கல்கி – The Bad Dude!!

அமரர் கல்கியைத்தான் சொல்றேன். குடிப்பழக்கம், புகைப் பழக்கங்களுக்கு அடிக்ட் ஆகியிருக்கறவங்களைப் பாத்திருப்பீங்க. புத்தகம் படிக்கறதுக்கு அடிக்ஷனா ஆக முடியுமா? அப்டித்தான் ஆகியிருக்கேன். ஆக்கினவரு கல்கி. அடிக்ட் ஆகி படிச்சுகிட்டு இருக்கற புத்தகம் ‘பொன்னியின் செல்வன்’.

வரலாறு-ன்னாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. முன்னாடியே சொல்லியும் இருக்கேன். அசோகர் ரோடு போட்டார். அக்பர் மரம் நட்டார்-னெல்லாம் சொன்னா, ‘OK. What should I do for that!!??” அப்டீங்கற மாதிரிதான் தோனும். 1637-ம் வருஷம் அது நடந்துச்சு, 1513-ம் வருஷம் இது நடந்துச்சு-ன்னெலாம் எத்தனை தடவை படிச்சாலும் மனசுல நிக்காது. வரலாற்றுப் பாடத்துல ஜஸ்ட் பாஸ் பண்ணியே சமாளிச்சுட்டு வந்துட்டேன்.

அதுனால வரலாற்று நாவல் படிச்சா புரியுமா? அதுல வர்ற பாத்திரங்களோட பெயர்களாவது மனசுல நிக்குமா? பாத்தா 5 அத்தியாயமா தனித்தனிப் புத்தகங்களா இருக்கு. 5 புத்தகங்களும் 500, 600 பக்கங்கள் இருக்கு. அவ்ளோத்தையும் படிக்க முடியுமா? மூன்றாவது புத்தகம் படிக்கும்போது முதல் புத்தகத்துல படிச்சதெல்லாம் ஞாபகம் இருக்குமா?? இப்டியெல்லாம் யோசிச்சுகிட்டே நெறைய தடவை இந்தப் புத்தகங்களை வாங்காம விட்டுட்டேன்.

‘படிக்க ஆரம்பிச்சா புத்தகத்தை கீழ வைக்கவே மனசு வராது. நைட்டு நாலு மணி அஞ்சு மணி வரைக்கும்லாம் படிச்சிருக்கேன்’-ன்னு ஒருத்தர் சொன்னாரு. ‘இதைப் படிச்சதுனால பள்ளிக்கூட நாட்கள்ல பாடபுத்தகம் படிக்காம மதிப்பெண்கள் வாங்க முடியாமப் போச்சு’-ன்னு ஒரு நண்பன் சொன்னான். பக்கத்து சீட்ல வந்து உக்காந்து, விமானம் கெளம்பறதுக்கு முன்னாடி, சீட் பெல்ட்கூடபோடாம புத்தகத்தை எடுத்து ஒருத்தர் படிக்க ஆரம்பிச்சாரு. ‘என்ன புத்தகம் சார், இவ்ளோ ஈகரா படிக்கறீங்க??’-ன்னு கேட்டதுக்கு, ‘பொன்னியின் செல்வன்-சார்’-ன்னு சொல்லிட்டு புத்தகத்துல மூழ்கிட்டாரு.

“ஏ! என்னப்பா இவ்ளோ பில்டப் கொடுக்கறீங்க!!’-னு நெனைச்சு புத்தகத்தை வாங்கிட்டு வந்தேன். ‘நான் விடாம படிக்கற ஆள் இல்ல. எப்பவாது தோனினா படிப்பேன். இல்லன்னா புத்தகத்தை தொடக்கூட மாட்டேன்’-ன்னு எனக்கு நானே சொல்லிகிட்டு படிக்க ஆரம்பிச்சேன். ஆனா பல இரவுகள், பல வீக்கெண்டுகள் காலி. ‘எனக்கு உடம்பு சரியில்லை ஆனா ஒரு கால் பண்ணி எப்டியிருக்க-ன்னுகூட உன்னால கேட்க முடியல. அப்டி என்னதான் வேல உனக்கு?‘-ன்னு தங்கைகிட்ட இருந்து திட்டு. ‘என்னங்க அஞ்சு நிமிஷம் கொழந்தைய பாத்துக்க முடியாதா?? பாருங்க இங்க!!‘-ன்னு என் மனைவிகிட்ட திட்டு. ‘கண்மைய எடுத்து முகம்பூரா அப்பிகிட்டு ‘எப்டி நம்ம திறமை??’-ங்கற மாதிரி பாக்கற என்னோட மகள். இப்டி பலவித அவஸ்தைகள்ல என்னை மாட்ட வெச்சுட்டாரு கல்கி.Makeup

நாவல்ல வர்ற பாத்திரங்கள், அதுக்கு அடுத்த கட்டத்துக்கு போகாம அங்கேயே நமக்காக காத்துகிட்டு இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங். அந்தப் பாத்திரங்களே வந்து பேசறமாதிரி கனவுகள். ‘நாட்ல இப்டியெல்லாம் இருந்திருக்கா’-ன்னு பிரமிப்பு. வரலாற்றையும் இவ்ளோ சுவையா சொல்ல முடியுமா மலைப்பு. கதை நடக்கற கலம் எங்க ஊருக்குப் பக்கத்துலதான். ‘ஊரைச்சுத்தி இவ்ளோ நடந்திருக்கா?’ ‘அட இந்த ஊருக்கு இதுனாலதான் இந்தப் பெயரா!!‘-ன்னெலாம் எண்ணங்கள். எப்டி நெறைய உணர்வுகள். கதையோட கடைசி 200 பக்கங்களுக்கு வந்துட்டேன். படிச்சு முடிச்சுட்டு இன்னும் சொல்றேன்.