பாவம். கொடூரன். (U)

‘வணக்கம்-ங்க. நல்லா இருக்கீங்களா? ‘
‘என் பேரு, ஹூவர்.(Hoover)!. நைஸ் டு மீட் யூ!!’
‘இன்னிக்குதான் நான் விடுதலை அடைஞ்சேன். இவ்ளோ நாளா ஒரு கொடூர முதலாளி கிட்ட மாட்டிக்கிட்டு நான் பட்ட அவஸ்தைகள்ல இருந்தும், கொடுமைகள்ல இருந்தும் இன்னிக்குதான் விடுதலை. அந்த மகிழ்ச்சிய உங்க கிட்ட பகிர்ந்துக்கறதுல ரொம்ப சந்தோஷம்.’

‘வண்டி வர்றதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு. அதுக்குள்ள, என்னோட கதைய சுறுக்கமா சொல்றேன்.’

‘என்னோட முழுப்பேரு ஹூவர் விண்ட்டணல்.(Hoover Windtunnel). பொறந்த ஊரு, குபேய் நியூ ஏரியா(Gubei New Area). சீனால, ஓல்ட் ஷங்காய் (Old Shanghai, China) பக்கத்துல உள்ள கிராமம். என் கூடப்பொறந்தவங்க ஆயிரக்கணக்கானவங்க. பாக்கறதுக்கு நாங்க எல்லோரும் பளபளப்பா ஒரே மாதிரி இருப்போம். எங்க அத்தனை பேருக்கும் ஒரே ஆசைதான். அமெரிக்கா வரணும். எல்லோருடைய கனவும் அதுதான். எங்களுக்கு மட்டும் இல்ல, பக்கத்து நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆசியா கண்டத்துல உள்ள பலநாடுகள்ல பொறக்கறவங்களோட கனவும் அதுதான்.

‘அமெரிக்கா வந்துட்டா நல்ல விலைக்கு போகலாம். அமெரிக்கா ரொம்ப சுத்தமான ஊரு, குப்பையே கிடையாது. இங்க வந்துட்டா வேலை அதிகமா இருக்காது. கொஞ்சமா, சுலபமாதான் இருக்கும். வாழ்க்கைய நல்லா அனுபவிக்கலாம். இப்டி பல கனவுகளோடதான் வந்தேன்.’

‘நியூ யார்க் துறைமுகத்துல வந்து இறங்கி, அமெரிக்கா காத்த சுவாசிச்சப்போ, அப்டியே சொர்கத்து காத்த சுவாசிச்சதுமாதிரி இருந்துச்சு. எனக்கு முக்தியே கெடைச்சுட்டா மாதிரி ஒரு சந்தோஷம். அப்டியே வானத்துல பறந்தேன். சில வாரங்களுக்கப்புறம் காஸ்ட்கோ (Costco) கடைல மிடுக்கா நின்னுகிட்டு இருந்தப்போ பிடிச்சது சனி எனக்கு.’

அன்னிக்குதான் என்னோட கொடூர மொதலாளி என்னை வாங்கினார். அவனுக்கென்ன மரியாதை, வாங்கினான். அதுக்கு முன்னாடியே, டர்ட் டெவில்(Dirt Devil), யுரேகா(Eureka)-ன்னு ரெண்டுபேரு அவங்க வீட்டுக்கு வேலைக்கு போயி, வேலை செய்ய முடியாம, பெல்ட் அறுந்து போயி, ஹோஸ் ஒடைஞ்சு போயி கடைக்கே திரும்ப வந்துட்டதா சொன்னாங்க. அவன் என்ன வாங்கக்கூடாது-ன்னு நான் கடவுள வேண்டிகிட்டதெல்லாம் வீணாகிப்போச்சு.’

‘அவங்க வீட்டுக்குள்ள போகும்போதே கவனிச்சேன். ஹால்லயே அவ்ளோ குப்பை. கிச்சனையும், பாத்ரூமையும் பத்தி சொல்லவே வேண்டாம். நான் இருக்கறது அமெரிக்காதானா-ன்னு எனக்கே சந்தேகம் வந்துடுச்சு. அதிகமான குப்பைய சுத்தம் செய்யறதுக்காகவே என்ன வடிவமைச்சிருந்தாலும் அவ்ளோ குப்பைய ஒரே நேரத்துல நான் பார்த்ததே இல்ல. லேசா தலைய சுத்துச்சு. அன்னிக்கு வீட்ட சுத்தம் பண்ணி முடிக்கறதுக்குள்ள பெண்டு நிமிந்துடுச்சு. சுத்தம் பண்ணி முடிச்சுட்டு வீட்டுக்கு வெளில இருக்கற யுட்டிலிட்டி ரூம்(Utility Room)-ல கொண்டு போட்டு பூட்டிட்டான்.’

‘அன்னிக்கு ஆரம்பிச்ச சனி. ரெண்டு மூணு வாரத்துக்கு ஒரு முறை என்னை வெளில எடுப்பான். மூச்சு திணற திணற அவ்ளோ குப்பையையும் சுத்தம் செய்வேன். அவனோட மனைவி போடற குப்பை, குழந்தைகள் செய்யற அசுத்தம், அவங்க வீட்டு பூனை பண்ற அசுத்தம் உட்பட அவ்ளோவையும் சுத்தம் செய்யணும். அவங்க வீட்டு ஒட்டடை, சோபா, நாற்காலிகள கூட சுத்தம் செய்யணும். சுத்தம் செஞ்சு முடிச்சப்புறம் திரும்பவும் அதே ரூம்தான். எவ்ளோ குளிர்ல நடுங்கினாலும் சரி, வெய்யில்ல வெந்தாலும் சரி. அங்கதான்.

‘என்னோட குப்பைப் பை நிரம்பும்போது, அதை மட்டும் எடுத்து ஒரு தட்டு தட்டிட்டு திரும்ப போடுவான். பல நேரம் அவனோட நண்பர்களுக்கு வேற தாராளமா இரவல் கொடுத்துடுவான். அவங்க வீட்டு குப்பையும் சேர்த்து சுத்தம் செய்யணும். அப்டி வாங்கிட்டு போன நண்பர்கள்ல எதாவது ஒரு நண்பன் என்னிக்காவது ஒரு தடவை என்ன தொடைச்சா உண்டே தவிர மொதலாளி ஒரு தடவைகூட தூசி தட்டினது கெடையாது’

நான் இன்னும் கொஞ்ச நாள்ல இஞ்சின் அட்டாக்கோ, ஃபில்டர் டியூமரோ வந்து, போய் சேர்ந்துடுவேன்னுதான் நெனைச்சுட்டு இருந்தேன். ஆனா என்னோட நல்ல நேரம், என் மொதலாளி வேற ஊருக்கு மாத்தலாகிப் போறான். என்னையும் தூக்கிட்டு போக முடியாம, இங்கயே, இந்த குப்பைத் தொட்டி பக்கதுலயே வெச்சுட்டு பொயிட்டான். இன்னும் கொஞ்ச நேரத்துல குப்பை வண்டி வந்துடும். அவங்க வந்து என்னை எடுத்துட்டு போயி எங்கேயாவது ஒரு மூலைல போட்டுட்டா, என்னோட கடைசி காலம் வரைக்கும் அந்த மூலைலயே கடந்துட்டு போயிடுவேன்.’

‘குப்பை வண்டி வர்ற நேரம் ஆச்சு. நான் என் கதையையே பேசிட்டு இருக்கேன். உங்களைப் பத்தி ஒன்னுமே கேக்கல. உங்க பேரென்ன சொன்னீங்க? உங்க கைல குப்பைகூடை கூட இல்லயே! குப்பை தொட்டி பக்கம் வந்திருக்கீங்க!! அப்போலேர்ந்து என்னை ஒரு மாதிரியாவேற பாத்துகிட்டே இருக்கீங்க? யார் சார் நீங்க?’

‘சார். ஹலோ!! என்னை ஏன் சார் தூக்கறீங்க?’

‘ஹலோ சார்!! வேண்டாம் சார். விட்றுங்க சார்! அதோ குப்பை வண்டி கூட வந்துடுச்சி சார்!! சார்!! ‘

‘யோவ்! யோவ்!! என்னை விட்டுடுய்யா!! யோவ்!’

‘என் இஞ்சின் கெட்டுபோயிடுச்சுய்யா. ஹோஸ் ஒடைஞ்சுடுச்சுய்யா. ஃபில்டர்ல ஓட்டைய்யா. நான் சரியா வேலை செய்ய மாட்டேன்ய்யா! கரண்ட் ஷாக் அடிக்கும்ய்யா!!’

‘என்ன விட்றுய்யா. ஹலோ! ஹலோ!! யோவ்!! விட்றுய்யா!!!’