விடாது கருப்பு.

கருப்புப் பணத்த ஒழிக்கணும்-ன்னு அரசாங்கம் நெறைய முயற்சிகள் எடுத்துக்கறதா அப்பப்போ ஸ்டேட்மெண்ட் விடறாங்க. அப்பப்போ, அங்க ரெய்டு, இங்க ரெய்டு-ன்னு TV-ல படம் காட்டறாங்க. கோடிக்கணக்குல கருப்புப் பணத்த முடக்கினதா காட்றாங்க. நாமும் அந்த நிமிஷம் வாயப் பொளந்து பாக்கறோம். அவ்ளோதான் அப்புறம் மறந்துடறோம்.

பகல்ல பசுமாட்ட பிடிக்க முடியாதவன் இருட்டுல எருமை மாட்ட தேடினானாம்!!-னு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. கருப்புப் பணம் வெளிப்படையா எந்த ஒளிவு மறைவும் இல்லாம பொழங்கற எடத்தையெல்லாம் உட்டுட்டாங்க. அப்பப்போ ஸ்டேட்மெண்ட் மட்டும் உட்டு நம்ம கண்களை கட்டிடறாங்க. இதுல நம்மளோட பங்கும் நெறைய இருக்கு.

விளக்கமா சொல்றேன். நம்ம ஊர் நகைக் கடைக்கெல்லாம் போயிருப்பீங்க. எவ்ளோ கூட்டம். அலைமோதுது. விசேஷ தினங்கள் மட்டும் இல்ல. எல்லா நாளும் கூட்டம்தான். இவ்ளோ நாள் எங்க அப்பா, அம்மா கூட போவேன். அப்பாதான் பணம் கட்டுவாங்க. தங்கம் கிராம் என்ன விலை, வெள்ளி என்ன விலை, சேதாரம்-ன்னா எதையுமே நான் கண்டுக்கறது இல்ல.

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, என் மகளுக்கு ஒரு வளையல் வாங்கலாம்-ன்னு போனேன். 15 கிராம்-ல ஒரு ஜோடி வளையல தேர்ந்தெடுத்தேன். கணக்கெல்லாம் போட்டு ஒரு பேப்பர் கொடுத்தாரு. ஷாக் ஆயிட்டேன். 20% சேதாரம். அதுல இருந்து ஒரு பைசாகூட கொறைக்கல.

சரி எல்லோரும் இப்டிதான் வாங்கறாங்க போல இருக்கு-ன்னு பில்லு போடுங்க-ன்னு சொன்னேன். ‘கேஷா? கார்டா சார்??’-ன்னு கேட்டார். நான் பணம் எடுத்துட்டு போயிருந்தேன். ‘என்ன சார் வித்தியாசம்? கார்டு-ன்னா சர்விஸ் சார்ஜ் உண்டா?’-ன்னு கேட்டேன். ‘இல்ல சார், கார்டுக்கு சர்விஸ் சார்ஜ் எதுவும் கிடையாது.’ ‘ கார்டுன்னா பில்லு போடணும், கேஷ்னா தேவையில்ல’ அப்டீன்னாரு. பில்லு போட்டா வரி கட்டணும். இல்லன்னா தேவையில்ல.

‘கேஷ்தான் கொடுக்கறேன். ஆனா பில்லு போடுங்க. வரி கட்றேன்’-ன்னு சொன்னேன். ‘ஆமா, வரி எத்தன சதவீதம்?’-ன்னு கேட்டேன்.

You won’t believe it. 1 சதவீதம். ஒரே ஒரு சதவீதம். 20 சதவீதம் சேதாரம்-ன்னு சொன்ன உடனே, பொளக்கற வாடிக்கையாளர்களோட வாய அடைக்கறதுக்கு, இந்த ஒரு சதவீதத்த மூடியா பயன்படுத்தறாங்க. எனக்கு பில் போட்டு வர்ற அந்த 10 நிமிஷத்துல மூணு நாலு பேர் வளையல் வாங்கினாங்க. நோ பில்.

20 சதவீதம் சேதாரத்துக்கு கொடுக்கற அவங்களால ஒரே ஒரு சதவீதம் வரி கொடுக்க முடியல. Shame on us.

வரி கட்டாததுனால நம்ம ஒரு சதவீதம் மிச்சம் பண்ணிடறோம். ஆனா, அந்த நகைக் கடைகள் எவ்ளோ தங்கம் வாங்கறாங்க? எங்கேயிருந்து வாங்கறாங்க? எவ்ளோ விக்கறாங்க? இருவது இருவது சதவீதமா எவ்ளோ ரூபா சேதாரமா வாங்கினாங்க? எதையுமே அரசாங்கத்துக்கு காட்டாம மறைச்சுடறாங்க. அதுமட்டும் இல்ல, அவங்க எவ்ளோ லாபம் சம்பாதிச்சாங்க. அதுக்கு அவங்க எவ்ளோ வருமான வரி கட்டணும். எல்லாமே மாயம்தான்.

இதெல்லாம் இருட்டுல, யாருக்கும் தெரியாம, மறைவுல நடக்கற விஷயங்கள் இல்ல. அரசங்கத்துக்கும் தெரியாம இல்ல. ஏன் கண்டுக்கறதே இல்ல? ஒரு சதவீதம் வரி கட்டணும்-ங்கறத ஏன் கட்டாயமா ஆக்க முடியல? தங்க நகைகள் மாதிரி ஆடம்பரப் பொருட்களுக்கு ஏன் வரிய இன்னும் அதிகமாக்க முடியல. அரசாங்க கஜானாவுக்கு வரியா போகவேண்டிய பணம் யார் யார் பாக்கெட்டுகளுக்கு போயிட்டு இருக்கு?