உயிர் – வாடகைக்கு.

அமெரிக்கால கார் வாடகைக்கு எடுத்தா கார நமக்கே தந்துடுவாங்க. நாமளே ஓட்டிட்டு போகலாம். நம்ம ஊர்ல ஒரு டிரைவரையும் போட்டு கொடுத்துடுவாங்க. அவருக்கு ஒரு நாளைக்கு 100 ரூபால இருந்து 200 ரூபா வரைக்கும் கொடுக்கறாங்க. சாப்பாடு செலவு தனி.

அப்டி கூட்டிட்டு போயி திரும்ப வர்ற வரைக்கும் அந்த டிரைவர அல்மோஸ்ட் அடிமைகள் மாதிரிதான் சிலபேர் நடத்தறாங்க. எதாவது ஒரு பெரிய ஹோட்டல்ல சாப்பிட நிறுத்துவாங்க. டிரைவர்ட்ட ஒரு 20 ரூபா கொடுத்து ‘நீ வேற எங்கேயாவது பக்கத்துல இருக்குற ஹோட்டல்ல போயி சாப்டுட்டு வந்துடுப்பா’-ன்னு சொல்லிடுவாங்க. எங்கேயாவது ஒரு நல்ல ஹோட்டல்ல ரூம் போட்டு தங்குவாங்க. டிரைவரப் பத்தி கண்டுக்கவே மாட்டாங்க. அவரு கார்லயே ஒரு கொசுவர்த்திச் சுருள ஏத்திவெச்சுட்டு கதவையெல்லாம் திறந்து வெச்சுட்டு தூங்க வேண்டியதுதான். காலைல எழுந்து எங்கேயாவது ஓரமா காலைக்கடன்களை முடிச்சுட்டு, வெச்சிருக்குற பாட்டில தண்ணீல பல் தேய்ச்சுட்டு தயாராயிட வேண்டியதுதான்.

இதுல கிராமத்துல இருந்து வாடகை கார் எடுக்கறவங்க கொஞ்சம் பரவாயில்ல. வீட்ல இருந்து களம்பும்போது எடுத்துட்டுபோற சாப்பாட்டுலயே அவருக்கும் கொடுப்பாங்க. அவரோட தேவைகளுக்காக கார நிறுத்தினாலும் ஒன்னும் சொல்லமாட்டாங்க. சென்னை மாதிரி நகரத்துல இருந்து களம்பறவங்க அப்டி இல்லைன்னுதான் கேள்விப்படறேன்.

இப்டிதான் சென்னைல இருந்து கிளம்பின ஒரு குடும்பம் காலைல கிளம்பி மதுரை கன்னியாக்குமரி எல்லாம் போயிருக்காங்க. நைட் அங்கேயிருந்து களம்பி வேற ஒரு ஊருக்கு போயிருக்காங்க. நாள் முழுக்க வண்டி ஓட்டிட்டு நைட்டும் முழுக்க வண்டி ஓட்டியிருக்காரு டிரைவரு. மறுநாளும் சுத்திப் பாத்திருக்காங்க. அவங்க சுத்திப்பாத்த கொஞ்ச கொஞ்ச நேரத்துலதான் டிரைவருக்கு ரெஸ்ட். எல்லாம் சுத்திப் பாத்துட்டு இரவு மீண்டும் கார எடுக்க சொல்லி சென்னைக்கு ஓட்ட சொல்லியிருக்காங்க. அவங்க எல்லோரும் கார்ல உக்காந்து தூங்கிக்கறாங்க. டிரைவரைப் பத்தி யார் யோசிச்சா? விடிய விடிய கார் ஓட்டினவரு காலைல 4 மணிக்கு கண் அசந்துட்டாரு. வண்டி சாலைல இருந்து ஒதுங்கி மரத்துல மோதி நிறைய உயிர்கள் பலி.

தினம் தினமும் இதுமாதிரி எத்தனை விபத்துகள். தொலைக்காட்சில பார்க்கும்போதும் பேப்பர்ல படிக்கும்போதும், தாங்க முடியல. அந்த வருத்தந்த, மனசுல ஏற்படற அதிர்வுகள, எப்படி வார்த்தைகளா எழுதறதுன்னு தெரியல.

“ரெண்டு நாள் முழுக்க கோயில் கோயிலா போயி எல்லா சாமியையும் கும்பிட்டுட்டு வந்தாங்க. ஆனாலும் அநியாயமா போயிட்டாங்க”-ன்னா? சாமியா காரை ஓட்டுது. டிரைவரும் ஒரு மனுஷன்ங்கறத யோசிக்கணுமா வேண்டாமா? நாள் முழுக்க ஓட்டினாலும் கார் ஓடுதுங்கறதுக்காக டிரைவரையும் ஓட்ட முடியுமா? அவரும் மெஷின் இல்லயே!!

நைட் சவாரிக்கு எங்க அப்பா யாரையாவது கூப்டா, ‘என்னப்பா காலைல இருந்து எங்கல்லாம் சவாரி போன? நேத்து முந்தாநாள் நைட் சவாரி எங்கேயாவது போனியா?’ அப்டியெல்லாம் கேட்பாங்க. என்னையாவது, என் தம்பியையாவது தூங்காம டிரைவர் கிட்ட பேசிட்டே வரச்சொல்லுவாங்க. ஒருதடவை சென்னைல இருந்து எங்க கிராமத்துக்கு போனப்போ, வழில நிறுத்தி டிரைவர் ரெண்டு மணிநேரம் தூங்கிட்டு, அப்புறம் புறப்பட்டு போயிருக்கோம்.

வாடகைக்கு காரை எடுக்கும்போது, காரை மட்டும் எடுக்கல காரோட சேர்த்து ஒரு உயிரையும் வாடகைக்கு எடுத்துக்கறோம்-ங்கற பொறுப்போட நடந்துக்க வேண்டாமா?