அரசு இயந்திரம்.

சென்னைல ஐடி காரிடார் வேலைகள் படு வேகமா நடந்துகிட்டு இருக்கு. பழைய மகாபலிபுரம் சாலையோட புதிய பொலிவு இப்பொவே தெரிய ஆரம்பிக்குது. ஐடில வேலை பாக்கறவங்கள்லாம் ரொம்ப சந்தோஷமா வேகமா கார்களை ஓட்டிட்டு போகணும்-ங்கறதுக்காக சாலைகள் இழைக்கப்படுகின்றன-ன்னுதான் சொல்லணும். அவ்ளோ தரமான சாலைகள். 70 80 கிலோ மீட்டர் வேகத்துல போனாலும் அதிர்வே இல்லாம இருக்கணும்-னு கவனமா பாத்துக்கறாங்க.

ஐடில நிறுவனங்கள்ல வேலை பாக்கறவங்கதான் முக்கியம்-னாலும், அந்த ஏரியா மக்கள் எல்லோரையும் அந்த ஏரியாவை விட்டு காலிபண்ணிட்டு போக சொல்லிட வேண்டியதுதானா? அமெரிக்கால, மக்கள் நடந்தோ, இல்ல சைக்கிள் ஓட்டிகிட்டோ போக தடை விதிக்கப்பட்ட ‘ட்டோல்’ ரோடுகள் இருக்கு. அதுமாதிரிச் சாலைகள்ல, லாரிகள், பஸ்கள், கார்கள் மற்றும் அது வேக பைக்குகள் மட்டும்தான் போகமுடியும். இந்த ஐடி சாலைகளும் அதுமாதிரி ஆகவேண்டியதுதானா? மக்கள் நடக்க தடை விதிக்க வேண்டியதுதானா?

ஏன் கேக்கறேன்னா? இந்தச் சாலைகளுக்கு நடுல, இரண்டு பக்கமும் போற வாகனங்களைப் பிரிக்கறதுக்காக போட்டிருக்கற டிவைடர்கள்ல இடைவெளியே இல்லை. பல கிலோ மீட்டர் நீளத்துக்கு தொடர்ச்சியா போட்டிருக்காங்க. உதாரணமா சொல்லணும்-னா, டைடல் பார்க் தாண்டி கொஞ்ச தூரத்துல ஆரம்பிக்கற இந்த டிவைடர்ல கொறைஞ்சது மூனு நாலு கிலோமீட்டருக்கு இடைவெளியே கிடையாது. இதுக்கு நடுல கந்தன்சாவடி உள்பட சில கிராமங்களே இருக்கு. அந்த கிராமங்கள்ல இருக்குற மக்கள் சாலைய கடந்து இந்தப் பக்கம் இருக்குற மளிகைக் கடையில பொட்டுக்கடலை வாங்கணும்-னாகூட 4 கிலோமீட்டர் சுத்தணுமா?
நம்ம மக்கள் என்ன செய்வாங்க? ரோட்ல குறுக்க ஓடிவந்து ரோட்ட கடந்து, டிவைடர்ல ஏறி அந்தப் பக்கம் இறங்கி அந்தப் பக்க ரோட்டைக் கடந்து ஓடி பொட்டுக்கடலை வாங்கிகிட்டு திரும்ப அதேமாதிரி ஓடித்தான் திரும்ப வரணும். இந்த சாலைகள்ல ஓடற வாகனங்களோட வேகத்தைக் கேட்கவே வேண்டாம். டிவைடர்ல ஏறி கீழ இறங்கறதுக்கு பயந்துகிட்டு நிக்கற பல முகங்கள்ல பீதி தெரியும். “புள்ளையாரப்பா, இந்த ரோட்ட கடந்து அந்தப் பக்கம் என்னை கொண்டு சேர்த்துட்டீன்னா உனக்கு தேங்காய் உடைக்கறேன்பா”–ன்னு வேண்டிகிட்டு இறங்கினாத்தான் உண்டு. வயசான பாட்டிகள்லாம் ரோட்ட கடக்கும்போது உயிர் போயி உயிர் வர்ற மாதிரி ஒரு பயம் டிவைடர்ல நிக்கறபோதே அவங்க முகங்கள்ல தெரியுது. கண்ணே சரியா புரியாதவங்க, வாகனங்களோட வேகத்தை எப்டி கனிக்க முடியும்?? அவசமா இறங்கும்போது சில நொடி தவறினாலும் டேஞ்சர்தான். இன்னும் முக்கியமா, அந்த ஏரியால ஒரு பள்ளிக்கூடம் வேற இருக்கு. பள்ளி விடற நேரமா இருந்தா பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் இந்த டிவைடர்கள்ல ஏறி குதிச்சுதான் சாலைய கடக்கறாங்க.

டிவைடர்கள்ல மக்கள் ஏறி சாலைய கடக்கறது மட்டும் இல்லாம சைக்கிள கைல தூக்கிகிட்டு கடக்கறவங்களையும் தினமும் பாக்கறேன். இவங்க கதியெல்லாம் அதோகதிதானா? இந்தச் சாலைகள் ஐடி மக்களுக்கு மட்டும்தானா?