நோ ப்ராப்ளெம் – சுஜாதா.

இந்தியா வந்து, தமிழ் புத்தகங்கள் படிக்கறது கொஞ்சம் கொறைஞ்சிடுச்சு. வந்து ரெண்டு மூணு மாசத்தில ஒன்னு ரெண்டு சின்ன புத்தகங்கள்தான் படிச்சேன். அம்பானி பத்தி கிழக்கு பதிப்பகத்தோட ஒரு புத்தகத்துல சில பகுதிகள். ‘என்னை செதுக்கிய எண்ணங்கள்’-ங்கற Dr.M.S.உதயமூர்த்தி அவர்களோட புத்தகத்துல சில பகுதிகள்-ன்னு படிச்சேன். நேத்து சுஜாதா அவர்களோட ஒரு சிறுகதை தொகுப்ப எடுத்து நடுல இருந்து ஒரு கதை படிச்சேன்.

நோ ப்ராப்ளெம்-ங்கற கதை. லண்டன்ல இருந்து ம்யூனிக் வந்து இறங்கற ஒருத்தன் தன்னோட ம்யூனிக் அனுபவத்தப் பத்தி சொல்ற மாதிரி கதை.

ம்யூனிக் ரொம்ப அட்வாஸ்ஸான ஊர். ம்யூனிக் ஏர்போர்ட்ல இருந்து வீட்டுக்கு போறதுக்குள்ள வெளில நடக்கற எல்லாத்தையும் கவனிச்சு பாக்கறான் ஹீரோ. ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா!!’ பாட்டு ஸ்டைல்ல கவனிக்கறான். ஏர்போர்ட்ல இருந்து அவன பிக்கப் பண்ண வந்த பெண் அவங்க ஊர் பெருமையை எல்லாம் சொல்லிட்டே காரை ஓட்டிட்டு போறா. திடீர்ன்னு ட்ராஃபிக்ல கார் நின்னுடுது. ஏதோ ஆக்ஸிடெண்ட்-ன்னு ரேடியோல சொல்றாங்க. 10 நிமிஷத்துல க்ளீயர் ஆயிடும்-னும் சொல்றாங்க. சொன்ன மாதிரி 10 நிமிஷத்துல எல்லாம் சரியாயிடுது. கார் மூவாகி ஆக்ஸிடெண்ட் ஆன எடத்த க்ராஸ் பண்ணுது. அப்போ அந்த ஆக்ஸிடெண்ட்ல ரெண்டு பேர் இறந்து போயிருக்கறத ஹீரோ பாத்து பதறிப்போறான். ஆனா பிக்கப் பண்ண வந்த பொண்ணு கொஞ்சம் கூட அலட்டிகல.

அந்த எடத்த விட்டு நகரும்போது, ஹீரோ, சோகமா, ‘ஐயம் சாரி, வெரி ஸாரி’-ன்னு சொல்றான்.

ஆனா பிக்கப் பண்ண வந்த பொண்ணு சாதாரணமா, ‘ஏன் வருத்தப் படறீங்க. 10 நிமிஷம்தானே தாமதமாச்சு.’ன்னு சொல்லிட்டு, அவங்க நாட்ல எவ்ளோ சீக்கிரம் அந்த டெட் பாடிகள சுத்தம் செஞ்சிட்டாங்க-ங்கற பெருமையா பேசறா. எப்டி 10 நிமிஷத்துல அந்த எடம் மறுபடியும் சுத்தமாயிடிச்சுங்கறத பத்தி பெருமையா பேசறா. இன்னேரம் கம்ப்யூட்டர்ல, அடிபட்டு உயிர்விட்டது யாரு, என்னன்னெல்லாம் கண்டுபிடிச்சிருப்பாங்க-ங்கற பெருமைய பேசறா!!

‘இந்த மாதிரியெல்லாம் எங்க நாட்ல கெடையாது’-ன்னு சொல்லிட்டு கதையோட ஹீரோ ஊர பாக்க வர்றான்.

இந்த கதைய படிச்சொன்ன எனக்குள்ள நெறைய எண்ண ஓட்டங்கள். சிலத சொல்றேன்.

ஒருமுறை, நியூயார்க்ல, என் நண்பர்கள் ரெண்டு மூணுபேர் சேர்ந்து, இந்தியாவுல இருந்து வந்த நண்பன் ஒருத்தன கூட்டிட்டு வர போனோம். அவன், நியூயார்க்ல ஒரே ஒரு இரவு மட்டும் இருந்துட்டு மறுநாள் வேற ஊருக்கு பறக்கறதா ப்ளான். அவனை கூட்டிகிட்டு நேரா நியூயார்க் சிட்டிக்குள்ள போனோம். கார் குள்ள உக்காந்துகிட்டு எல்லாத்தையும் ஆச்சரியமா பாத்துகிட்டே வந்தான் நண்பன். கார் நிக்கும்போது பக்கத்துல இரண்டறக் கலந்து நின்ன ஜோடிய அவன் கண்கொட்டாம பார்க்க, அவங்க கொஞ்சம் ப்பேணிக் ஆய்ட்டாங்க. ‘அப்டியெல்லாம் மொறைச்சு பாக்கக்கூடாது மக்கா!!’-ன்னு நாங்க அட்வைஸ் பண்ணி கிண்டல் பண்ணினோம்.

நெறைய விஷயங்கள், நம்ம ஊர்ல சாதாரணமா இருக்குற விஷயங்கள் அமெரிக்கால சாதாரணம் இல்ல. உதாரணமா, ரோட்ல யாராவது சின்ன குழந்தைகள பாத்தா, சிரிச்சு வெளையாட்டு காட்டலாம். தூக்கலாம். கொஞ்சலாம். அமெரிக்கால கொஞ்சினா எங்க ஹராஸ்மெண்ட் கேஸ் போட்றுவாங்களோன்னு ஒரு பயம். நம்ம ஊர்ல, நம்ம வீட்ட சுத்தியும் இருக்குற 10, 12 வயசு வாண்டுங்கல்லாம் நம்ம தோஸ்தா இருக்கும். நம்ம வீட்ல வந்து வெளையாடும். ‘இந்த அங்கிள் எனக்கு உம்மா கொடுத்தாங்க’-ன்னு அமெரிக்க குழந்தை அவங்க அப்பா கிட்ட சொல்லிச்சுன்னா நம்ம கதை கந்தலாயிடும்-ன்னு நண்பர்கள் பேசிட்டு இருக்கும்போது கிண்டலா சொல்லுவாங்க.

நம்ம ஊர்ல நண்பர்கள் ரெண்டுபேரு தோள் மேல கை போட்டுகிட்டு எங்க வேணும்னாலும் போகலாம். நட்போட ஆழம் அது. அமெரிக்கால அதுமாதிரி போனா, ‘வேற மாதிரி’யாம்!!

அதேமாதிரி அமெரிக்கால சாதாரணமா நடக்கற விஷயங்கள் இந்தியால பெரிய விஷயம். நியூ யார்க்-ல சப்வே ட்ரெயிண்கள்ல பெண்கள் ரெண்டுபேரு உம்மாக்கள் கொடுத்துக்கறதையெல்லாம் பாக்கலாம். நம்ம ஊர்ல, பொது எடத்துல ஒரு ஆண் ஒரு பொண்ணுக்கு கொடுத்தாலே பப்ளிக் நியூஸன்ஸ் கேஸ்தான். அது ரிக்சா மாமாவா இருந்தாலும் சரி, ரிச்சர்டு கியரா இருந்தாலும் சரி!!

அமெரிக்கால, ஸ்கூல்ல படிக்கற 14, 15, 16 வயசு பொண்ணுங்க, தங்களோட பாய் ஃப்ரெண்ட்ட கூட்டிகிட்டு நைட் 12 மணிக்கும் வெளில சுத்தறதையும், கிஸ்ஸிக்கறதையும் பாத்திருக்கேன். நம்ம ஊர்ல இன்னும் அதுமாதிரியெல்லாம் இல்ல.

இதெல்லாம் அமெரிக்கா ஐரோப்பா போயிட்டு வர்றவங்க சாதாரணமா சொல்ற விஷயங்கள்தான். ஆனா சுஜாதா ஒரு சுவையான சிறுகதையா சொல்லியிருக்காரு.

மீண்டும் சந்திப்போம்.