அமெரிக்க பக்தி.

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு குருகுலத்துக்கு போயிருந்தேன். அமெரிக்கால நான் பாக்கற முதல் குருகுலம். நியூ ஜெர்சியோட பார்டர்ல, பென்சில்வேனியா மாகானத்துல இருக்கு. போற வழியெல்லாம் மலையும் மலைசார்ந்த எடங்களா, இயற்கை அழகு கொட்டிக்கிடந்துச்சு. குருகுலத்துக்குள்ள ஒரு சின்ன கோவில், ஒரு ப்ரேயர் ஹால், ஒரு கிச்சன், ப்ரேயர் ஹால் அளவுக்கு பெருசா ஒரு டைனிங் ஹால் அவ்ளோதான் முக்கிய கட்டிடம். அத சுத்திலும் நெறைய குடில்கள்.

குடில்கள்னா, குடும்பத்தோட தங்கற அளவுக்கு வசதியான வீடுகள். அந்த குடில்களுக்கு கங்கா, காவிரி, யமுனா, பம்பா-ன்னு இந்திய நதிகளோட பெயர்கள வெச்சிருக்காங்க. ஒரு குடில வாடகைக்கு எடுத்துகிட்டு குடும்பத்தோட வந்து தங்கிக்கலாம். குடும்பமா வந்து தங்கறவங்களோட குழந்தைகள் விளையாடறதுக்காக சின்னச் சின்ன மைதானங்களும் இருக்கு. இந்தக் குழந்தைகள் சேர்ந்து நடிக்கற மாதிரி சின்னச் சின்ன நாடங்கள் மாதிரிகூட நடத்தறாங்க.

யோகா மற்றும் தியான வகுப்புகளும் நடத்தறாங்க.

அமெரிக்கா வந்ததுல இருந்து, வழக்கமா கோவிலுக்குப் போனா எல்லா சாமிகளையும் கும்புட்டுட்டு நேரா கேஃபிடேரியாவ பாக்க போயிடுவேன். மத்தவங்க யாரையும் அவ்ளோவா கவனிக்க மாட்டேன். இந்த முறை இருந்தது ஒரே ஒரு சாமிதான். தக்க்ஷினா மூர்த்தி. அவர கும்டுட்டு ப்ரேயர் ஹால்ல கொஞ்ச நேரம் உக்காந்திருந்தேன். அங்க வந்து சாமி கும்பிட்ட சில குடும்பங்கள சேர்ந்தவங்ககிட்ட ஏதோ ஒரு வித்தியாசமான பரபரப்பு இருக்கறமாதிரி இருந்துச்சு. சாமிகும்பிடறதையும் தவிர வேற ஏதோ முக்கியமான நோக்கத்தோட வந்தவங்க மாதிரி இருந்தாங்க. கொஞ்சம் கூர்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன்.

வந்தவங்கள்ல 90 சதவீதம் 45 வயசுக்கு மேல இருக்கறவங்க. நெறையபேரு பதின்பருவத்து (டீனேஜ்) பிள்ளைங்களோட பெற்றோர்கள். குறிப்பா டீனேஜ் பெண்களோட பெற்றோர்கள். தங்களோட டீனேஜ் பிள்ளைகளுக்கு அமெரிக்க கலாச்சாரம் ஒட்டிக்காம இருக்கறதுக்காகவும், இந்தியக் கலாச்சாரம் மேல அதிக ஈடுபாடு ஏற்படணும்-ங்கறதுக்கும்தான் முக்கியமா இந்த குருகுலத்துக்கு கூட்டிட்டு வந்த மாதிரி தெரிஞ்சுது. பிள்ளைங்கள சாமிய கும்பிடச் சொல்லியும், மந்திரங்கள சொல்லச் சொல்லியும் சொல்லிக்கொடுத்துகிட்டு இருந்தாங்க.

அஞ்சு மணிக்கு ஸ்வாமிஜி பேசிவாரு-ன்னு சொன்னாங்க. நானும் காத்திருந்தேன். ஸ்வாமிஜி பேசறத கேட்க வந்த டீனேஜ் பசங்க முகங்கள்ல ஆர்வம் கம்மியாதான் தெரிஞ்சது. ஒரு சிலபேர் உள்ள வரவே இல்ல. வெளிலயே உக்காந்து புத்தகம் படிச்சிட்டு இருந்தாங்க.

ஸ்வாமிஜி பேசினப்புறம், ‘பிள்ளைங்களுக்கு டிசிப்ளின் எப்டி சொல்லிக்கொடுக்கறது?’ -ங்கறது மாதிரியான பக்தர்களோட கேள்விகளுக்கு பதில் சொன்னாரு. ‘Shoes only on the Rack please’-ன்னு போர்டு எழுதி வெச்சிருந்தாலும், அப்டியே அங்கங்க செருப்ப கழட்டு போட்டுட்டு போற பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு டிசிப்ளின் எப்டி சொல்லித்தரணும்-னு ஸ்வாமிஜி-ட்ட கேக்கறாங்க. Nice.

எல்லாம் முடிஞ்சு சாப்பிடும்போது, எதிர் வரிசைல உக்காந்து சாப்டவரை கவனிச்சேன். அவருக்கு ஐம்பது வயதுக்கு மெல இருக்கும். அவரோட மனைவிட்ட பேசிட்டே சாப்டாரு. ‘பிள்ளைகள் எதாவது பிரச்சனைகள்ல மாட்டிகிட்டா எப்படி சமாளிக்கறது, எப்படி சால்வ் பண்றது-ங்கறத பத்தியெல்லாம் ஸ்வாமிஜி ஒன்னுமே சொல்லலியே!!’-ன்னு கவலையா சொல்லிட்டு இருந்தாரு.

இருட்றதுக்குள்ள வீட்டுக்கு போகணும்-ங்கற கவலை எனக்கு அதிகமாயிட்டே இருந்ததால சீக்கிரமா சாப்டுட்டு களம்பிட்டேன்.