தூங்கறதுக்கு சக்தி(கலோரி) தேவையா?

சாப்பாட்ல இருந்து உடம்புக்கு எப்டி சக்தி கெடைக்குது-ன்னு பார்த்தோம். நம்ம உடம்புக்கு ஒரு நாளைக்கு எவ்ளோ கலோரி சக்தி தேவை? நாம நடக்கறதுக்கும் ஓடறதுக்கும் சக்தி தேவை சரி, தூங்கும்போது சக்தி தேவையா? நான் ஒரு கம்பெனில மேனேஜரா இருக்கேன், எனக்கும் அதே அளவு கலோரிதான் செலவாகுமா? மெட்டபாலிஸம், மெட்டபாலிஸம் அப்டீன்னா என்ன?

நம்ம உடம்புக்கு ஒரு நாளைக்கு எவ்ளோ கலோரி தேவை-ன்னு ஈசியா சொல்லிட முடியறது இல்ல-ன்னு முன்னாடியே பார்த்தோம். ஒவ்வொருத்தருக்கும் அது மாறுது. அவங்க அவங்க நடக்கற வேகம், ஓடற வேகம், நடக்கற, ஓடற தூரம், பாக்கற வேலை இதையெல்லாம் பொருத்து ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேற அளவு கலோரி தேவைப்படுது.

ஒரு மனுஷன் ரெஸ்ட் எடுக்கும்போது அவனுக்கு எவ்ளோ கலோரி தேவைப்படுது?
complex
நாம தூங்கிகிட்டு இருக்கும்போதும், இதயம் தூங்கறது இல்லயே. இதயம் இயங்கறதுக்கும், நுரையீரல் சுவாசிக்கறதுக்கும், உடம்போட எல்லா பாகங்களுக்கும் இரத்தத்த அனுப்பறதுக்கும் எவ்ளோ கலோரி தேவைப்படுது? அத கண்டுபிடிக்க ‘ஹாரிஸ் பெனடிக்ட்’(Harris-Benedict)-ங்கறவரு ஒரு பார்முலா கண்டுபிடிச்சிருக்கார். எவ்ளோ கலோரி தேவை-ன்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி BMR (Basal Metabolic Rate) கண்டுபிடிக்கணும். அதுக்கான பார்முலா,

BMR = sqrt(எடை2+வயசு2)[லாம்டா/sqrt(எடை2+வயசு2) + சிக்மா/sqrt(எடை2+வயசு2)]
:) பயந்துட்டீங்களா?

இப்டி ஒரு பார்முலா எனக்கு புரியணும்-னா, தலைமுடிய பிச்சுகிட்டு நான் மொட்டையாயிருப்பேன். அவ்ளோ குழப்பமான பார்முலா இல்ல. ஈசிதான்.

ஆண்களுக்கு,
66 + (13.7 X உடல் எடை கிலோவில்) + (5 X உயரம் செண்டிமீட்டரில்) – (6.8 X வயது).

மனசுலயே எல்லா கணக்கையும் போட்டு ஒன்னும் ஆகப்போறது இல்ல. அதுனால ஒரு கால்குலேட்டர எடுத்துக்கோங்க. தப்பில்ல.

அதுக்கு முன்னாடி உங்க எடைய தெரிஞ்சுக்கோங்க. தெரியலன்னா, ரயில்வே ஸ்டேஷனுக்கோ / வசந்த பவனுக்கோ போயி பாத்துட்டு வந்துடுங்க.

என்னோட எடை, உயரம், வயச வெச்சு கூட்டி கழிச்சு போட்ட கணக்கு.
எடை 76 கிலோ,
உயரம் 168 செண்டிமீட்டர்
வயசு 32.

66 + (13.7 * 76 ) + ( 5 * 168 ) – (6.8 * 32 )

போட்டு பாத்தா, BMR, 1729.6 வருது. 1730-ன்னு வெச்சுக்கலாம்

பெண்களுக்கு,
BMR = 655 + (9.6 X உடல் எடை கிலோவில்) + (1.8 X உயரம் செண்டிமீட்டரில்) – (4.7 X வயது).

BMR என்னன்னு பாத்தப்புறம், கலோரி கணக்கு ரொம்ப ஈசி. இப்போ நடக்கற வேகம், தூரம்-லாம் வெச்சு கலோரி எவ்ளோ தேவை-ன்னு பாத்துடலாம்.

திண்ணை-லயே படுத்து தூங்கறவருக்கு. (Very low activity)
கலோரி = BMR X 1.1 – 1.2
( (1730 * 1.1) – 1.2 = 1901 கலோரி. )

நடந்து போயி பஸ் பிடிச்சு ஆபீஸ் போறவங்களுக்கு / நடந்து மார்க்கெட் போயி காய்கறி வாங்கறவங்களுக்கு. (Minimum physical activity)
கலோரி = BMR X 1.3 – 1.375
( ( 1730 * 1.3 ) – 1.375 = 2248 கலோரி )

காலைல ஜாக்கிங் போய்ட்டு, ஆபீஸ் களம்பறவங்களுக்கு(Average physical activity).
கலோரி = BMR X 1.4 – 1.55
( ( 1730 * 1.4 ) – 1.55 ) = 2420 கலோரி )

தினமும் தவறாம உடற்பயிற்சி செய்றவங்களுக்கு (Frequent physical activity).
கலோரி = BMR X 1.6 – 1.725
( ( 1730 * 1.6 ) – 1.725 = 2766 கலோரி )

தினமும் காலைலயும் சாயங்காலமும் உடற்பயிற்சி செய்றவங்களுக்கு ( Heavy and intense physical activity)
கலோரி = BMR X 1.8 – 2.4
( ( 1730 * 1.8) -2.4 = 3112 கலோரி )

(இது எல்லாமே கிலோ கலோரி/சாப்பாட்டு கலோரி) இதுல வெய்யில்-ல வேலை செய்யறவங்களுக்கும், A/C-ல வேலை செய்யறவங்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம்.

இந்த கணக்கு, வளர்ந்து பெரியவங்களா இருக்கறவங்களுக்கு. சின்ன பசங்களுக்கு அவங்களோட உடல் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான சக்தி தேவைப்படும்-ன்னு நெனைக்கறேன்.

இந்த கலோரி கணக்கு நம்ம உடம்பு செலவு செய்யற சக்தியோட அளவு. பாங்க் அக்கவுண்ட்-ல இருந்து பணம் எடுக்கற மாதிரி. நாம சாப்டற சாப்பாட்ல இருக்கற கலோரி, நாம நம்ம உடம்புக்கு கொடுக்கற சக்தியோட அளவு. அக்கவுண்ட்ல பணம் போடற மாதிரி.

தினமும் 5000 ரூபா அக்கவுண்ட்ல போட்டுட்டு வெறும் 2000 ரூபா மட்டும் செலவு பண்ணினா என்னாகும்? அக்கவுண்ட்ல பணம் சேர்ந்துகிட்டே போகும். பாங்க் அக்கவுண்ட்-ல பணம் சேர்ந்தா நல்லதுதான். ஆனா, உடம்புல தேவைக்கு அதிகமா கலோரிய சேர்க்க சேர்க்க, பிரச்சனைகள்தான்.

அடுத்து வருவது..
ஓகே.. உடம்புக்கு இவ்ளோ கலோரி தேவை, அதை ஒரே நேரத்துல சாப்டுட்டா என்ன? ஏன் மூணு வேளை சாப்டணும்?
மெட்டபாலிஸம்-ன்ன என்ன?
ஒரு கிராம் தண்ணியோட சூட்ட ஒரு டிகிரி உயர்த்த 1 கலோரி தேவை, சரி. அப்போ ஒரு கிலோ ஐஸ் வாட்டர குடிச்சா, நம்ம உடம்பு அந்த தண்ணிய நம்ம உடம்போட சூட்டுக்கு கொண்டுவர கலோரி செலவு பண்ணும்-ல?? எவ்ளோ கலோரி செலவு பண்ணும்??