இ.கொ.வ.

“மொதல்ல காலைல வீட்டு வாசல்ல வர்ற வண்டிலயே காய்கறி வாங்கறதை நிறுத்துங்க. பக்கத்து தெருல ஒரு பெரிய காய்கறி கடை இருக்கு. தினமும் காலைல 7 மணிக்குள்ள போனா எல்லா காய்கறியும் ஃப்ரெஷ்ஷாவே கெடைக்குது. அங்கே போயி வாங்கினா என்ன? நாளைல இருந்து தினமும் அங்க போய் வாங்கிட்டு வாங்க! நடந்து போங்க!!” மருமகள் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“ஆமாம்மா, நாளைல இருந்து அங்கேயே வாங்கிட்டு வந்துடுங்கம்மா”. மகனும் ஆமோதித்துக்கொண்டிருந்தான்.

“நாளைல இருந்து காலைல காஃபியை நிறுத்தப்போறேன். கஞ்சி போட்டுத் தர்றேன் அதைக் குடிங்க!!”
“ஆமாம்மா கஞ்சியே குடிச்சுக்கங்கம்மா”

“காலைல டிஃபனுக்கு இனிமே, பூரி பொங்கல் எல்லாம் கெடையாது. இட்லி தோசைதான். அதுவும் மூனு இல்ல நாலு இட்லிதான். தோசைன்னா ரெண்டு இல்ல மூனுதான். அதுக்கு மேல கெடையாது”
“மூனு நாலு இட்லி உங்களுக்கு போதும்லம்மா?”

“அதென்ன காலைல 11 மணிக்கு இன்னொரு காஃபி? இனிமே அதெல்லாம் இல்லை. 11 மணிக்கும் கஞ்சியே குடிங்க. இல்ல பாவக்காய் ஜீஸ் போட்டுத் தர்றேன் அதைக் குடிங்க”
“ஆமாம்மா, கஞ்சியே…”

“மதியம் விருந்து சாப்பாடெல்லாம் இனிமே கெடையாது. தினமும் என்ன திருவிழாவா? தேங்காய் நெய்யெல்லாம் போட்டு, பொரியல், சாம்பார், பாயாசம்லாம் பண்றதுக்கு. இனிமேல் கிடையாது. ஒரு கப், இதோ இந்தச் சின்னக் கப்லதான் சாதம். அதுவும் பச்சரிசியெல்லாம் கெடையாது. புழுங்கல்தான். நெறைய கீரையை அவிச்சு வைக்கறேன். அதை சாப்டுங்க”
“ஆமாம்மா, இனிமே கீரையையே..”

“ஒருநாள் பாக்கியில்லாம அப்பளம். இனிமே அப்பளம் வாங்கறதையே நிறுத்தப்போறேன். பஜ்ஜி, பக்கோடா வாசனையே இனிமே இந்த வீட்டுப்பக்கம் வரக்கூடாது. வேணும்னா, கடலையை உப்புப் போடாம அவிச்சு வைக்கறேன். சாப்டுங்க”
“அப்பு அப்பளம் இப்போல்லாம் கடைல கெடைக்கறதும் இல்லைம்மா!!”

“குழந்தைக்கு 5 மணிக்கு டான்ஸ் கிளாஸ் முடியும், அவளைப் போய் கூட்டிகிட்டு அப்டியே பக்கத்து தெருல இருக்கற பார்க்குக்கு விளையா கூட்டிட்டு போங்க. நடந்தே!!”
“…”

“தோசைன்னா அதுல எண்ணை. சப்பாத்தின்னா எண்ணை, மிளகாய் பொடிக்கு ஜோதிகா மாதிரி எண்ணை இதெல்லாம் இன்னையோட முடிஞ்சுது. எண்ணை ஊத்திக்காம மிளகாய்ப்பொடி தொட்டுக்க முடியாதா? இல்லை சப்பாத்தி சுட முடியாதா? இன்னைல இருந்து சுட்டுத்தர்றேன். சாப்டுங்க”
“…”

“நைட்டு 11 மணி வரைக்கும் டிவி. இந்த சீரியல்களை ஒழிச்சாத்தான் நாடு உறுப்புடும். இதுல 75 ஆண்டு சினிமாக் கொண்டாட்டமாம். நைட் 11 மணிக்கு சினிமா போடறானுவ பாழாப்போனவனுவ. 10 மணியோட டிவி பாக்கறதை முடிச்சுக்கங்க. 10 மணிக்கெல்லாம் டிவியை நிறுத்திடுவேன்.”
“10:30 மணிக்கு லெட்சுமி சீரியல் முடியற வரைக்குமாவது பாக்கட்டுமே!!”.

திரும்பிப் பார்த்து முறைத்தாள்.
“…”

நம்ம மேல நம்ம மருமகளுக்கு எவ்ளோ பாசம். சுகர் ரொம்ப அதிகமாயிருக்கு, ப்ரஷர் இருக்கு-ன்னு டேக் குட் கேர்-ன்னு டாக்டர் சொன்னதுல இருந்து எப்டியெல்லாம் கவனிச்சுக்கறா!! மருகமள் அமைவதெல்லாம் கூட இறைவன் கொடுத்த வரம்தான் போலருக்கு‘.என்று மகிழ்ந்தார் மாமியார்.