லட்டு பிரசாத யாதவ்.

உலகத்துல மிகப்பெரிய நிறுவனங்கள்ல ஒன்னு நம்ம இந்தியன் ரயில்வேஸ். கிட்டத்தட்ட 64,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தியாவ இருப்புப்பாதைகளால இணைக்கிற இந்த நிறுவனத்துல 16 லட்சம் பேர் வேலை செய்யறாங்க. வருஷத்துக்கு 500 கோடிக்கும் மேல மக்களையும் 35 கோடி டன் சரக்குகளையும் சுமக்குது இந்த இரயில்கள். ஆங்கிலேயர்களால துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தோட வயசு 150-க்கும் மேல. 1851-ல(டிசம்பர் 22, 1851) சரக்கு ரயில்களும் 1853-ல(ஏப்ரல் 16, 1953) பயணிகள் ரயில்களும் ஆரம்பிச்சிருக்காங்க.

போக்குவரத்து வசதிதான் ஒரு நாட்டோட முன்னேற்றத்த உறுதி செய்யுது-ன்னு சொல்லுவாங்க. அதுமாதிரி இந்தியாவோட முன்னேற்றத்துல பெரும் பங்கு இரயில்வே நிறுவனத்துக்கு உண்டு.

மனித உடம்புல இரத்தக் குழாய்கள் போற மாதிரி, இந்தியாவோட இரத்தக் குழாய்களா தெரியறது இந்தியன் இரயில்வேஸ்தான்.

‘இந்தியன் ரயில்வேஸ்-ங்கறது ரொம்ப பெரிய நிறுவனம், அத நிர்வகிக்கறது-ங்கறது யானைய கட்டி தீனி போடற மாதிரி’-ன்னு எங்க ஊர் பெருசுங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

ஒவ்வொரு தடவ ரயில்வே பட்ஜெட் போடும்போதும், பட்ஜெட்-ல எவ்ளோ பெரிய துண்டு விழப்போகுதோ! ரயில் கட்டணம் எவ்ளோ ஏறப்போகுதோ!!-ன்னு கவலையா இருக்கும். போன தேர்தல் முடிஞ்சு லல்லு இரயில்வே அமைச்சரா வந்தப்பவும் இது ஏதும் மாறிவிடப்போகுது-ன்னு நெனைக்கவே இல்ல. அடிக்கடி அவர் பல ரயில் நிலையங்கள்ல சோதனைகள் நடத்தினதா செய்திகள் படிச்சப்போகூட ஏதோ அரசியல் ஸ்டண்ட்-ன்னுதான் நெனைச்சேன்.

ஆனா போன மாசம், இரயில்வே நிறுவனம் 13,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கு-ன்னு செய்தி படிச்சொன்ன ஆச்சரியமா இருந்துச்சு. பல வருஷங்களா நஷ்டத்துலயே இயங்கிட்டு இருந்த நிறுவனம் இவ்ளோ லாபம் ஈட்டியிருக்குன்னா எப்டி?

இந்த லாபத்துக்கு அமைச்சர் ‘லல்லு ப்ரசாத் யாதவ்’ செஞ்ச அதிரடி மாற்றங்கள்தான் காரணம்-ன்னு சொல்றாங்க. வழக்கமா, பட்ஜெட் படிக்கும்போதும், ரெண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதி பெரிய விபத்துகள் நடக்கும்போதும் மட்டும்தான் ரயில்வே அமைச்சர்கள் பேரு அதிகமா பேசப்படும். 13,000 கோடி லாபம் ஈட்டினதுக்காக பேசப்படறது எனக்கு தெரிஞ்சு இப்போதான்.

இது எப்டி லல்லுவால முடிஞ்சுது?

இந்தியன் இண்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்-ல அவரே சொன்னது.

* ரூபாய் நான்காயிரம் கோடி மதிப்புள்ள ரயில் இன்ஜின்களைப் பராமரிக்க பதினாறாயிரம் கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது. அதைக் குறைத்தேன்.

* 65 முதல் 70 டன் வரை சரக்குகள் ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களில், ஐந்து முதல் பத்து டன் வரை எடை குறைவாக சரக்கு ஏற்றப்பட்டிருந்தது. அதைச் சரி செய்தேன்.

* ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் நிற்காமல் ஓடும் இந்த சரக்கு ரயிலில், வெறும் எட்டு மணி நேரம் மட்டுமே சரக்குகள் ஏற்றி, இறக்கும் பணி நடைபெற்று வந்தது.
(அதாவது நைட் ஒரு ட்ரெயின் ஒரு ஸ்டேஷனுக்கு வந்தாலும், காலைல வரைக்கும் சரக்குகள் ஏற்றுவது இறக்குவதோ இருக்காது.) அந்தக் காலதாமதத்தைக் குறைத்து, 24 மணி நேரமும் சரக்குகள் ஏற்றி, இறக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டேன்.

இந்த உத்தரவுகள் அதிக பலனைத் தந்தன. தற்போது ஆண்டுக்கு 15 ஆயிரம் டன் அதிகமாக சரக்குகள் சுமந்து, ரூபாய் 9,000 கோடியை லாபமாகத் தந்து வருகிறது.

* ரயில்வே ஊழியர்களுக்கு உள்ள குறைகள் என்ன என்பதை நேரடியாகவே கேட்டு அறிந்தேன். தேவைப்பட்ட வசதிகளையும் செய்து கொடுத்தேன். (65 நாள் சம்பளத்தை போனஸா கொடுத்து தன்னோட ஊழியர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லியிருக்காறே!!)

* பயணிகள் ரயிலில் பயணிகள் இடம் கிடைக்காமல் திரும்புவதைத் தடுக்க ரயில்களில் பெட்டிகளைக் கூட்டினேன்.

* பயணிகளை ஈர்க்க, கட்டணக் குறைப்பு, பல புதிய ரயில்கள் அறிமுகம் என்று அவர்களை உற்சாகப்படுத்தினேன். A.C கட்டணம் 10 முதல் 18% வரை குறைத்ததால் சாதாரண பயணிகளும் A.C-யில் பயணம் செய்யத் துவங்கிவிட்டனர். பல வழித்தடங்களை பிராட் கேஜ்களாக மாற்றியதன் விளைவாக இப்போது 20% பயணிகள் எண்ணிக்கை கூடியுள்ளது.

இப்டி தன்னோட வெற்றியின் ரகசியங்கள உற்சாகமா சொல்லியிருக்காரு.

அடுத்த வருஷம் 16,000 கோடி லாபம் எதிர்பாக்கறாங்களாம். 2015 வரைக்கும் பல திட்டங்கள் வெச்சிருக்காங்க. அட ஒரு சில்வர் ஜூப்லி படம் பாத்த மாதிரி இருக்கே-ன்னு ஆச்சரியமா பாத்தா ‘இதுவரைக்கும் பாத்ததெல்லாம் வெறும் ‘ட்ரெய்லர்’தான் இனிமேதான் சினிமாவே ஆரம்பம்‘-ங்கறாரு லல்லு!!

அடுத்த தேர்தல் முடிஞ்சப்புறம், இரயில்வே அமைச்சர் பதவிய எங்க கட்சிக்கு கொடுத்தாதான் ஆட்சி அமைக்க ஆதரவு தருவோம்-ன்னு கூட்டணி கட்சிகள் போட்டி போடற அளவுக்கு ஒரு அசத்து அசத்திட்டாரு லல்லு.