செல்வம். – ரீமிக்ஸ் சிறுகதை.

தமிழ் சினிமா உலகத்துல ரீமிக்ஸ் இப்போ ஒரு ஃபாஷனா ஆய்டுச்சு. பழைய படங்கள எடுத்து அப்டியே திரும்பவும் எடுக்கறது. பழைய பாடல்கள எடுத்து மாத்தறது-ன்னு இந்த ரீமிக்ஸ் கலாச்சாரம் பிரபலமாயிட்டு இருக்கு.

நமக்கு (கொஞ்சம்) தெரிஞ்ச ஏரியால நாமும் ரீமிக்ஸ் பண்ணலாமே-ன்னு ஆரம்பிச்சேன். சுஜாதா சார் எழுதின சிறுகதை ஒன்ன எடுத்துகிட்டு அதை ரீமிக்ஸ் பண்ணினா எப்டி இருக்கும்-ன்னு ஆரம்பிச்சு போன மாசம் ரெண்டு மூணு நாள் ஒக்காந்து ஒரு கதை தயார் பண்ணினேன். ஆனா எங்க வீட்ல இருக்குற பாழாப்போன இண்டெர்நெட் கனெக்ஷனால, அந்தக் கதைய save பண்ணும்போது எதோ கனெக்ஷன் ப்ராப்ளத்தால எல்லாமே போய்டுச்சு. இதுனால ரெண்டு கஷ்டங்கள், ஆரம்பிச்ச ஒன்ன அப்டியே பாதில விட்டுட்டு வேற விஷயத்துக்கு போக முடியல. இந்த ரீமிக்ஸ் உள்ளே உக்காந்துகிட்டு போக மாட்டேங்குது. டைப் பண்ணினதையே திரும்பவும் டைப் பண்ண ஒரு சுறுசுறுப்பு வரமாட்டேங்குது. அலுவலக வேலைகள்ல வேற கடந்த சில வாரங்களா பலு அதுகமாய்டுச்சு. எப்டியோ, இப்போ முடிச்சுட்டேன். இனி கதை பாடு! உங்க பாடு!! :)
ஒரிஜினல் செல்வம் படிச்சதில்லை-ன்னா சொல்லுங்க, புத்தகத்தை ஸ்கேன் பண்ணி பதியறேன்.

ரீ-மிக்ஸ்ட் செல்வம்..

“கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா..” என்று பாடத்தொடங்கிய கடிகாரம்,
“அலார்ம் ஆஃப்” என்ற ‘ரித்’தின் குரல் கேட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ‘குட் மார்னிங் ரித்’ என்றது.
அதை காதில் வாங்காதவனாக எழுந்து ஹாலுக்கு வந்தான் ரித்விக் என்கிற ரித்.

ஹால் சற்றே இறுட்டாக இருந்தது. ஹாலைத்தாண்டி இருந்த சமையலறையில் இருந்து வழிந்த கொஞ்சம் வெளிச்சத்தில் ஹாலில் போடப்பட்டிருந்த சோபாக்கள் தாங்கள் இருக்கும் இடத்தை அறிவித்தன. ரித்தின் மனைவி தர்ஷினி சமையல் அறையில் இருந்ததை அவள் அமுக்கிய பட்டன்களில் இருந்து எழும்பிய ‘பீப் பீப்’ சத்தங்கள் ஒலிபரப்பின.

“எழுந்துட்டீங்களா ரித்?” என்றாள் தர்ஷினி.
“எழுந்த உடனே ஹால்ல இருக்குற லைட்ட போடுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?” என்று கோபித்துக்கொண்டு “ஹால் லைட்ஸ் ஆன்” என்றான் ரித்.
ஹாலில் விளக்குகள் விழித்துக்கொண்டு பிரஹாசித்தன.
“நீங்க ஈசியா சொல்லிடறீங்க. உங்க குரல் அதுக்கு நல்லா தெரியுது. காலைல இருந்து 10 தடவை சொல்லிட்டேன், வேற வேற ஸ்டைல்ல, அது கேட்டாத்தான!!” என்றாள் தர்ஷினி.
விளக்குகளின் பிரஹாசம் கண்களை கூசச்செய்ய, “லைட்ஸ் டிம் த்ரீ” என்றபடி சோபாவில் அமர்ந்தான் ரிக்.
விளக்குகள் தங்கள் பிரஹாசத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டன.

ஹாலில் சுற்றுச்சுவர்கள் நேற்று பூசப்பட்டதுபோல வெளிர் பச்சை நிறத்தில் வழுவழுத்தன. சதுரமான ஹாலில் சமையலறையின் வாசல் இருந்த சுவரை ஒட்டி மூவர் அமரக்கூடிய கருப்பு நிற சோபாவும், அதை ஒட்டிய அடுத்த சுவற்றுக்கு முன்னால் ஒருவர் அமரக்கூடிய சொகுசு இருக்கைகள் இரண்டும் இருந்தன. சொகுசு இருக்கைகளுக்கு பின்புறம் தேக்கு மரத்தை இழைத்துச் செய்த ஜன்னல் சுவற்றோடு பதிக்கப்பட்டதுபோல் இருந்தது. ஜன்னலுக்கு வெளியில் பச்சை வயல் பரந்து விரிந்திருந்தது. வயல்களின் இடையே தென்றல் ஓடி விளையாட, நெற்பயிர் அதற்கேற்ற மாதிரி நடனம் ஆடிக்கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக விளையாடிக் களைத்த தென்றல் வீட்டிற்குள் வீசிக்கொண்டிருந்தது.

மூவர் அமரக்கூடிய சோபாவின் எதிர்ப்புறச்சுவற்றின் மேல்புறம் இடது மூலையில் ரித்-தர்ஷினி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும், வலது மூலையில் கடிகாரமும் தெரிந்தன. கடிகாரத்துக்கு சற்று கீழே, வீட்டின் உட்புறத்தின் வெப்பநிலையையும் வெளிப்புற வெப்பநிலையையும் அறிவிக்கும் அறிவிப்புகள் மின்னின. சுவற்றின் கீழ்புறம் வலது மூலையில் சிறிய குப்பைத் தொட்டி ஒன்று தெரிந்தது.

சோபாவில் அமர்ந்து, “மங்கை” என்றான் ரித்.

சோபாவின் எதிரில் இருந்த சுவற்றில் மடிசார் புடவை கட்டிய மங்கை புன்னகையுடன் தோன்றினாள்.
“குட்மார்னிங் ரித்” என்றாள்.

“ஆர்கானிக் எல் ஈ டிட்ரானிக்ஸ் (Organic LEDtronics) நிறுவனத்துல இருந்து என்னோட பாஸ் சாப்ட்வேர் அப்டேட்ஸ் அனுப்பியிருக்காரு ரித். இன்ஸ்டால் பண்ணட்டுமா?” என்று கேட்டாள்.

“வேண்டாம். அப்புறமா ஞாபகப்படுத்து. எனி அதர் மெயில்ஸ்” என்றான் ரித்.

“ரெண்டு மெயில்ஸ் வந்திருக்கு ரித். ஒன்னு “ஒன்னு தர்ஷினி அம்மா கிட்ட இருந்து. அடுத்தது உங்க டாக்டர் கிட்ட இருந்து…”

சொல்லி முடிப்பதற்குள் தர்ஷினி வந்து, “அம்மா கிட்ட இருந்து மெயிலா, என்னன்னு பாருங்க!!” என்றாள்.

“தர்ஷினி அம்மா மெயில் ஓப்பன் பண்ணு, மங்கை” என்றான் ரித்.

“சரி ரித்” என்றாள் மங்கை.

சில வினாடிகளில், தர்ஷினியின் அம்மா, மங்கையில் அருகில் தோன்றினாள்.

“தர்ஷினி எப்டிம்மா இருக்க? அப்பாவும் நானும் நல்லா இருக்கோம். நீ ரொம்ப ஆசைப்பட்ட விண்டோ டிசைன் பண்ணியிருக்கேன். நம்ம குலதெய்வம் கோயில் விண்டோ பண்ணினேன். இன்ஸ்டால் பண்ணி பாத்துட்டு எப்டி இருக்கு-ன்னு சொல்லும்மா!! ரித் நல்லா இருக்காரா? டாக்டர்ட்ட போனீங்களா, என்ன சொன்னாங்க? எல்லாத்துக்கும் ஒரு மெயில் அனுப்பும்மா!!” என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.

“அவங்ககிட்ட இருந்து ஒரு அட்டாச்மெண்ட் வந்திருக்கு ரித், விண்டோ டிசைன் அனுப்பியிருக்காங்க. பழைய வெர்ஷன்ல பண்ணியிருக்காங்க. அப்கிரேட் பண்ணி இன்ஸ்டால் பண்ணட்டுமா?” என்றாள் மங்கை.

“இவள முதல்ல என் பேச்சை கேட்க சொல்லுங்க. எத்தனை தடவை மங்கை மங்கை-ன்னு கூப்பிட்டாலும் வர மாட்டேங்கறா. என்னிக்கு உங்க பாட்டி பேரை வெச்சீங்களோ, அன்னில இருந்து என் பேச்சை கேக்கக்கூடாது-ன்னு கர்வமா இருக்கா” என்றாள் தர்ஷினி.

“உன் வாய்ஸ் எப்டி ரெக்கார்ட் பண்ணியோ அதே மாதிரி பேசினா அவளுக்குப் புரியும். நீ ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி பேசினா அவளுக்கு எப்டி புரியும்!!” என்றான் ரித்.

“இன்ஸ்டால் த விண்டோ மங்கை” என்றான் ரித்.

“ஷ்யூர் ரித்” என்றாள் மங்கை.

சில வினாடிகளில் வயல்களையும் தென்றலையும் காட்டிக்கொண்டிருந்த ஜன்னல் சுறுங்கி ஒரு ஒளிக்கற்றையாக மாறி சுவரோரம் இருந்த குப்பைத் தோட்டியை நோக்கி ஓடி மறைந்தது. ஜன்னல் இருந்த இடம் வெறுமையாக இருந்தது. அடுத்த சில வினாடிகளில், மங்கையிடம் இருந்து ஒரு ஒளிக்கீற்று தோன்றி, ஜன்னல் இருந்த இடத்தில் விரிந்தது.

ஜன்னல் முன்பு இருந்ததை விட சற்று பெரிதாக இருந்தது. ஜன்னலுக்கு வெளியில் சுவாமிமலை முருகன் கோவில் தெரிந்தது. கோவில் மணி ஓசையும், மெல்லிய மந்திர ஒலியும் கேட்டது. முருகனுக்கு தீபாராதனை காட்டப்படும்போது, ‘வெற்றிவேல் முருகனுக்கு… அரோகரா’ என்று மக்கள் முழங்குவது தூரத்தில் இருந்து கேட்பது போல் கேட்டது.

தர்ஷினி கன்னத்தில் போட்டுக்கொண்டு, “வாவ் நல்லா இருக்குல்ல ரித்” என்றாள்.

தர்ஷினியைப் பார்த்து “நல்லா இருக்கு, மார்னிங்ல மட்டும் வெச்சுக்கோ!!” என்றான்.

“ஈவினிங்ல பீச் விண்டோவே இருக்கட்டும் மங்கை. அதை மாத்த வேண்டாம்” என்றபடி, “டாக்டர் மெயில் ஓப்பன் பண்ணு” என்றான்.

“சரி ரித்” என்றாள் மங்கை.

சில வினாடிகளில் மங்கையின் அருகில் டாக்டர் லிடியா தோன்றினாள்.
“ஹாய் ரித் அண்ட் தர்ஷினி, உங்க மெடிக்கல் ரெப்போர்ட்ஸ் எல்லாம் வந்துடுச்சு. உங்க ஸ்பெர்ம் ரி-டிஃபைன் ப்ராஸஸ் எல்லாம் முடிஞ்சிடுச்சு. உங்களுக்கு ஜெனிட்டிக்கலா இருக்கற ‘டயாபீட்டிஸ், ஹைப்பர் டென்ஷன்’ மாதிரி டிசீஸ்கள்லாம் உங்க குழந்தைகளுக்கு வராதபடி ‘டி என் ஏ’ல கரெக்ஷன் ப்ராஸஸ் முடிஞ்சிடுச்சு. நீங்க விரும்பினா கருவை உருவாக்கி வளர்க்க ஏற்பாடுகளை ஆரம்பிக்கலாம். பத்து மாதத்தில் உங்களுக்கு குழந்தையை டெலிவர் பண்ணிடுவோம். தர்ஷினி ‘ட்ரெடிஷனல்’ முறையை விரும்பினதால கருவை உருவாக்கி அவங்க கர்பப்பைல ப்ளாண்ட் பண்ணணும்னாலும் பண்ணிடலாம். ரிஸ்க் அதிகம்-ங்கறதாலயும் பெயின்ஃபுல்-ங்கறதுனாலயும் 95% பேர் ‘ட்ரெடிஷனல்’ முறைய விரும்பறது இல்லை. நீங்க அந்த முறைய இன்னும் விரும்பினா, நீங்க ரெண்டு பேரும் ஈ-ஸைன் பண்ணின மெயில் ஒன்னு அனுப்புங்க. அடுத்த வாரம் ப்ளாண்ட் பண்றதுக்கான அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக்கோங்க. ஆல் த பெஸ்ட்.”
லிடியா மறைந்தாள்.

“தர்ஷினி ட்ரெடிஷனல் முறையை தேர்ந்தெடுத்திருக்காங்களா ரித்?” என்றாள் மங்கை.

டாக்டர் பேசும்போது ஏற்பட்ட தர்ஷினி முகத்தில் ஏற்பட்ட ஆனந்த அபிநயங்கள், மங்கையின் கேள்விக்குப் பிறகு காணாமல் போயின.
“அதெல்லாம் இவளுக்கு எதுக்கு? தேவையில்லாம கேள்வி கேட்டுகிட்டு, டாக்டர் மெயிலை திரும்ப ப்ளே பண்ண சொல்லுங்க” என்றாள் தர்ஷினி.

“டாக்டர் மெயிலை ரீ-ப்ளே பண்ணு மங்கை” என்றான் ரித்.

லிடியா மீண்டும் தோன்றி “ஹாய்’யில் இருந்து ஆரம்பித்தாள்.

தர்ஷினியின் முகத்தில் மீண்டும் ஆனந்த அபிநயங்கள் நடனமாடின.
“சீக்கிரமே ப்ளாண்ட் பண்ணிக்கலாம் ரித்” என்றாள்.
“சரி அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிடலாம்” என்றான் ரித்.
மகிழ்ச்சியாக ஹாலில் இருந்து நகர்ந்து உள்ளே சென்றாள் தர்ஷினி.

சிரிது நேரத்தில் “ரித் சீக்கிரம் இங்கே வாங்களேன்” என்று அவசரமாக அழைத்தாள் தர்ஷினி.
“என்னாச்சு?”
“சீக்கிரம் வந்து இதைப் பாருங்க.”
“என்னாச்சு ரித்? நான் எமர்ஜென்சியை கூப்பிடவா?” என்றாள் மங்கை.
“வேண்டாம் வேண்டாம். வெய்ட்” என்றபடி எழுந்து உள்ளே சென்றான் ரித்.

தர்ஷினி பதற்றமாக, “இங்கே பாருங்க” என்று சுட்டினாள்.
அவள் காட்டிய மூலையில் தண்ணீர் சிறிது தேங்கி நின்றது.
“தண்ணீர் எப்படி இங்கே? நைட் நீ எங்கேயாவது ஊத்தினியா?” என்றான் ரித்.
“இல்லை ரித். குடிக்கறதுக்கு மட்டும்தான் 100 மிலி கொண்டுவந்தேன். அதையும் நைட்டே குடிச்சுட்டேன். இங்கே எப்படி வந்தது-ன்னு தெரியலை. நான் ஊத்தல.”
“தண்ணீரை வேஸ்ட் பண்றது க்ரைம் ரித். கீழ ஊத்தீட்டீங்களா என்ன?” என்று மங்கை ஹாலில் இருந்து குரல் கொடுத்தாள்.
“இவளை முதலில் நம்ம பேசறதை ஒட்டுக்கேட்காம இருக்க சொல்லுங்க” என்றாள் தர்ஷினி.
“நோ மங்கை எவரிதிங் ஆல்ரைட்.” என்றான் ரித்.
“எனக்கு பயமா இருக்கு ரித்.”
“இரு. இந்த தண்ணீர் எப்டி இங்கே வந்துச்சு-ன்னு மொதல்ல பாரு!”

தண்ணீர் வந்த தடத்தைப் பின் தொடர்ந்தாள் தர்ஷினி.
பால்கனியின் அருகில் பழைய சாமான்கள் போட்டு வைத்திருந்த சிறிய அறையில் இருந்து தண்ணீர் கசிந்துகொண்டிருந்தது.
“ரித். இங்கே இருந்துதான் வருது”
“இந்த ரூம்ல தண்ணீருக்கே வேலையில்லையே!!” என்றுபடி சிறிய அறையின் கதவைத் திறக்க பாஸ்வோர்டை தட்டினாள் தர்ஷினி. கதவு திறந்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோனாள். தொடர்ந்து வந்த ரித்தையும் அதிர்ச்சி அலை தாக்கியது.
அந்த சிறிய அறையில் 25 லிட்டர் 10 லிட்டர் 5 லிட்டர் கேன்கள் என நிறைய தண்ணிர் கேன்கள் இருந்தன. சாய்ந்து கிடந்த ஒரு கேனில் இருந்து தண்ணீர் கசிந்துகொண்டிருந்தது.
“ரித், இவ்ளோ தண்ணீர் எப்டி வந்தது?”
“ரித். ரித். என்னாச்சு?” அதிர்ச்சியில் அசையாது நின்ற ரித்தை உளுக்கினாள் தர்ஷினி.
அதிர்ச்சியில் இருந்து மீண்டு, கண் பார்வையை தண்ணீர் கேன்களில் இருந்து விளக்கியவன், “ஒன்னும் ஆகலை. இவ்ளோ தண்ணீர் இங்கே எப்படி வந்துச்சு”
“ஒரு வேளை யாராவது நம்மளை சர்ப்ரைஸ் பண்றதுக்காக கொண்டு வந்து வெச்சிருப்பாங்களோ!!” என்றாள் தர்ஷினி.
“இவ்ளோ தண்ணீரை வேச்சு சர்ப்ரைஸ் பண்ற அளவுக்கு யாரு இருக்கா?”
“ஒருவேளை எதாவது ரியாலிட்டி ஷோவா இருக்குமோ. நம்மளை யாராவது கேரமால பார்த்துகிட்டே இருக்காங்களோ!! ”
“அப்டியெல்லாம் ஒன்னும் இருக்காது.”
“ஒரு வேளை யாராவது கொள்ளையடிச்சுட்டு இந்தப் பக்கமா வரும்போது கொண்டு வந்து வெச்சுருப்பாங்களோ!”
“இந்த ரூம் லாக்குக்கு பாஸ்வேர்ட் உன்னையும் என்னையும் தவிர யாருக்கும் தெரியாதே!!”
“இல்லை எங்க அம்மாவுக்கும் தெரியும்!”
“அவங்ககிட்ட உன்னை யார் சொல்லச்சொன்னது. அவங்க யார்கிட்டையாவது சொல்லியிருப்பாங்களோ!!” ரித் கேட்கும்போதே பதற்றமும் கோபமும் பொங்கின.

“தேவைக்கு அதிகமா தண்ணீர் வெச்சிருக்கறது குற்றம் ரித்” என்று எச்சரிக்கை செய்தாள் மங்கை ஹாலில் இருந்து.
“முதல்ல இதை ஷட்டவுன் பண்ணுங்க. நம்ம பேசறதை ரெக்கார்ட் பண்ணி அவங்க கம்பெனிக்கு அனுப்பிடப்போகுது” என்று எச்சரித்தாள் தர்ஷினி.
“மங்கை, கோ ட்டு ஸ்லீப் மோட்” என்று மங்கையை தூங்க அனுப்பினான் ரித்.
“ஸ்லீப் மோட் ஆன்” என்று தூங்கப் போனாள் மங்கை.
“ஸ்லீப் மோடு வேண்டாம். தூக்கதுலயும் ஒட்டுகேட்டாலும் கேட்கும்” என்றாள் தர்ஷினி.
“மங்கை, இண்டராக்ட்டிவ் மோட் ஆஃப் அண்ட் ஷட்டவுன் யுவர்செல்ஃப்” என்று, அவர்கள் பேசுவதை மங்கை கேட்காதபடி செய்தான்.
மீண்டும் விழித்துக்கொண்ட மங்கை,
“ரித், ஆர் யூ ஷ்யூர் யூ வாண்ட் மீ டு ஷட்டவுன் மைஸெல்ஃப்” என்று கேட்டுக்கொண்டாள்.
“எஸ்” என்றான் ரித்.
“ஷட்டிங்க் டவுன்” என்று முழுவதுமாக மறைந்து போனாள் மங்கை.

“இனிமே ஒட்டுக்கேட்காதே?” என்றாள் தர்ஷினி.
“கேட்காது”
“சரி இப்போ என்னதான் செய்யறது ரித்”.
“இரு யோசிக்கலாம்.”
“எனக்கு பயமா இருக்கு, ரித்”
“இது ஒன்னும் நம்ம தப்பு இல்லையே. இவ்ளோ தண்ணீரை நாம கடத்தவும் இல்லை, பதுக்கவும் இல்லை. நல்லா யோசிச்சு சொல்லு உணக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையே!!”.
“இல்லை ரித். நிச்சயமா இல்லை. மறந்தும்கூட இவ்ளோ தண்ணீரை வாங்க மாட்டேன்” என்றாள் தர்ஷினி உறுதியாக.
“அப்போ போலீஸ கால் பண்ணிட வேண்டியதுதான்”.
“இவ்ளோ தண்ணீர் வீட்டுக்குள்ள எப்டி வந்துது-ன்னு கேட்டா?”
“தெரியலை-ன்னு உண்மைய சொல்லுவோம்”
“நம்புவாங்களா??”
“சொல்லித்தான ஆகணும். சரி போன்ல சொல்ல வேண்டாம். நான் போய் நேர்ல விவரத்தை சொல்றேன்”
“நானும் வரட்டுமா??”
“வேண்டாம். நான் மட்டும் போய்ட்டு வர்றேன்!! பதட்டத்துல தொண்டை வரண்டுபோச்சு. குடிக்க கொஞ்சம் தண்ணீர் இருக்கா?”
“சாப்டதுக்கப்புறம் குடிக்கறதுக்கு வைச்சிருக்குற 150 மிலி மட்டும் இருக்கு. தரட்டுமா?”
“கொடு”
“சாப்டதுக்கப்புறம் குடிக்க என்ன பண்றது?”
“இன்னிக்கு ஒருநாள் சமாளிச்சுக்கலாம். ரொம்ப தாகமா இருக்கு!!”
“சரி, இருங்க. எடுத்துட்டு வர்றேன்” என்று சமையலறை-க்குச் சென்றாள் தர்ஷினி.