நெல்லை மண்-டைட்டானியம்-அரசியல்-சனிபெயர்ச்சி.

வணக்கம். நல்ல இருக்கீங்களா. ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு உங்களையெல்லாம் சந்திச்சு. ஒரு மாசம் வேலை நிமித்தமா அமெரிக்கா போய்ட்டு வந்தேன். நெறைய விஷயங்கள் உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்-னு அப்பப்போ நெனைச்சாலும் சரியான நேரம் கெடைக்கல.

அமெரிக்கா போறதுக்கு முன்னாடி தமிழக அரசும் டாடா நிருவனமும் போட்டுகிட்ட ஒப்பந்தம் பத்தி படிச்சேன். நெல்லைல ஒரு தொழிற்சாலை 3000 பேருக்கு வேலை கொடுக்கற தொழிற்சாலை வருது-னெல்லாம் படிச்சு சந்தோஷப்பட்டேன். ஆனா அதுக்கப்புறம் அறிக்கைகள் மேல அறிக்கைகளா பறக்குது.

மொதல்ல டைட்டானியம்-ன்னா என்ன? அதுனால என்ன பயன்?? ஏன் இவ்ளோபேர் அதை எதிர்க்கறாங்க?? அந்த ஊர் மக்களுக்கு இதுனால என்ன பாதிப்பு? இந்த அரசியல்வா(ந்)திகளுக்கு என்னதான் பிரச்சனை?

டைட்டனியம் அப்டீன்னொன்ன எதோ அணுசக்தி உளைகள்ல பயன்படுத்தப்படற பொருளோ, அதுல இருந்து அணுக்கதிர்கள் வெளியாகுமோ, அதுனாலதான் எல்லோரும் எதிர்க்கறாங்களோ அப்யெல்லாம் நெனைச்சேன். ஆனா இதுல எதுவுமே இல்ல. டைட்டானியம்-ங்கறது ஸ்டீலைப்போல ஸ்ட்ராங்கான, ஆனா ஸ்டீலோல எடைல பாதி இருக்குற ஒரு உலோகம். 1649 டிகிரி செல்ஷியஸ் மெல்டிங் பாயிண்ட். துறு பிடிக்காது. கடல் தண்ணிர் கூட அரிக்காது.

விமானங்கள் தயாரிக்க, ஏவுகணைகள் தயாரிக்க, ஜெட் இஞ்சின்கள் தயாரிக்க, கப்பல்கள்ல-ன்னு இன்னும் நெறைய உபயோகமான பொருட்கள் தயாரிக்கப் பயன்படுது. விவசாயத்துறைலயும், மருத்துவத்துறைலயும் கூட நெறைய பயன்படுது. ஊனமுற்றவர்களுக்காக தயாரிக்கப் படற பொருட்கள், எடை கம்மியாவும் அதே சமயம் ஸ்ட்ராங்காகவும் இருக்கணும்-ங்கறதுக்காக டைட்டானியத்துல தயாரிக்கப்படுது-ன்னு கூட படிச்சிருக்கேன். கடல் நீரை குடிநீரா ஆக்கற தொழிற்சாலைகள்லயும் பயன்படுது. (கடல் தண்ணீரால எந்த பாதிப்பும் ஏற்படாதே!!)

நெல்லை மண்ல இருந்து இத பிரிச்சு எடுக்கறதுனால எதாவது ஆபத்தா-ன்னா இல்லை. அந்த பகுதி மக்களுக்கு வேற எதாவது பாதிப்பா-ன்னு என்னோட நெல்லை நண்பன் ஜெர்ரி-ய கேட்டேன். நாஸரேத் பகுதிய சேர்ந்த அந்த நண்பன் சொன்னது.

“அந்த நிலங்கள் விவசாய நிலங்கள்லாம் இல்ல. அங்க மழையே வருஷத்துக்கு ரெண்டு மூனு நாள் பொழிஞ்சா பெருசு. டைட்டனியம் இருக்குன்னு தெரிஞ்ச ஒடனே அங்க இருக்குற சின்னச் சின்ன ஆளுங்கல்லாம் கோடீஸ்வரனா ஆயிட்டான். ஏற்கனவே அங்க டைட்டானியம் எடுத்துகிட்டுதான் இருக்காங்க. அதுல வருமானத்துல அரசியல்வாதிகளுக்கும் பங்கு இருக்கும். அவங்கல்லாம் இப்போ டாடா வந்தா நஷ்டமடைஞ்சுடுவாங்க-ன்னுதான் கொதிக்கறாங்களே தவிர, இதுனால பாதிப்பெல்லாம் ஒன்னும் இல்ல. இன்னும் சொல்லப்போனா அந்த ஏரியால பெரிய தொழிற்சாலைகள் ஒன்னுமே இல்ல. அந்த ஏரியால இருந்து படிச்சு வந்த இஞ்சினியர்கள்லாம் வெளியூர்கள்லதான் வேலைக்கு போறாங்க. இப்டி ஒரு தொழிற்சாலைவந்தா அவங்களுக்கெல்லாம் நல்ல பயனாதான் இருக்கும்.”

அரசியல் லாபத்துக்காக ஒவ்வொருத்தரும் என்னமா நாடகம் ஆடறாங்க. எத்தனை எத்தனை எதிர்ப்புகள். நம்ம சாதிக்காரங்களுக்கெல்லாம் பாதிப்பு-ன்னு ஒரு தலைவர் சூடேத்தறாரு. எப்பாடுபட்டாவது தடுப்பேன்னு அம்மா அறிக்கை விடறாங்க. ‘இப்டியெல்லாம் எதிர்த்தா இந்தத் திட்டத்தை கைவிடவும் தயார்’-ன்னு ஒரு முதல்வர் அறிக்கை விடறாரு. இப்போ சமாளிச்சு ‘மக்கள் கருத்தை கேட்ட பிறகு முடிவெடுக்கப்படும்’-ன்னு சொல்றாரு. என்ன ஆளுங்களோ, தலைமையோ.

“தன்னலம் இல்லாத தலைவர்கள் இப்போ இல்லை”-ன்னு அப்துல் கலாம் அவர்கள் சொன்னது எவ்ளோ உண்மை-ன்னுதான் தோனுது.

ஓட்டு கேட்க மட்டும் வீடு வீடா போறவங்க கறுத்து கேட்கவும் போகணும்ல. இந்தத் திட்டத்தோட பயன்களை எடுத்து சொல்லலாமே? எத்தனையோ கோடி கோடியா சம்பாதிக்கப்போற டாடாவ, அவங்களுக்காக வாங்கப்போற இடங்களுக்கு நல்ல விலை கொடுக்க சொல்லலாமே? இந்தத் திட்டத்தால தங்களுக்கு எதாவது நஷ்டம் வரும்-னு நெனைக்கற பொதுமக்களுக்கு நஷ்டம் வராம பாத்துக்கங்க.

எது எதுக்கோ கருத்துக் கணிப்புகள் எடுக்கும் பத்திரிக்கைகளும், கல்லூரி மாணவர்களும், தொலைக்காட்சி சேனல்களும் இப்போ எங்க போயிட்டாங்க-ன்னு தெரியல. தலைவர்கள் விடற அறிக்கைகள் பிரசுரிக்கறதுலயே பிஸியா இருக்காங்க போலருக்கு.

இந்த வாரம் சனிபெயர்ச்சியாம். எத்தனையோ பேரை பிடிச்சிருக்கற ஏழரை நாட்டு சனி விடப்போகுதாம். தமிழ்நாட்ட பிடிச்ச சனி எப்போ விடுமோ தெரியல!!