You be the Jury..

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, நான் மகளைக் கூட்டிகிட்டு காவேரில குளிக்கப் போனேன். நாங்க குளிக்கும்போதே எங்க ஊர் கோவில் யானையும் குளிச்சுது. ‘காவேரித் தண்ணீரைக் கலக்கும் யானை’-ன்னு ரைம்ஸ் சொல்லிக்கொடுத்துட்டு பாட்டோட நிறுத்திடாம காவேரிலயும் வந்து குளிக்கறோம், அதுவும் யானை குளிக்கறதை வேடிக்கை காட்டிகிட்டே குளிக்கறோம்-ன்னு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. தண்ணீரோட சேர்ந்து யானையையும் பார்த்துட்டா குழந்தைகளோட குதூகலத்துக்கு சொல்லவா வேணும். அவ்ளோ சந்தோஷமா குளிச்சா என் மகள். வெளில வரவே மனசில்லாதவளை கட்டாயமா கூட்டிகிட்டு வந்தேன். அந்த நாள் முழுக்க இருந்த மகிழ்ச்சியை அன்னிக்கு இரவு செய்திகள் கலைச்சுடுச்சு. கேரளால இருந்து ரசாயணக்கழிவுகளை கொண்டு வந்து காவேரில கலந்துட்டாங்க-கற செய்தியைச் சொல்லி. சென்னைல இருக்கற ஆறுகளையே சுத்தம் செஞ்சு அதுல படகுப் போக்குவரத்து விட்டா சென்னைல ட்ராஃபிக் கொறையுமே-ன்னு கனவு காண்றவனுக்கு இப்டி ஒரு செய்தி எப்டி இருக்கும்!!

ஆறுகளோட ஓரமா இருக்கறவங்க கழிவுகளை கொண்டு வந்து ஆறுகள்ல விடறதே தப்பு. இவங்க ஸ்டேட் விட்டு ஸ்டேட், அதுவும் ரசாயனக் கழிவுகளை கொண்டுவந்து விடறாங்க(பார்டர் போலீஸ் என்ன பண்ணாங்க?). எவ்ளோ கொடுமையான விஷயம் இது. ஆறுகள்ல தண்ணீர் ஓடறதே பெருங்கஷ்டமா இருக்கு.. இதுல இந்த விஷங்கள வேற கலந்து விட்டா என்னாறது!! ஆறுகள்ல ஓடறது தண்ணீர் இல்ல ஒரு நாட்டோட இரத்தம்-ன்னு தெரிய வேண்டாம். எத்தனைக் குடும்பங்கள், கிராமங்கள், ஊர்கள், இன்னும் சொல்லப்போனா நம்ம நாடே இதை நம்பி இல்லையா?? இந்தக் கொடுமைய பண்ணின லாரி டிரைவரை புடிச்சி வெச்சிருக்காங்க. அந்தக் கம்பெனிகளைப் பத்தி செய்திகள் இல்லை. எத்தனையோ குடும்பங்களோட வாழ்க்கைல பாதிப்புகளை ஏற்படுத்தற இவங்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கலாம்? இதுமாதிரி தவறுகளை மத்தவங்களும் பண்ணாம இருக்க நீங்க குடுக்கற தண்டனை ஒரு பாடமா இருக்கணும். அதுமாதிரி ஒரு தண்டனை கொடுக்கணும்-ன்னா என்ன தண்டனை கொடுப்பீங்க??