காந்தி ஜெயந்தி.


போன வாரத்துல ஒரு நாள், தமிழ் சசி அவர்களோட வலைப்பதிவுல, அகிம்சை வழியைப் பின்பற்றி உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த இலங்கைத் தமிழர் திலீபன் அவர்களோட போராட்டத்த பத்தி சொல்லி, அகிம்சை ஒரு உளுத்துப்போன தத்துவம்-ன்னும், இந்தியா விடுதலை அடைஞ்சதுக்கு காந்தியடிகளோட அகிம்சைப் போராட்டத்தைவிட பொருளாதாரம்தான் முக்கிய காரணம் என்பதுபோல ஒரு பதிவைப் படிச்சேன். அகிம்சைப் போராட்டம் இன்றைய சூழல்ல வேலைக்காகாது-ன்னு இவரோட பதிவுல இவர் அடிக்கோடு போட்டு சொல்றாரு.

இவரோட பதிவு நெறைய சிந்தனைகள ஓட்டிச்சு.

* இந்தியாவோட சுதந்திரத்துக்கு நெஜமா காந்தி காரணமா? இல்லயா??
* பொருளாதாரத்துக்கும் இந்திய சுதந்திரத்திற்கும் என்ன சம்பந்தம்?
* பர்மா, இலங்கை மற்றும் மலேசியா-வோட சுதந்திரத்துக்கு எந்த காந்தி வந்தாரு?
* இன்றைய (சுதந்திர) போராட்டங்களுக்கு அகிம்சை நெஜம்மாவே உளுத்துப்போன தத்துவமா?

ஒவ்வொரு விஷயமா பாப்போம். ஆங்கிலேயர்கள் வர்றதுக்கு முன்னாடி, 1757-கள்ல, இந்தியா-ன்னு ஒரு நாடே இல்ல. ஏரியா ஏரியாவா ராஜாக்கள்தான் ஆண்டுகிட்டு இருந்தாங்க. பக்கத்து பக்கத்து ஏரியாக்கள ஆண்டுகிட்டு இருந்த ராஜாக்களுக்குள்ளயும் ஒரு நட்பு இல்ல. யார யாரு எப்போ கவுக்கலாம்-ன்னுதான் பாத்துகிட்டு இருந்தாங்க. சிலபேர் பக்கத்து ராஜாக்கள, ஆங்கிலப் படைகள் உதவியோடயே கவுத்தாங்க. வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி ராஜாக்கள் ஆங்கிலேயர்கள எதிர்த்தாலும் அவங்களையும் கவுக்கறதுக்கும் ஆட்கள் இருந்தாங்க.

ஆக, 1800கள்லயே, ராஜாக்கள் காலத்துல இருந்தே ஆங்கிலேயர்கள எதிர்த்துகிட்டு இருந்திருக்காங்க. ஆனா ஒன்னா இல்ல, குழுக்கள் குழுக்களா.

1900-கள்ல ராஜாக்கள் காலம்-லாம் மறந்துபோயி மக்கள் அவங்களா போராட ஆரம்பிச்சிருந்தாலும், காங்கிரஸ் மாதிரி அமைப்புகள் ஆரம்பிச்சிருந்தாலும் எல்லா மாகாணங்கள்ல இருந்தும் வந்த காங்கிரஸ் பிரதிநிதிக்களுக்குள்ள ஒரு ஒருமித்த கருத்த உண்டாக்கறதே அவ்ளோ சுலபமான காரியமா இல்ல.

காந்தியடிகள் அகிம்சைப் போராட்டத்த ஒரு நாள்ல ஆரம்பிச்சிடல. அங்கங்க நடந்த விவசாயிகள் பிரச்சனை, தொழிலாளர்கள் பிரச்சனைலதான் அகிம்சைப் போராட்டத்த ஆரம்பிச்சாரு. அதுல அவருக்கு கெடைச்ச வெற்றி அகிம்சைப் போராட்டத்துமேல மக்களுக்கு ஒரு நம்பிக்கைய உண்டாக்குச்சு. இந்தியா முழுசும் இருந்த மக்கள் ஒரே குறிக்கோளோட போராட அந்த நம்பிக்கை போதுமானதா இருந்துச்சு.

இன்னொரு விஷயம், அகிம்சைப் போராட்டம்-ங்கறது உண்ணாவிரதம் மட்டும் இல்ல. காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தாருங்கறதுக்காக உண்ணாவிரதம் இருந்தா மட்டும் வெற்றி கெடைச்சுடுங்கறது சரியான அனுகுமுறை இல்லயே.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னாடியே இந்தியால சுதந்திரப் போராட்டம் வலுவடைஞ்சுடுச்சு. காந்தியடிகளோட சுதேசி இயக்கம், அந்நிய உடைகள மக்கள் தூக்கி வீச காரணமா இருந்துச்சு. இந்தியால இருந்து பருத்திய ஏற்றுமதி செஞ்சு, ஏற்றுமதி வரி வசூலிச்சு, அதுல ஆடை செஞ்சு, அதை இறக்குமதி செஞ்சு, இறக்குமதி வரி விதிச்சு கொள்ளை லாபம் பாத்துகிட்டு இருந்த ஆங்கிலேய அரசாங்கத்துக்கு இது பலத்த அடி.

ஒத்துழையாமை இயக்கத்துனால அரசாங்க இயந்திரம் ஓட முடியாம நின்னுடுச்சு. ஆங்கிலேயப் பிரபுக்களுக்கு, ‘ஸ்டியரிங்க மட்டும் சுத்திகிட்டு இருந்தா வண்டு ஓடாது’-ன்னு புரிய ஆரம்பிச்சுது.

‘இனிமேல் மக்கள் யாவரும், அரசு கடைகளில் மட்டும்தான் உப்பு வாங்க வேண்டும், ஒரு கிலோ உப்பின் விலை, தீபாவளித் தள்ளிபடி போக, கிலோவுக்கு ரூபாய் 595/- மட்டுமே!! வெளிக்கடைகளில் உப்பு வாங்குபவர்களின் உடல்கள் வீங்க வைக்கப்படும்’-ன்னு ஒரு அறிவிப்பு வந்த ஒடனே, அதை வாபஸ் வாங்கும் வரை உண்ணாவிரதம்-ன்னு காந்தியடிகள் உண்ணாவிரதம் இருக்கல. தானே நடந்து போயி, கடல் தண்ணில உப்பு தயாரிச்சு மக்களுக்கெல்லாம் கொடுத்தாரு. அவரப் பாத்து எவ்ளோ பேரு அவர் பின்னாடியே போனாங்க?? உப்பு வரி மூலமா அரசு கஜானாவ நெறப்ப நெனைச்சவங்க வயித்துல காந்தி புளியல்ல கரைச்சாரு.

பொருளாதாரத்துக்கு வருவோம், இரண்டாம் உலகப்போர்ல இங்கிலாந்துக்கு நெறைய இழப்புகள்தான், இருந்தாலும், அது வெற்றிக் கூட்டணிலதான இருந்துச்சு. இரண்டாம் உலகப்போர்ல தோத்து எல்லாத்தையும் இழந்ததுனால இந்தியாவ விட்டு ராவோட ராவா ஓடிட்டாங்க-ங்கற மாதிரி இல்லயே. இதுவே இந்தியா அவங்களோட முழுக் கட்டுப்பாட்டுல இருந்திருந்தா போயிருப்பாங்களா? இரண்டாம் உலகப்போரோட வெற்றிக் கூட்டணில இருந்த ஒரு நாடு, இந்தியாவை பயன்படுத்தி எப்படி தன்னோட பொருளாதாரத்த எப்படி உயர்த்திக்கலாம்-னுதான் யோசிக்குமே தவிர, சும்மா விட்டுட்டு போயிடுவாங்களா? ஜிம்பாபே நாட்டுக்கு 1980-லயும், புருனை நாட்டுக்கு 1984-லயும்தான் சுதந்திரம் கொடுத்திருக்காங்க ஆங்கிலேயர்கள். இந்தியாவ விட்டு ஏன் 1947-லயே போனாங்க?

மலேசியா சிங்கப்பூருக்கு வருவோம். இலங்கையும் பர்மாவும் 1948-ல சுதந்திரம் வாங்கியிருந்தாலும், மலேசியா 1957-லதான் சுதந்திரம் வாங்கியிருக்கு. ( நாம வாங்கி 10 வருஷங்களுக்கு அப்புறம்) 1965-லதான் சிங்கப்பூர் சுதந்திரமாயிருக்கு. அதுவும் மலேசியாகிட்ட இருந்து பிரிஞ்சு. இந்தியா மாதிரி பெரிய நாட்ல இருந்து வசூலிக்கற வரி வேணும்னா அரசு கஜானாவ நெறப்பலாமே தவிர, பர்மாலயும், இலங்கைலயும், மலேசியாவுலையும் வர்ற வரி நெறப்பாது-ங்கறதுனாலயும், அங்க அதிகமா எண்ணை கிணறுகள் இல்லங்கறதுனாலயும் சுதந்திரம் கொடுத்துட்டு போயிருக்கலாம்.

இன்றைய போராட்டங்களுக்கும் அகிம்சை உளுத்துப்போன தத்துவமா?
இலங்கைல நடக்கற போராட்டத்தையும் காஷ்மீர்ல நடக்கற போராட்டத்தையும் ஒன்னா வெச்சு பேசறதே சரி இல்ல-ன்னுதான் நெனைக்கறேன். காஷ்மீர்ல நடக்கறது சுதந்திரப் போரே இல்ல. வேலையில்லாத பாகிஸ்தான்/ஆப்கானிஸ்தான் ஆதிவாசிகள ஏவிவிட்டு பாகிஸ்தான் இந்தியாவுக்கு கொடுக்கற தலைவலி. அங்க அகிம்சைக்கு தேவையே இல்ல. அவங்களுக்கு தேவை சுதந்திரம் இல்ல. இந்தியாவுக்கு தலைவலி. அவ்ளோதான்.

இலங்கை பிரச்சனையோட ஆழம் எனக்கு அவ்ளோவா தெரியல. பிரபாகரன் மேல இருந்த மரியாதையெல்லாம் ராஜீவ் காந்தியோட போயிடுச்சு. இன்னும் எவ்ளோ காலத்துக்குத்தான் அதையே சொல்லிட்டு இருக்கப்போற-ன்னு கேக்கலாம். சமீப காலங்கள்ல அவர் மேல மரியாதை ஏற்படற அளவுக்கு அப்டி ஒன்னுமே நடக்கல. தவிர அவரோட வாழ்க்கையும் திறந்த புத்தகமா இல்ல. திடீர்ன்னு வந்து பேச்சுவார்த்தைங்கறாங்க, அப்புறம் ஆளயே காணும். திடீர்ன்னு பீரங்கி, ஹெலிகாப்டர், விமானத்தோட ஒரு போர் செய்யறாங்க. அவ்ளோ பொருளாதார வசதி அவங்களுக்கு எப்படி கெடைக்குது?

காந்தியடிகளின் போராட்டங்களுக்காக அவர் பணம் வசூலிக்கவில்லை. மக்களோட ஒத்துழைப்புயும் உழைப்பையும்தான் மட்டுமே வசூலித்தாரு. காடுகளுக்குள்ளே மறைவு வாழ்க்கை வாழல, மக்களுக்குள்ளே துறவி வாழ்க்கை வாழ்ந்தாரு. பிரச்சனைக்குள்ளான மக்களுடன் சேர்ந்து நின்று போராடினாரு. மக்கள் மீது விழுந்த அடிகளில் முதல் அடி அவர் மேல்தான் விழுந்தது. அந்த அடி அவருக்கு பின்னால நின்னவங்களுக்கு அடிய தாங்கற சக்திய கொடுத்துது. அந்த சக்தி அவங்களுக்கு வெற்றிய கொடுத்துது.

காந்தியடிகளோட பிறந்தநாளான இந்த நாள் ‘உயர்ந்த நோக்கமும், அகிம்சை முறைகளும் நிச்சயமாக வெற்றியை மட்டுமே தரும்’-ன்னு உலகத்துக்கு நிச்சயமா ஞாபகப்படுத்துது-ங்கறதுதான் நான் நெனைக்கறேன்.


வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!

அடிமை வாழ்வு அகன்று இந்நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம்
குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!

-மகாகவி பாரதியார்.