட்டு, பஸ் பிடிச்சு 6 கிலோ மீட்டர் தள்ளி இருக்கற ஸ்கூலுக்கு போயி, கொடியேத்தினப்புறம் மிட்டாய் வாங்கிட்டு திரும்ப வருவோம்.

சுதந்திர தினம், குடியரசு தினம் மட்டும் இல்ல, தீபாவளி, பொங்கல் கொண்டாடறதுகூட மாறிடுச்சு. தீபாவளிக்கோ வருஷ பிறப்புக்கோ கோவிலுக்கு போறவங்க எண்ணிக்கை கொறஞ்சு போச்சு. கேஸ் ஸ்டவ்-ல பொங்கல் பொங்க ஆரம்பிச்சாச்சு. T V வர்ற சிறப்பு நிகழ்ச்சிகள்தான் பண்டிகைகளோட சிறப்புகளா ஆய்டுச்சு. முன்னல்லாம் தீபாவளிக்கு குளிச்சுட்டு கோவிலுக்கு போயி, அபிஷேகம்-லாம் பாத்துட்டு பொறுமையா சாமிய கும்புட்டுட்டு வருவோம். இப்போல்லாம் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து T V முன்னாடி உக்காந்துடணும். முக்கியமா பட்டிமன்றம் ஆறம்பிக்கறதுக்கு முன்னாடி.

பட்டிமன்றங்களும் இப்போல்லாம் கொறைஞ்சு போச்சு. கும்பகோணத்துல இருக்கற கோயில்கள்ல நடக்கற திருவிழாக்கள்ல வருஷத்துக்கு ஒரு பத்து பட்டிமன்றங்களாவது நடக்கும். நெறைய கூட்டம் வரும். பெரிய பேச்சாளர்கள்லாம் வருவாங்க. ‘இராமாயணத்துல, ராமனின் தம்பிகள் சிறந்தவர்களா, ராவணனின் தம்பிகள் சிறந்தவர்களா?’, ‘மகாபாரதத்துப் பாத்திரப் படைப்புகள்ல யார் சிறந்தவர்கள்’, ‘சிலப்பதிகாரத்துல கண்ணகி மற்றும் மாதவி பாத்திரப் படைப்புகள்’-ன்னு நெறைய வித்தியாசமான தலைப்புகள் இருக்கும். இதிகாசங்கள்ல இருந்தும், காப்பியங்கள்ல இருந்தும் பாடல் வரிகள அவங்க சொல்லும்போது மெய்சிலிர்க்கும். ஆறு மணிக்கு ஆரம்பிக்கற பட்டிமன்றங்கள் பத்து மணிக்கு மேலயும் தொடரும். சில பட்டிமன்றங்கள் மூணு நாள் நடக்கும்.

இப்போ நடக்கற திருவிழாக்கள்லல்லாம் ஆர்க்கெஸ்ட்ராக்கள்தான். அப்படி ஒரு திருவிழாக்கு போய்ட்டு அவசரமா திரும்பி வந்துட்டு இருந்த ஒரு தாத்தாட்ட கேட்டேன், ‘என்ன தாத்தா ஆர்க்கெஸ்ட்ரா பாக்கலையா? இவ்ளோ சீக்கிரமா திரும்பிட்டீங்க?’. அவர் சொன்ன பதில், ‘ஏழு மணிக்குள்ள வீட்டுக்கு போகலன்னா ‘ஆனந்தம்’ மிஸ்ஸாய்டும் தம்பி! அதான் அவசரமா போறேன்!!’