கண்ணி-சாமி.

போன வாரம் சில நல்ல விஷயங்களோடயும் சில சோகமான விஷயங்களோடயும் ஓடிச்சு.

ரொம்ப நாளா சந்திக்கணும்-னு நெனைச்சுகிட்டு இருந்த நண்பன் ஒருத்தனை சென்ற வாரம் சந்திச்சேன். கல்லூரி-ல கூட படிச்ச நண்பன். பலப் பல கதைகள சில மணி நேரம் பேசிட்டு இருந்தோம்.

அவனைப் பார்க்க திண்டுக்கல் போனேன். என்னோட கிராமத்துல இருந்து தஞ்சாவூர் திருச்சி வழியா திண்டுக்கல் போனேன். காலைல 3 மணிக்கே எழுந்து தயாராகி கார்ல கிளம்பினேன். ஒரு நாலரை மணிக்கு தஞ்சாவூர தாண்டி திருச்சி ரோட்ல போயிட்டு இருந்தேன்.

அந்த இளம் காலைல எதிர் திசைல தஞ்சாவூரை நோக்கி நெறைய மக்கள் சாரை சாரையா நடந்து வந்துகிட்டு இருந்தாங்க. காவி உடை பச்சை உடைகள்ல இருந்தாங்க. கழுத்துல மாலை போட்டிருந்தாங்க. பெண்களும் பச்சைப் புடவை உடுத்தியிருந்தாங்க. சிலர் சின்ன கைக்குழந்தைகள தூக்கிகிட்டு நடந்தாங்க. அவங்க எந்த கோவிலுக்குப் போறாங்க-ன்னு எனக்கு சந்தேகம். நிச்சயமா சபரிமலைக்கு இல்ல. தஞ்சாவூர் பக்கத்துல ஏதும் முருகன் கோவிலும் இல்ல. தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்கோ-ன்னு ஒரு சந்தேகம்.

காரை ஒரு ஓரமா நிறுத்திட்டு எதிர் திசைல போயி அவங்ககிட்டயே கேட்டேன்.

“வணக்கம் சாமி!! சாமியெல்லாம் எந்த ஊருக்கு போகுது?”

“வேலாங்கண்ணி-க்கு சாமி!!”

எனக்கு ஒரு சின்ன ஷாக். அப்போதான் கொஞ்சம் கூர்ந்து கவனிச்சேன். அவங்க போட்டிருந்த மாலைகள்ல சிலுவை தொஞ்குச்சு. வேலாங்கண்ணி மாதா கோவிலுக்கு நெறைய மக்கள் போவாங்கன்னும், திருவிழா நடக்கும்-ன்னும் தெரியும். ஆனா மாலையெல்லாம் போட்டுகிட்டு போவாங்க-ன்னு தெரியாது!!

“எந்த ஊர்ல இருந்து வர்றீங்க சாமி?”

“திண்டுக்கல்ல இருந்து சாமி!”

“விரதம் எல்லாம் இருப்பீங்களா? இருமுடி மாதிரி எதுவும்?”

கேள்விய முடிக்கறதுக்கு முன்னாடியே “இருமுடியெல்லாம் சபரிமலைக்குதான் சாமி! நாங்க மாலை போட்டுகிட்டு விரதம் இருப்போம். 15 இல்ல 20 நாட்கள். அப்புறம் வீட்ல சாமி கும்புட்டுட்டு, அம்மா அப்பா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிகிட்டு களம்புவோம்!!”

“எப்போ களம்பினீங்க சாமீ?”

“நாங்க களம்பு 6 நாள் ஆகுது சாமி, இன்னும் ரெண்டு நாள்ல வேலாங்கண்ணிக்கு போயிடுவோம்”

“எப்போ திருவிழா?”

“திருவிழா-க்கு இன்னும் நாள் இருக்கு சாமீ!! நாங்க கொடியேத்தத்துக்கு போறோம்!! செலபேரு திருவிழாக்கு மாலை போட்டுப்பாங்க. நாங்க கொடியேத்தத்துக்கு போட்டிருக்கோம்!!”

“எத்தனை வருஷமா இப்டி நடந்தே வேலாங்கண்ணிக்கு போறீங்க?”

“இதுதான் சாமி மொதல் வருஷம்.”

நாங்க பேசிகிட்டு இருந்த அந்த கொஞ்ச நேரத்துலயே அந்த குழுல இருந்தெ வேற சில சாமிக்கள் ஒரு தைல பாட்டில எடுத்து அதுல இருந்த தைலத்த கால்கள்ல போட்டுகிட்டாங்க.

“வெய்யில் வர்றதுக்குள்ள தஞ்சாவூர தாண்டிடணும் சாமி!! நாங்க களம்பறோம்!!”-ன்னு சொல்லிட்டு களம்பிட்டாங்க.

இதே மாதிரி பல ஊர்கள்ல இருந்து பழநி முருகனை தரிசிக்க நடந்து போறதை பாத்திருக்கேன். மேல்மருவத்தூர் அடிகள தரிசிக்க அங்கப் பிரதக்ஷனமாகவும்(ரோட்ல படுத்து உருண்டுகிட்டே போறது) போறதை பாத்திருக்கேன்.

நாம ஒரு ரெண்டு மூணு நாள் எங்கேயாவது ட்ரிப் போகணும்-ன்னா தங்கறதுக்கு ஹோட்டல், சாப்பாடு, போய் வர்றதுக்கான பஸ், ரயில் இல்ல விமான டிக்கெட்டுகள், பல செட்டு உடைகள், இட்லி புளியோதரை-ன்னு எவ்ளோ தயார் பண்றோம்.

ஆனா இவங்க ஒரே ஒரு மாற்றுத் துணிய மட்டும் எடுத்துகிட்டு, சாப்பாடு, தூங்கறதுக்கான இடம், குளிக்க இடம் இப்டி எதைப்பத்தியுமே கவலைப்படாம நடக்க ஆரம்பிச்சுடறாங்க.

திண்டுக்கல்ல இருந்து திரும்பி வரும்போது நல்லா இருட்டிடுச்சு. நல்ல மழை வேற கொட்டுது. கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் ஒதுங்கறதுக்கு ஒரு இடம் இல்லாத பொட்டல் காட்டுப் பகுதில ஒரு காவி உடைப் பெரியவர் தனியா, தலைல ஒரு பாலித்தீன் கவர மாட்டிக்கிட்டு, கைல ஒரு தடிய ஊணிக்கிட்டு நடந்து போயிட்டு இருந்தாரு.

கார் கண்ணாடிய இறக்கிவிட்டு, “சாமி!! ரொம்ப மழையா இருக்கு, கார்ல ஏறிக்கிறீங்களா, பக்கத்து கிராமத்துல எறக்கிவிடறேன்”-ன்னு கேட்டேன்.

“வேண்டாம் சாமி!! நீங்க போங்க! இந்த மழை நம்மள ஒன்னும் செய்யாது, நான் நடந்தே வந்துடறேன்!!”-னு சொல்லி மறுத்துட்டாரு அந்த வேலாங்கண்ணி சாமி.