பசி என்றொரு உணர்வு.

வள்ளலார் (அ) இராமலிங்க அடிகளார் மேல எனக்கு எப்பவுமே ஒரு பெரிய மரியாதை உண்டு. எங்க பாட்டி அவர பத்தி அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’-னு மனப்பாடமா திருவருட்பா பாடல்கள்லாம் பாடுவாங்க. மாயவரத்துக்கு பக்கத்துல இருக்குற பெருஞ்சேரிதான் எங்க தாத்தா ஊரு. வள்ளலார் மேல ரொம்ப பக்தி கொண்டவங்க அந்த ஊர்க்காரங்க. எங்க தாத்தா பேருகூட இராமலிங்கம்தான்.

வள்ளலார் வாழ்ந்த ஊரான வடலூர் எங்க ஊர்ல இருந்து சென்னை போற வழிலதான் இருக்கு. ஒவ்வொரு முறை சென்னை போகும்போதும், அங்க கார நிறுத்தி, ‘இராமலிங்க பவன்’-ல ரவா தோசையும் புரோட்டாவும் சாப்டுவோமே தவிர ஊருக்குள்ள போனது இல்ல.

போன முறை போனப்போதான் போயிட்டு வரலாம்-னு கெளம்பினேன். ஜூன் மாச வெயில் வாட்டி எடுக்க காலைல ஒரு பத்து மணிக்கு கெளம்பினேன். வழி நெடூக ரோடு போடற வேலை நடந்துகிட்டு இருந்ததால மாட்டு வண்டி வேகத்தோட கொஞ்சம்தான் அதிகமா போக முடிஞ்சுது.

வடலூர் போறதுக்கு கொஞ்சம் முன்னாடி, மருதூர்-ங்கற ஊர்லதான் வள்ளலார் பொறந்த வீடு இருக்கு. அங்க மொதல்ல போனேன். அந்த வீட்ட இப்போ அவரோட நினைவகம் மாதிரி வெச்சிருக்காங்க. அவரோட வரலாற சொல்ற படங்களை சுவர்ல மாட்டியிருக்காங்க. வீட்டுக்குள்ள பேஸ்மெண்ட் மாதிரி ஒரு எடம் இருக்கு. அங்கதான் அவர் பொறந்தார்ன்னு சொல்லி அவரோட படங்களும் ஒரு தீபமும் வெச்சிருக்காங்க. ‘புலால் மறுத்தவர்கள் மட்டும்’தான் கீழ போகணும்-னு போட்டிருக்காங்க.

அடுத்ததா வடலூர் போனேன். சத்திய ஞான சபைக்கு போறதுக்கு முன்னாடி சத்திய தரும சாலைக்கு போனேன். அங்க அவர் கையால எழுதின அருட்பா நோட்டு வெச்சிருக்காங்க. வள்ளலார் அவர் கையால ஏத்திவெச்ச அடுப்பு இன்னும் அணையாம இருக்கு. அதுல சமைச்சு தினம் அன்ன தானம் பண்றாங்க. நான் போன அன்னிக்கு மறுநாள் பூசம்-ங்கறதுனால அன்னிக்கு சீக்கிரமே சாப்பாடு முடிஞ்சிருச்சாம். அந்த அடுப்புல சமைச்ச சாப்பாட்ட நான் சாப்ட முடியல. அடுப்புக்கு பக்கதுல நெல் கொட்டி வெக்கற ‘பத்தாயம்’ வரிசையா இருக்கு. எல்லாமே அந்த சுத்துவட்டாரத்துல இருக்குற மக்கள் தானமா கொடுத்த நெல். 100 வருஷங்களுக்கும் மேலா இன்னமும் கொறையாம இருந்துகிட்டு இருக்கு.

அடுத்து சத்திய ஞான சபை. மதியம் ஒன்னறை மணிக்கு மேல போனதால முக்கிய கட்டிடத்துக்குள்ள போக முடியல. வெளில பெரிய ஹால்ல சிலபேர் உக்காந்து பேசிகிட்டு இருந்தாங்க. சாதாரண கதர் சட்டை, கதர் வேட்டி போட்டிருந்த ஒருத்தர் அருட்பா பாடி மத்தவங்களுக்கு விளக்கம் சொல்லிகிட்டு இருந்தாரு. ரெண்டுநாள் தாடியும் மெலிஞ்ச தேகமுமா இருந்தாரு. கொஞ்ச நேரம் கழிச்சு அவர்கிட்ட பேச்சு கொடுத்தேன்.

‘உங்க பேரு என்ன சொன்னீங்க சார்?’
‘ஐயா, என் பேரு கோவிந்தராசுங்கய்யா’
‘புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க சங்கத் தலைவரா இருக்கேன்’
எனக்கு கொஞ்சம் ஷாக்கா இருந்துச்சு. ஐந்தாவது வட்டம், ஆறாவது வட்டம்-ன்னு அரசியல்ல வட்டத் தலைவர்கள்லாம் இருக்குற ஆடம்பரத்துக்கும் புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க சங்கத் தலைவரோட எளிமைக்கும் இருந்த வித்தியாசம் கடலளவு இருக்கும்.

அவ்ளோ எளிமையா இனிமையா பேசினாரு. புதுக்கோட்டை மாவட்டத்துல இருக்குற சங்கங்கள், இவர் நடத்துற மாணவர் இல்லம், மாணவர்களுக்கு செய்யற உதவிகள், வசதிகள்-ன்னு எல்லாத்தையும் விபரமா சொல்லிட்டு இருந்தாரு. எத்தனையோ பேரோட பசியை போக்க உதவுறவரும், நோய் தீர்க்க மருத்துவ உதவிகள் செய்யறவருமான அவரு, ‘இங்க வரணும்-னு நேத்து தோனிச்சு, ஒடனே பஸ் ஏறி கெளம்பி வந்துட்டேங்கய்யா’-ன்னாரு. திரும்ப போக என்கூட கார்லயே வந்துடுங்களேன்னு நான் கேட்டதுக்கு, இல்லங்கய்யா, நாளைக்கு பூசத்துக்கு இருந்துட்டு பஸ்லயே போயிடுவேன் – னு சொல்லி கார் வரைக்கும் வந்து வழியனுப்பி வெச்சாரு.

அங்கேயிருந்து கெளம்பி கருங்குழிங்கற ஊருக்கு போனேன். அங்க ஒரு வீட்ல வள்ளலார் தண்ணிலயே தீபம் ஏத்தியிருக்காரு. அந்த வீட்டையும் ஒரு நினைவகம் மாதிரி கட்டியிருக்காங்க. அங்கேயும் போய் பார்த்துட்டு, களம்பி திரும்பவும் வந்து வடலூர் ‘இராமலிங்க பவன்’-ல அளவு சாப்பாடுக்கு ஒரு டோக்கனும், ஆக்வாஃபீனா வாட்டரும் வாங்கிட்டு உள்ள போயி சாப்டுட்டு ஊருக்கு களம்பினேன்.

எஸ்.ராவும் அவரோட நண்பர் ஒருத்தர கூட்டிகிட்டு வடலூர் போயிருக்காரு. அந்தக் கதைய சொல்லிட்டு, கு.அழகிரிசாமி-ங்கறவரு எழுதின ‘சுயரூபம்’ங்கற கதைய பத்தி சொல்றாரு. பழம்பெருமைமிக்க ஒரு குடும்பத்தை சேர்ந்த, இப்போ கைல காசில்லாத ஒருத்தரோட பசியப் பத்தின உருக்கமான கதை அது.

காலைல சீரியல் சாப்டுட்டு, ட்ரெயின்ல போகும்போது படிச்சேன். ட்ரென்ல இருந்து எறங்கி நடந்துபோகும் போது யோசிச்சுகிட்டே போனேன். பசிய இன்னிக்கு டெஸ்ட் பண்ணலாமே-ன்னு மதியம் சாப்ட வேண்டாம்-ன்னு முடிவு பண்ணினேன். வழக்கமா குடிக்கற காஃபிகூட குடிக்கல. காலைல சாப்டற சீரியல் பார் அளவு கம்மிதான்-ங்கறதால வழக்கமா 11.30-க்கு லேசா பசிக்க ஆரம்பிக்கும். அதுமாதிரியே இன்னிக்கும் ஆரம்பிச்சுது. லஞ்ச் சாப்ட வெளில கூப்ட அலுவலக நண்பர்கள்கிட்ட நான் இன்னிக்கு பசிய டெஸ்ட் பண்றேன். அதுனால சாப்ட வரல-ன்னு சொன்னேன். ‘மூணு மணிக்கு பசி-ன்னு வெளில போனா ஒன்னும் கெடைக்காது. மரியாதையா இப்போவே வந்துடு’-ன்னு எச்சரிக்கை செஞ்சாங்க.

‘இன்னிக்கு நானும் ஆச்சு. பசியும் ஆச்சு’-ன்னு நெனைச்சுகிட்டு அவங்கள அனுப்பிட்டேன்.

பன்னிரண்டு மணிக்குமேல நல்ல பசி. போயி ஒரு க்ளாஸ் தண்ணி குடிச்சேன். கொஞ்சம் பரவாயில்ல. இருந்தாலும், நினைவு ஃபுல்லா நான் இன்னும் சாப்டல-ங்கறதயே யோசிச்சுகிட்டு இருந்துது. வேற அலுவலக வேலைய பாக்கலாம்-னாலும், பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை, மணி ரெண்டாச்சு; இன்னும் சாப்டல, மணி ரெண்டேகால் ஆச்சு; இன்னும் சாப்டல, மணி ம்ம்ம்மூணாச்சு; இன்னும் சாப்டல-ன்னு ஞாபகப்படுத்திகிட்டே இருந்துச்சு. நாலு மணிபோல கொஞ்சம் சோர்வா இருந்த மாதிரி இருந்துச்சு. அஞ்சு மணிபோல, தொண்டை வரண்டுபோன மாதிரி ஒரு ஃபீலிங். ஆனா தண்ணி குடிக்கவும் பிடிக்கல. லேசா கண்ண கூசற மாதிரியும், கால வலிக்கறதுமாதிரியும் இருந்துச்சு. இன்னிக்குன்னு பாத்து ஆபீஸ்ல சுவீட்ஸ்ஸும், கேக்கும் கொண்டுவந்து வேணுமா-ன்னாங்க. நோ-ன்னு சொல்லிட்டு டெஸ்ட தொடர்ந்தேன். அலுவலகத்துல இருந்து வீட்டுக்கு வந்து நைட்டும் டெஸ்ட தொடறணும்-னுதான் நெனைச்சேன். ஆனா, வீட்டுக்குள்ள நொழையும் போதே மனைவி செஞ்சு வெச்சிருந்த உப்புமா வாசனை அடிச்சுது. மனைவி, ‘சாப்டறீங்களா’-ன்னு கேட்ட ஒடனே ‘ஸ்யூர்’-ன்னு தட்ட வாங்கி அவசரம் அவசரமா சாப்டேன்.

‘ஏன் ரெண்டு நாளா சாப்டாதவன் மாதிரி சாப்டறீங்க??’-ன்னு என் மனைவி கேட்டது என் காதுல கொஞ்சம் லேட்டாதான் கேட்டுது!!