விதை.

‘சன்னதி தெருல ஏதோ கூட்டம் நடக்கப்போறதா பேசிக்கறா, அந்த வழியா போகாத’

‘வடக்கு வீதி வழியா சுத்தீண்டுபோயி, மேலவாசல் தேரடி வழியா உள்ள போ!!’

‘பூஜைய முடிச்சுண்டு போன வழியாவே திரும்ப வந்துடு’

‘வழில யார் என்ன கேட்டாலும் பதில் பேசாத’

‘யாராவது எதாவது கோஷம் போட்டுண்டு போனான்னா, அந்தப் பக்கம் போகாத, திரும்பி ஆத்துக்கே வந்துடு’

‘தலைய நன்னா சீவி முடிஞ்சுண்டு, நெத்திக்கு இட்டுண்டு போ!’

‘போலீஸ்காராள பாத்தா நமஸ்காரம் சொல்லிட்டு போ. அவாள பாத்தா ஓடாத!, உங்க அப்பா மாதிரி நீயும் அடிவாங்கிண்டு வந்து படுத்துடப்போற!!’

கோவிலுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் ‘அம்பி’-க்கு அவனது அம்மா கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தாள்.

நடுக்கத்துடன் புறப்பட்ட அம்பி-க்கு லேசாக வேர்க்க ஆரம்பித்திருந்தது.

வீட்டு வாசலுக்கு வந்து இருபுறமும் பார்த்தான். சன்னதி தெரு முனையில் போலீஸ் கூட்டமாக நிற்பதைப் பார்த்ததும் திரும்பி, வடக்கு வீதி நோக்கி நடக்கலானான்.

வடக்கு வீதியில், மக்கள் சிறு சிறு கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தயும், போலீஸ்காரர்களைக் கண்டதும் அவர்கள் கலைந்து சென்றதையும் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான்.

மெல்ல நடந்து, வடக்கு வீதியும் மேல வீதியும் சந்திக்கும் மூலை வந்ததும், திடீரென்று ஒரு போலீஸ் பட்டாளம் வந்து அங்கு நின்றுகொண்டிருந்தவர்களை அடித்து விரட்டத் தொடங்கியது. மக்கள் திசைக்கொருவராக ஓடத்தொடங்கினர்.

‘யாராவது எதாவது கோஷம் போட்டுண்டு போனான்னா, அந்தப் பக்கம் போகாதே’-என்று அம்மா சொன்னதை மீண்டும் ஒருமுறை நினைத்துக்கொண்டு, அம்பியும் தேரடி வாசலை நோக்கி ஓடத்தொடங்கினான்.

போலீஸ்காரர்கள் விரட்டி வந்து, கையில் பிடிபட்டவர்களையெல்லாம் தடியால் அடிக்கத்தொடங்கினர். அடிபட்டு இரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்தவர்களும் விடாமல் கோஷமிட்டுக்கொண்டிருந்ததை பார்த்தபடி அம்பி ஓடினான். அம்மா சொன்ன வார்த்தைகளை மீறி மக்களின் கோஷம் அவன் நெஞ்சில் இடம் பிடிக்கத்துவங்கியிருந்தது.

கோவில்வரை ஓடியவன் வாசலில் நின்று திரும்பிப் பார்த்தான்.

தேரடியில், தேருக்கு அடியில் சென்று ஒளிந்தவர்களை போலீஸ்காரர்கள் பூட்ஸ் காலால் மிதித்துகொண்டிருந்தார்கள். அடிபட்டும், மிதிபட்டும் மக்கள் தேரைச் சுற்றி இரைந்து கிடந்தனர். அரை மயக்க நிலையிலும் அவர்கள் வாயில் கோஷம் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது.

ஓடிவந்த மூச்சிரைக்க, கோபமும் அழுகையும் பொங்க, அடித்தொண்டையிலிருந்து, உயர்ந்த குரலில், அவனையறியாமல் ‘வந்தே மாதரம்’ என்று கோஷமிட்டான்.

இரண்டு போலீஸ்காரர்கள் கைத்தடியை ஓங்கிக்கொண்டு அம்பியை நோக்கி ஓடத்தொடங்கினர்.