மீட் த பெஸ்ட் ஃப்ரெண்ட் – தமிழில்

(http://thenkoodu.com போட்டிக்காக!!)

நீண்ட நாட்களுக்குப் பிறகு பீட்டரும், ஜானத்தனும் சந்தித்துக்கொண்டார்கள். இருவர் முகத்திலும் ஆச்சரியம் கலந்த சந்தோஷ மின்னல்கள் தெரித்து அடங்கின.

பீட்டர் பேச்சை தொடங்கினான். ‘ஹே மச்சான் எப்டி இருக்க? ரொம்ப நாளாச்சுடா உன்ன பாத்து!’

ஜானத்தன், ‘ஹேய், நீ எப்டி இருக்க பீட்? அப்பா!! உன்னப் பாத்து பல வருஷம் ஆயிருச்சில்ல?’

பீட்டர் கொஞ்சம் சோகமான குரலில், ‘போன வருஷம் உனக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்-ல சீரியஸா இருந்ததா கேள்விப்பட்டேன். அப்பவே வந்து பாக்கணும்-னு நெனைச்சேன். ஆனா, ஆபீஸ் வேலையா வெளியூர் போய்ட்டேன்! ரொம்ப சாரிடா!!’

‘அப்புறமாவது வீட்டுக்கு போயி ஒருமுறை விசாரிச்சிருக்கலாம்!! வேலை வேலை-ன்னு ஊர் ஊரா சுத்திகிட்டு இருந்துட்டேன். சாரிடா’

ஜானத்தன், ‘அதனாலென்னடா!!’.
ஜானத்தன் முகத்திலும் லேசான சோகம் படந்தது.

இவர்களைச் சுற்றிலும் விடியற்காலை மார்கழிப் பனிபோல புகை மூட்டம் அசைந்துகொண்டு இருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக போய்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். கூட்டத்தினர் பேசிய ஒலியும், அலையோசை போன்றதொரு ஒலியும் சேர்ந்து ஹார்மனி இசைபோல ஒலித்துக்கொண்டிருந்தது.

முகத்தில் படர்ந்த சோகத்தை களைத்தவனாய்,
ஜானத்தன், ‘அதுசரி மாப்ள, நீ எப்டிடா இங்க?’

பீட்டர், ‘அதையேன்டா கேக்கற? வேலை வேலைன்னு அலையறத நிறுத்தாம அலைஞ்சுகிட்டே இருந்தேன். ஆபீஸ் விஷயமா டென்வர்ல இருந்து லாஸ் வேகஸ்-வரைக்கும் கார்லயே போகலாம்-ன்னு கெளம்பினேன். மொத்தம் 750 மைல் தூரம். பாதி தூரம் தாண்டி போயிட்டு இருக்கும்போது, ரோட்டோரத்துல கார் நின்னுகிட்டு இருந்துச்சு. பக்கத்துலயே மூணு அழகான பொண்ணுங்க நின்னு லிஃப்ட் கேட்டுகிட்டு இருந்தாங்க.

மூணு பேரும் 20 (அ) 21 வயசுக்குள்ளதான் இருந்தாங்க. ஃபேஷன் ஷோ-ல வர்ற மாதிரி ட்ரஸ் பண்ணியிருந்தாங்க. அவங்க பக்கதுல கார நிறுத்தி என்ன-ன்னு விசாரிச்சேன். அவங்க, யூட்டா யுனிவர்சிட்டில ஜெர்னலிஸ்ட் படிக்கறதா சொன்னாங்க. ஏதோ ஒரு ப்ராஜக்ட்-டுக்காக, லாஸ் வேகஸ்-ஸுக்கு யார்கிட்டயாவது லிஃப்ட் கேட்டே போயி, அப்டி லிஃட் கொடுக்கறவங்கள பேட்டியெடுத்து ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதப் போறதா சொன்னாங்க.

நானும் லிஃப்ட் கொடுத்தேன். மூணு பேர்ல கம்மியா ட்ரெஸ் போட்டுகிட்டு இருந்தவ முன்னாடியும், அவளைவிட கொஞ்சம் அதிகமா போட்டிருந்த மத்த ரெண்டு பேரும் பின்னாடியும் உக்காந்துகிட்டாங்க. கைல ஒரு சின்ன சூட்கேஸும், பத்து பியர் பாட்டில் வெக்கற அளவுக்கு ஒரு ஐஸ் கூலர் பாக்ஸும் மட்டும் வெச்சிருந்தாங்க.

நான் எங்க வேலை பாக்கறேன், என்ன சம்பளம், என்ன விஷயமா லாஸ் வேகஸ் போறேன் அப்டினெல்லாம் கேட்டுகிட்டே வந்தாங்க. கல்யாணம் ஆகலன்னு நான் சொன்ன பொய்யை நம்பி முன்னாடி உக்காந்திருந்த ‘கம்மி உடை’ பொண்ணு இன்னும் கொஞ்சலா பேச ஆரம்பிச்சா.

பின்னாடி உக்காந்திருந்த ஒருத்தி, ‘நீங்க டயர்டா இருந்தா நான் கார ஓட்றேன் சார்’-ன்னு சொல்லி, கார அவ ஓட்ட ஆரம்பிச்சா. நானும் ‘கம்மி உடை’யும் பின்னாடி உக்காந்துகிட்டோம். ‘கம்மி உடை’ இன்னும் நெருக்கமா வந்து உக்காந்துகிட்டா. லாஸ் வேகஸ் போனப்புறம் என் ஹோட்டல் ரூமுக்கு வந்து என்ன சந்திக்கறதா சொன்னா.

கற்பனை உலகத்துல நான் மிதந்துகிட்டு இருந்தப்போ, தன்னோட ஃப்ரண்ட் வீட்ல பண்ணதா சொல்லி ஒரு இண்டியன் ஸ்வீட் கொடுத்தா. சாஃப்ட் அண்ட் ச்சூயியா ரொம்ப நல்லா இருந்துது. கொஞ்ச நேரத்துல தூக்கமா வந்துது. ‘கம்மி உடை’ தோள்ல கொஞ்ச நேரம் தலை சாய்ஞ்சேன்.

கண் முழிச்சு பாத்தப்போ கார் ரோட்டு ஓரமா நின்னுகிட்டு இருந்துச்சு. மூணுபேரும் கார்க்கு வெளில நின்னு பேசிட்டு இருந்தாங்க. எனக்கு கழுத்துக்கு கீழ உணர்வே இல்லாதது மாதிரி இருந்தது. மெதுவா தலைய தூக்கி பாத்தா வயித்துல ஒரு பெரிய கட்டு போட்டிருந்துச்சு. கட்டு முழுசும் ரத்தமா இருந்துச்சு.

வெளில நின்னு அவங்க பேசினதெல்லாம் எனக்கு கேட்டுது. ஆனா கையயோ காலையோ கொஞ்சம்கூட அசைக்க முடியல.

‘அடிப்பாவிகளா!! வயித்தல இருந்து என்னத்தடி எடுத்தீங்க? கிட்னியா? ஒன்ன எடுத்தீங்களா, இல்ல ரெண்டயும் எடுத்துட்டீங்களா?’
‘இதுக்குதான் அந்த ஒரசு ஒரசுனாளா’
‘லிஃப்ட் கேட்டு லிஃப்ட் கேட்டு வந்ததா சொன்னாளுகளே!! அப்ப இவங்கள கார்ல ஏத்தும்போது ரோட்டோரமா நின்னுகிட்டு இருந்த கார் யாருது?’
‘ஸ்வீட் மாதிரி ஒன்னு கொடுத்தாளுகளே, அதுல எதாவது கலந்திருந்துதோ!!’
இப்டி மனசு எல்லாத்தையும் நெனைக்க ஆரம்பிச்சுது. மூச்சு உள்ள போகுதா இல்லயா-ன்னு தெரியவே இல்ல. மயக்கம் இன்னும் அதிகமாயிட்டே இருந்துச்சு.

கடைசியா நான் கேட்டது அந்த ‘கம்மி உடை’யோட குரல்தான்.

‘கொஞ்சம் லிஃப்ட் கெடைக்குமா?’-ன்னு பின்னாடி வர்ற மத்த கார்கள கேட்டுகிட்டு இருந்தா!!