கார குழம்பும் சர்க்கரைச் சத்தும்.

கார கொழம்போ, புளிப்பு மிட்டாயோ, இல்ல என்ன அறுசுவை விருந்தா இருந்தாலும் வாய் வரைக்கும்தான சுவை. தொண்டைய தாண்டி உள்ள போயிடுச்சுன்னா வெறும் சாப்பாடு. அவ்ளோதான். அது பீட்ஸாவா இருந்தாலும் சரி, பிரியாணியா இருந்தாலும் சரி.

Digestion நாம சாப்டற சாப்பாடு, வயித்துல சுரக்கற அமிலங்களோட சேர்ந்து, கரைஞ்சு, சிறுகுடலுக்கு போகுது. சிறுகுடல் சாப்பாட்ல இருக்குற சத்துக்கள தனித்தனியா பிரிக்குது. அதுல முக்கியமான சத்துகள்,

சர்க்கரைச்சத்து (கார்போஹைட்ரேட்).

புரதச்சத்து (புரோட்டீன்)

கொழுப்புச்சத்து

நார் சத்து (ஃபைபர்)
அப்புறம் ரொம்ப முக்கியமானது தண்ணீர்.

நம்ம சாப்டற அரிசி சாப்பாட்டுல நெறைய இருக்கறது கார்போஹைட்ரேட்-ங்கற சர்க்கரைச்சத்துதான். சாம்பார்ல போடற குண்டு சாம்பார் பருப்புல, புரதச்சத்து இருக்கு. சமைக்கற எண்ணைல கொழுப்புச்சத்தும், காய்கறில நார்ச்சத்தும் இருக்கு. இது எல்லாம் சரியான அளவுல இருந்துச்சுன்னா நல்லது. அதிகமா ஆனாலும், கம்மியா ஆனாலும் பிரச்சனைதான்.

அது என்ன சரியான அளவு? அதை எப்டி தெரிஞ்சுக்கறது?

நாம எதுக்காக சாப்டறோம். உயிரோட இருக்கறதுக்காக. உயிரோட இருக்கறதுன்னா? பேசறது, கேக்கறது, பாக்கறது, நடக்கறது, ஓடறது, முக்கியமா சுவாசிக்கறது. சுருக்கமா சொல்லணும்னா உடம்பு இயங்கறது. நாம தூங்கும்போதும் உடம்பு இயங்கிட்டுதான இருக்கு. மூச்சு உள்ள போகணுமே. உடம்போட இந்த இயக்கத்துக்கு சக்தி (எனர்ஜி) வேணும். அதுக்காக சாப்டறோம்.

சரி, இதுக்கெல்லாம் எவ்ளோ சக்தி வேணும்? அதுக்காக நாம எவ்ளோ சாப்டணும்.
இங்கதான் பிரச்சனை.
பாக்கறது, பேசறது, கேக்கறது, சுவாசிக்கறது இதெல்லாம் தினமும் ஒரே மாதிரிதான் செய்யறோம். ஆனா, நடக்கறது, ஓடறது, ஆடறது, பாடறது இதெல்லாம் தினமும் ஒரே மாதிரி செய்யறது இல்ல. ஒரு நாள் நடந்து போயி பஸ் ஏறறோம், இன்னொருநாள் ஓடிப்போயி ஏறறோம். மாடில இருந்து ஒரு நாள் படில இறங்கி வர்றோம். இன்னொருநாள் லிஃப்ட்ல வந்துடறோம். ஆட்டம் பாட்டம் எல்லாம் (சில கொடுத்துவெச்சவங்களுக்கு மட்டும்) வெள்ளி, சனில மட்டும்தான். மத்த நாட்கள்ல இல்ல.

அதுனால ஒரு நாளைக்கு இவ்ளோ சக்திதான் தேவை-ன்னு துள்ளியமா சொல்ல முடியறது இல்ல. பாக்கறது, பேசறது, கேக்கறது, சுவாசிக்கறது இதெல்லாம் தினமும் ஒரே மாதிரி இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேற அளவு சக்தி தேவைப்படுது. ஒரே பங்க்ல, ஒரே நேரத்துல போட்டாலும், ஒரு லிட்டர் பெட்ரோல்ல நம்ம வண்டி 60 கிலோ மீட்டர் ஓடுது, பக்கத்து வீட்டுக்காரரோட வண்டி 80 மைல் ஓடறதில்லையா? அதுமாதிரி.

சரி, எவ்ளோ சக்தி தேவை-ன்னு எப்டி சொல்றது?
அத சொல்றதுக்கு பயன்படுத்தற அளவுகோல்தான் ‘கலோரி’. Boiling waterஒரு கிராம் தண்ணியோட வெப்பத்த / சூட்ட, ஒரு டிகிரி செல்ஷியஸ் உயர்த்தறதுக்கு எவ்ளோ சக்தி (அ) வெப்பம் தேவைப்படுதோ அதுதான் ‘ஒரு கலோரி’. உதாரணமா, 30 டிகிரி செல்ஷியஸ் சூட்ல இருக்கற ஒரு கிராம் தண்ணிய 31 டிகிரி செல்ஷியஸ்-க்கு உயர்த்தறதுக்கு எவ்ளோ சக்தி தேவையோ, அது ஒரு கலோரி.

அடுத்து வருவது..
அப்போ நம்ம இதயம் துடிக்க எவ்ளோ கலோரி சக்தி தேவை?
ஆனியன் ரவா மசாலா தோசைல எவ்ளோ கலோரி இருக்கு?