சின்ன கல்லு.. பெத்த லாபம்!!

அமெரிக்கால இருக்கறவங்களுக்கு காஸ்ட்கோ அல்லது BJ’s பத்தி தெரியாம இருக்க வாய்ப்பில்ல. வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள்ல கூட்டம் நிறம்பி வழியற மொத்த விற்பனைக் கடைகள். பாத்ரூம் டிஷ்யூ வேணுமா? இந்தாங்க 48 ரோல்கள். எண்ணை வேணுமா? இதோ.. 5 கேலன் டின்கள். டூத் ப்ரஷ் வேணுமா, 10 ப்ரஷ் பேக். சோப் வேணுமா, ஒரு டஸன். ஷாம்பூ வேணுமா ரெண்டு லிட்டர் டப்பா. அவ்ளோ ஏன், ஜட்டி வேணுமா சிக்ஸ் பேக்!! இப்டி எல்லாத்தையுமே மொத்தமா வாங்கி வீட்டை நிறப்பி வெச்சுக்க சொல்லும் கடைகள்.

அமெரிக்கால இருக்கற வரைக்கும் நாங்களும் எல்லாமே இப்டி வாங்கி பழகிட்டோம். வீட்டு பேஸ்மெண்ட்ல இந்தப் பொருட்களுக்காகவே ஒரு சின்ன ஸ்டோர் ரூம் இருக்கும். எதையுமே சின்னதா வாங்கறதே இல்ல. ஒரே ஒரு டூத் ப்ரஷ் வேணும்னாலும் பத்து வாங்கி வெச்சுக்கணும். இதுல கடைக்கு போனப்புறம் யோசிச்சு பாத்தா, வீட்ல சோப்பு இருக்கா-ன்னு தெரியாது. 12 சோப் வாங்கிட்டு வந்து வீட்ல பாத்தா, அடடா போன தடவை வாங்கின 12-ல 4 தான் பயன்படுத்தியிருக்கோம். மீதி அப்டியே இருக்கு-ன்னு தெரியவரும். சரி இதை திரும்ப கொடுத்துடலாம்-ன்னு தோனும். ஆனா அடுத்த தடவை கடைக்கு போகும்போது ஞாபகம் வரணும்-ல!! வராது. அப்டி ஞாபகம் வெச்சுக்கணும்-னா அதுக்கும் இந்தக் கடைகள்ல மெமரி பில்ஸ் கிடைக்கும். ஞாபக சத்தி அதிகப் படுத்தும் 500 மாத்திரைகள் உள்ள டப்பா, விலை 29.95 மட்டுமே!! வாங்கி ரெண்டு நாள் போட்டதுக்கப்புறம் அந்த மாத்திரை டப்பாவை எங்கே வெச்சோம்-ன்னு மறந்து போய்டும்.

சரி அமெரிக்க விற்பனை முறை இப்டி இருக்கு. நம்ம ஊர்ல எப்டி-ன்னு பாத்தா அப்டியே தலைகீழ். எல்லாமே சின்னச் சின்ன ஷாஷேக்கள்ல கிடைக்குது. அமெரிக்கா போறதுக்கு முன்னாடி ஊர்ல இருக்குற பொட்டிக் கடைக்கு போனா ஷாம்பூ மாதிரி சில ஐட்டங்கள் ஷாஷே-ல கெடைக்கும். “செட்டியாரே, ச்சிக் ஷாம்பூ ஒரு பாக்கெட் குடுங்க”-ன்னு கேட்டா ஒன்னு பிச்சு தருவாரு. அப்புறம் A.R.R, நிஜாம் பாக்குகள்லாம் சின்னச் சின்ன பாக்கெட்டுகள்ல கிடைக்கும். செட்டியார் வீட்டுக்கு பக்கத்துல இருக்குறவங்க வீட்ல போட்ட ஊருகாய சின்னச் சின்ன பாலித்தீன் பாக்கெட்ல போட்டு ஒரு அட்டைல ஸ்டாப்ளர் பண்ணி கடைல வெச்சிருப்பாரு.

இப்போ கடைக்கு போனா ஷாஷேக்கள்ல கிடைக்காத ஐட்டங்களே இல்லை-ன்னு சொல்ற அளவுக்கு அவ்ளோ ஷாஷே-க்கள். கடையோட முன்புறம் அவ்ளோ தொங்குது. அதையெல்லாம் கொஞ்சம் விளக்கிவிட்டாத்தான் செட்டியார் முகமே தெரியும். ஏரியல்/சர்ஃப் எக்ஸெல் வாஷிங் பவுடர் 5, 2 மற்றும் 1 ரூபா பாக்கெட். ப்ரூ இன்ஸ்டண்ட் 5, 2, 1 ரூபா பாக்கெட். சின்னி ஊருகாய் 50 பைசா, 1 ரூபா பாக்கெட். லேஸ் சிப்ஸ்/குர்க்குரே 10, 5 ரூபா பாக்கெட்.

கொஞ்சம் ஆச்சரியமா இருந்ததுல ஒன்னு ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ், க்ளீனிக் ப்ளஸ் மாதிரி ஷாப்புகள். காஸ்ட்கோல ரெண்டு லிட்டர் மூனு லிட்டரா வாங்கின ஷாம்பூ, 2 ரூபா, 1 ரூபா பாக்கெட்டுகள் கெடைக்குது. 2 ரூபா, 1 ரூபா பாக்கெட்டுகள் ஆச்சர்யம் இல்லை, 50 பைசா பாக்கெட்லகூட கெடைக்குது. இந்த 50 பைசா பாக்கெட்டுகள விக்க எத்தனையோ லட்சங்கள் கொடுத்து தொலைக்காட்சி விளம்பரங்கள் போடறாங்க.

அவ்ளோ போட்டிகள் நிறைஞ்ச மார்க்கெட்டா இருக்கு நம்ம மார்க்கெட். மக்களை என்னேன்னல்லாம் சொல்லிக் கவரலாம், எப்டியெல்லாம் அவங்க பொருட்கள விக்கலாம்-ங்கறதுல அவ்ளோ போட்டி.

இதுல விசேஷமான இன்னும் சிலதுகளும் இருக்கு. பான் பராக் மாதிரி ‘கிக்’ கொடுக்கற பாக்கெட்டுகள் முன்னாடியெல்லாம் இருந்துது. சிலபேர் புகையிலை வாங்கி, அதை உள்ளங்கைல வெச்சு நசுக்கி, நல்லா தேய்ச்சு, சின்ன உருண்டையா ஆக்கி அதை வாயில அடைச்சுப்பாங்க. இப்போ அதுக்கும் ஒரு ஷாஷே இருக்கு. ஹன்ஸ்-ன்னு பேரு. கைல வெச்சு தேய்ச்சு உருண்டையா ஆக்கின சைஸ்ல இருக்கு. இன்ஸ்ட்டண்ட் டீ பாக்கெட் மாதிரி மினி சைஸ்ல இருக்கு. வாங்கி அப்டியே வாயில அடக்கிக்கறாங்க.

வினாயகர் சதுர்த்திக்கு வீட்ல வினாயகர் வாங்கி வெச்சு அபிஷேகம் செய்யணும்-ன்னு அபிஷேக சாமான்கள் வாங்கப் போனேன். நல்லெண்ணைய், சந்தனம், விபூதி, குங்குமம்-ன்னு அநேகமான சாமான்கள் ஷாஷேக்கள்தான். இன்னும் பிள்ளையார் மட்டும்தான் ஷாஷேக்குள்ள போகலை!!