திருமணம் 1.0

ஆகாஷுக்கு காலை முதலே பரபரப்பு பற்றிக்கொண்டது.
இந்தத் ‘திருமண’த்திற்காக அவன் பல நாட்களாக காத்திருந்தான். ஒரு மாதம், முப்பது நாட்கள். இருபத்தொன்பது நாட்கள் என கவுண்ட் டவுன் ஆரம்பித்து, இன்று இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கின்றது.

ஷார்ட்ஸ், ஜாக்கெட், ஹெட் போன், க்ளௌஸ் மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு தயாரானான்.

தான் தேர்ந்தெடுத்த மணப்பெண் ஐஸ்வர்யாவின் படத்தை எடுத்துப் பார்த்தான், கன்னத்தை தட்டினான்.

அலங்கரிக்கப்பட்ட குதிரையில், திருமண மண்டபத்தின் வாசலில், பட்டு வேஷ்டி பட்டு சட்டை அணிந்து காத்திருந்தான். ஐஸ்வர்யா, முகத்தை மெல்லிய துணியால் மூடியபடி வந்து ஆகாஷைப் பார்த்து புன்னகைத்தாள். குதிரையில் இருந்து இறங்கி ஐஸ்வர்யாவின் கைகளைப் பற்றினான். முதன் முதலாக அவள் கைகளை தொட்டதில் இருந்த சுகம் அவனுக்குப் பிடித்திருந்தது.

லேசாக மெய் சிலிர்த்தது

தோள்கள் இரண்டும் உரச நடந்து வந்தார்கள். சுற்றிலும் வந்த அவனது நண்பர்களும், தோழிகளும் கிண்டல் செய்வதையும், வெட்கத்தில் ஐஸ்வர்யாவின் கன்னங்கள் சிவந்ததையும் ரசித்தபடி நடந்துவந்தான். நாதஸ்வர இசையும், மந்திர ஒலியும் கலந்து ஒலித்தன.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் புடை சூழவும், யாகத்தீயின் புகை சூழவும் தாலி கட்டினான். திருமணத்தைத் தொடர்ந்து வந்த விளையாட்டுகளிலும், சாப்பாட்டிலும் அவன் மனம் செல்லவில்லை. இரவை நோக்கி நகர்ந்தான்.

முதலிரவு அறை மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மெல்லிய இசை இழைந்துகொண்டிருந்தது. மல்லிகையின் மணமும், ஊதுபத்தி மணமும் ஆகாஷின் மனத்தை நிரப்பியிருந்தது. ஐஸ்வர்யா கதவைத் திறந்தாள். ஆகாஷின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. கையில் பால் சொம்புடன் உள்ளே வந்து, சொம்பை மேஜையில் வைத்துவிட்டு ஆகாஷ் காலில் விழுந்தாள்.

ஆகாஷ் அவளது தோள்களைப் பற்றி தூக்கினான். கட்டிலில் அமர்த்தினான். முத்தம் கொடுக்கும் விதமாக அவளை அருகில் இழுத்தான். அவள் வெட்கத்தில் விலகிச் சென்றாள். ஆகாஷின் ஆர்வம் அதிகமானது. அவளை கொஞ்சம் அழுத்தமாகப் பிடித்து இழுத்து அணைக்க முயன்றான்.

பீப் பீப். பீப் பீப். பீப் பீப்.

ஆகாஷின் கண்முன் ஒரு எரர் ஸ்க்ரீன் தெரிந்தது.
‘நீங்கள் இலவசமாக வாங்கிய ‘திருமணம் 1.0′ வெர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டில், நீங்கள் விரும்பும் இந்தப் பகுதியை விளையாட முடியாது. இந்தப் பகுதியையும், ‘ஸ்விஸ்ஸில் ஸ்வீட் நைட்’, ‘சிங்கப்பூரில் தேனிலவு’, ‘துபாயில் துயில்’ போன்ற பகுதிகளையும் விளையாட, திருமணம் 2.0-வை வாங்க வேண்டும். திருமணம் 2.0 டிசம்பர் 20ம் தேதி வெளியிடப்படுகிறது, விலை $49*.

(* ‘ஸ்விஸ்ஸில் ஸ்வீட் நைட்’, ‘சிங்கப்பூரில் தேனிலவு’, ‘துபாயில் துயில்’ போன்ற பகுதிகள் தனித்தனியே விற்கப்படும். விலை $9.)

திருமணம் 2.0 வை வாங்க முன்பதிவு செய்ய மணப்பெண்ணின் மூக்கை தொடவும். திருமணம் 1.0 வை ஆரம்பத்திலிருந்து விளையாட மணப்பெண்ணின் கன்னத்தை தட்டவும்.’

ஆகாஷ் சோகமாக ஹெட் போன், வெர்ச்சுவல் ரியாலிட்டி க்ளௌஸ் மற்றும் கருப்பு கண்ணாடி ஆகியவைகளை கழட்டி வீசினான்.