எடையும் நடையும்..

நம்ம ஊர்ல, பெரும்பாலான மக்கள்ட உடம்போட எடை பத்தின கான்ஷியஸ்னஸ் (தமிழ்ல எப்டி சொல்லணும்?) இல்லவே இல்லாததுபோல்தான் தெரியுது.

உடம்பு நல்லா குண்டா இருந்தாதான் ஆரோக்கியமா இருக்கறதா ஒரு நம்பிக்கை (மூடநம்பிக்கை(?)) இருக்கு. எங்க பாட்டிகிட்டயும், அம்மாகிட்டயும் அடிக்கடி நான் விவாதம் பண்ணுகிட்டு இருப்பேன். கொஞ்சம் எடை கொறைஞ்சாலும், என்னப்பா இப்டி எளைச்சு போயிட்ட-ன்னு வருத்தப்படுவாங்க.

நான் எப்போ ஊருக்கு போனாலும், ஒரு வாரத்துல 2 – 3 கிலோ ஏறிடுவேன். நாலுவாரம் ஊர்ல இருந்தா, 8 – 10 கிலோ ஏறிடுவேன். வீட்டு சாப்பாடு ஒரு பக்கம்-னா ஹோட்டல் சாப்பாடு இன்னும் மோசம். ஹோட்டல் காரங்களுக்கு அவங்க வியாபாரம்தான் முக்கியமே தவிர, சாப்ட வர்றவங்களோட உடம்பு இல்லயே!! ரவாதோசை, சோலாபூரி-ன்னு ஒவ்வொரு முறையும் நல்லா கட்டினா எடை ஏறாம என்ன ஆகும். கஸ்டமருக்கு கொலஸ்ட்ரால் வந்துடக்கூடாதுன்னு எண்ணைய கம்மியாவா ஊத்தப் போறாங்க ஹோட்டல்காரங்க?

ஒரு பைக்கையோ, காரையோ, சைக்கிளையோ வாங்கிட்டு அத தொடச்சு, ஆயில் போட்டு வெச்சுக்கறவங்க கூட உடம்ப கவனிச்சுக்கணும்-னு யோசிக்கறது இல்ல. உடம்ப கவனிச்சுக்கணும்-ன்னா உடம்பு சரியில்லன்னா மருந்து சாப்டறது-ன்னு மட்டும்தான் நெனைக்கறாங்க.

‘நாப்பது நாப்பத்தஞ்சு வயசுக்கு மேல வாக்கிங் போன போதும்-பா!! இப்பவே என்னத்துக்கு?’-ன்னு சொல்றவங்க இருக்காங்க.

கதாவிலாச‘த்துல ஒரு டாக்டர் சொன்னதா எஸ்.ரா சொல்ற இந்த வரிகள் ரொம்ப சரின்னுதான் படுது. ‘நாப்பது வயசுக்கு மேலதான் உடல் நலக் குறைவுகள் அதிகம் ஏற்படுதுன்னாலும், சின்ன வயசுல இருந்தே சாப்டற சாப்பாடும், பழக்கவழக்கங்களும்தான் முக்கிய காரணம்‘.

உடல் எடை அதிகமா ஆகறது மிகப்பெரிய உடல் உபாதைகள ஏற்படுத்தும்-ன்னு நாம யோசிக்கறதே இல்ல. உடம்புங்கற மெஷின், உடல் எடை அதிகம் ஆகறதால ஓவர் வொர்க் பண்ணுதுங்கறத உணர்றதே இல்ல. ‘நம்ம உடல்ல ஒரு கிலோ எடை அதிகமாச்சுன்னா, நம்ம இதயம் மூணு கிலோ மீட்டர் தூரம் அளவுக்கு எக்ஸ்ட்ராவா ரத்தத்த பம்ப் பண்ணணும்’-ன்னு, ‘வயிறு’-ங்கற புத்தகத்துல டாக்டர் செல்வராஜ் சொல்றாரு. அது இதயத்துக்கு ஓவர் வொர்க்தான?

ஒரு லிட்டர் கிரைண்டர்ல ரெண்டு லிட்டர் அரிசிய ஒன்னா போட்டு ஓடவிட்டா கிரைண்டர் பொகைஞ்சுடும்-னு தெரியற நமக்கு, நம்ம உடலோட அதிகமான எடைய தூக்கித் தூக்கி நம்மோட முழங்கால்களும், கணுக்கால்களும் சீக்கிரம் தேயும்-னு யோசிக்கறதே இல்ல. அதுக்கு பயிற்சி கொடுக்கறமாதிரி உடற்பயிற்சிகளையும் நாம செய்யறது இல்ல.

இருபதுகள், முப்பதுகள்லயே நல்லா உடல் எடைய அதிகப்படுத்தி வெச்சிருக்கறதுனால, நாற்பதுகள், ஐம்பதுகள்ல கொஞ்ச தூரம் நடந்தாலே மூட்டுவலி வந்துடுது. நடக்க முடியாததுனால, நாம சாப்டற உணவுனால உண்டாகற எனர்ஜியும் செலவழியாம, இடுப்பு மடிப்புகள்லயே தங்கி எடைய இன்னும் அதிகமாக்குது. மூட்டுகள்ல வலி இன்னும் அதிகமாகுது. மூவ்-வயும் அயோடெக்ஸையும் தேடவேண்டியிருக்கு. டி வில ஆர்த்தோகியூர், அது, இது-ன்னு ஏதாவது விளம்பரம் வந்தா, ‘அது’ வந்து நம்ம வாழ்க்கைல விளக்கேத்தி வெச்சு ஒரே நாள்ல வலிகள் எல்லாத்தையும் போக்கிடாதா-ன்னு ஏங்கறோம்.

இது விஷயமா, அதிகமா எங்க பாட்டிட்டதா விவாதம் பண்ணிட்டு இருப்பேன். ‘இன்னும் கொஞ்சம் சாதம் போட்டுக்கப்பா’, ‘தம்பிக்கு இன்னும் ரெண்டு வடைய வை’-ன்னெல்லாம் சாப்டும்போது பக்கத்துலயே உக்காந்து சொல்லிகிட்டு இருக்குற எங்க பாட்டிட்ட, விஜயகாந்த் ஸ்டைல, ‘பாட்டீ, தயவுசெஞ்சு, உங்க ‘பாசத்த’ பாயசத்துலயும், வடைலயும் காட்டாதீங்க பாட்டீ’!!-ன்னு சொல்லுவேன்.

எங்க பாட்டி திரும்ப, ‘மனுஷன் கஷ்டப்பட்டு ஒழைக்கறதே நல்லா சாப்டறதுக்குதானப்பா’ அப்டீம்பாங்க.

நீங்க சொல்லுங்க, மனுஷன் கஷ்டப்பட்டு ஒழைக்கறது, நல்லா சாப்டறதுக்குதானா?