காளை மனம்.

‘குமாரூ, வெளிய களம்பிடாதடா. கொஞ்சம் ரேசன் கடை வரைக்கும் போவணும்டா’ குமாரின் அம்மா கெஞ்சலாக சொன்னாள்.
‘ஒனக்கு நேரங்காலமே தெரியாது, வெளில போகும்போதுதான் இங்க போவணும் அங்க போவணும்-ப. நாளைக்கு பாத்துக்கலாம் போ!’
‘இல்லடா, இன்னிக்கு அரிசி போடறாங்கடா. செத்த போய்ட்டு வந்துருடா!!’
‘காலைலயே சொல்றதுக்கு என்ன?’
‘இப்பதாண்டா அப்பா வந்து இருவது ரூவா குடுத்துட்டுப் போனாரு.’
‘ரேசன் கடை க்யூலல்லாம் போயி நிக்க முடியாதும்மா!! அவரயே போவ சொல்றதுததான?’
கரெக்ட்டா எதிர் வீட்டு சுஜாதா ட்யூஷனுக்கு கெளம்பற நேரத்துலதான் பைய தூக்கிக்கிட்டு ரேசன் கடைக்குப் போவ சொல்லுவ. அவ ஒரு மாதிரி ஓரக்கண்ணால நக்கலா பாப்பா, அப்புறம் ஃப்ரெண்ட்ஸ்கூட சேந்துகிட்டு சிரிப்பா!! ட்யூஷன் படிக்கற மாடில இருந்து பார்த்தா ரேசன் கடை க்யூ நல்லாத் தெரியும். அங்க நின்னு என்னைப் பாத்து ஏதாவது சொல்லி சொல்லி கிண்டலடிப்பா!! என்று நினைத்துக்கொண்டான்.

‘இல்லடா! இப்பொவே போனா கூட்டமா இருக்காது. இன்னிக்கு பொங்கலுக்காக ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் இலவச வேட்டி சேலையும் தர்றாங்கலாம். அதுனாலதாண்டா சொல்றேன். போய் வாங்கிட்டு வந்துருடா’
‘வேட்டி சேல குடுன்னெல்லாம் நான் போய் கேக்கமாட்டேம்மா. நீயே போ!’
‘நீ கேக்கவேண்டாம்டா அவங்களே குடுத்துருவாங்க. நீ வாங்கிட்டு வந்தா போதும். செத்த செரமம் பாக்காம போய்ட்டு வந்துருடா’
பையையும் பணத்தையும் கொடுத்தாள்.
‘இவ்ளோ பெரிய பையெல்லாம் எடுத்துட்டு போவ சொல்லாதம்மா, மஞ்ச பை சின்னது ஒன்னு இருக்குமே அது எங்க?’
சின்ன பையா இருந்தா, சுஜாதாவுக்குத் தெரியாம, மடிச்சு பேண்ட் பாக்கெட்டுக்குள்ள வெச்சுகிட்டு போய்டலாம்
‘அது பத்து கிலோ புடிக்காதுடா, காது அறுந்துடும்’

வேண்டா வெறுப்பாக பையையும் பணத்தையும் வாங்கிக்கொண்டான். சட்டையில் இருந்த சுறுக்கங்களை நீட்டிக்கொண்டான். தலை வாரிக்கொண்டான். வாசல் பக்கம் நோட்டம் விட்டான்.
சுஜாதா கெளம்பியிருப்பாளா?
‘இப்பொவே போனா கூட்டம் இருக்காதுடா’
‘பணத்த குடுத்துட்டல்ல, உன் வேலையப் பாத்துகிட்டு போ. எப்போ போவணும்-னு எனக்குத் தெரியும்.’
கடிகாரத்தைப் பார்த்தான்.
இந்நேரம் கெளம்பி போயிருப்பா

காலில் செருப்பு மாட்டிக்கொண்டு வெளியில் வரவும், சுஜாதா, அவள் வீட்டில் இருந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது.
ச்ச, இவ்ளோ நேரம் ஆளையே காணும், கரெக்ட்டா களம்பற நேரத்துல வர்றா பாரு!! இன்னிக்குன்னு பார்த்தா லேட்டா கெளம்பணும்? கையில பை வெச்சிருக்கறத பார்த்திருப்பாளோ? பையை அவசரமாக மறைத்தான். பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டு வேகமாக நடந்தான். ரேஷன் கடை அவர்கள் இருந்த தெருவில் இருந்து மூன்றாவது தெருவில் இருந்தது.
பின்னாடியே அவளும் வர்றாளோ? பையை முன் பக்கமா வெச்சுக்கணும்
தெரு முனைவரையிலும் வேகமாக நடந்தவன், திரும்பிப் பார்த்தான். சுஜாதா பின்னால் வந்துகொண்டிருந்தாள்.
குறுக்குச் சந்து வழியாக புகுந்து வேகமாக நடந்து ரேஷன் கடையை அடைந்தான். ஆண்கள் வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். சுஜாதாவை காணவில்லை. ட்யூஷன் மாடியைப் பார்த்தான். அங்கும் யாரும் இல்லை. கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டான். கடை அதிகாரிகளையும் கடையில் இருந்து அரிசி வாங்கிக்கொண்டு போகிறவர்களையும் நோட்டம் விட்டான்.
இலவச வேட்டி சேலை எல்லாருக்கும் தர்றாங்களா? கேட்டாத்தான் தர்றாங்களா இல்ல கேட்கலன்னாலும் தர்றாங்களா?
யோசித்துக்கொண்டே திரும்பியவன் அதிர்ந்தான். சுஜாதா வந்துகொண்டிருந்தாள்.
அடப்பாவி இங்கயும் வர்றாளே. அவளைப் பார்க்காததுபோல் திரும்பிக்கொண்டான். சில வினாடிகள் கழித்த ஓரக்கண்ணால் பார்த்தான். அவனுக்கு அருகில் வந்திருந்தாள். அவசரமாக யோசித்தான்.
என்ன பண்ணி இங்கேயிருந்து கெளம்பறது? சில்லறை மாற்ற வந்தவன் போல பாவ்லா செஞ்சு நழுவிட்டா என்ன?
‘ஐநூறு ரூபாய்க்கு சில்லரை இருக்கா?’ என்று வரிசையில் முன்னாடி நின்றவரைக் கேட்டான்.
‘எண்ட இல்லப்பா, பக்கத்து உரக்கடைல வேணும்னா கேட்டுப்பாரு’
நைசாக நழுவி உரக்கடைக்குள் சென்றான். சிறிது நேரம் உள்ளே நின்று கொண்டிருந்தான். உள்ளேயிருந்து, சுஜாதா உரக்கடையை தாண்டி போகிறாளா என்று கவனித்துக்கொண்டிருந்தான்.
கடையை தாண்டி போயிட்டாளா? இவ்ளோ நேரமாவா போறா? அந்தப் பக்கம் திரும்பியிருந்தப்போ க்ராஸ் பண்ணிப் போய்ட்டாளோ?
மெதுவாக வெளியில் வந்து சுற்றிலும் பார்த்தான். எங்கும் இல்லை. ட்யூஷன் மாடியில் பார்த்தான். அங்கும் இல்லை.
அப்பாடா போய்ட்டா
மீண்டும் வரிசையில் சேர்ந்துகொண்டான். இதற்குள் வரிசையின் நீளம் நீண்டிருந்தது.
மீண்டும் வரிசையில் நின்றவர்களை நோட்டமிட்டான். மீண்டும் அதிர்ந்தான். பெண்கள் வரிசையில் கடைசியாக சுஜாதா நின்றுகொண்டிருந்தாள்.
போச்சுடா, இங்கயே வந்துட்டாளா? திரும்பி நம்மள பாக்கறாளா? இவ முன்னாடி எப்டி இலவச வேட்டி சேலை கேக்கறது? பெண்கள் வரிசை சீக்கிரம் போய்டுமா? ஆண்கள் வரிசைல ஒருத்தருக்கும், பெண்கள் வரிசைல ஒருத்தருக்கும்னு மாத்தி மாத்திதான் கொடுக்கறாங்க? ஆண்கள் வரிசைல எத்தனை பேர் இருக்காங்க? ஒன்னு, ரெண்டு மூனு நாலு…பத்து பதினஞ்சு பேருக்கு மேல இருப்பாங்க போலருக்கே. அந்தப் பக்கமும் அதே அளவுதான் இருப்பாங்க போல தெரியுது

போற போக்கைப் பார்த்தா நானும் இவளும்தான் ஒன்னா போய் நிப்போம் போலருக்கே. வரிசைல இருந்து வெலகி கடைசீல போயி நின்னுடலாமா?’
வரிசையை திரும்பிப் பார்த்தான். வரிசையின் வால் அனுமார் வால் போல் நீண்டிருந்தது.
யப்பா இப்போ போயி கடைசில நின்னா இன்னும் முக்கா மணிநேரமாவது நிக்கணும்
முடிவை மாற்றிக்கொண்டு பெண்கள் வரிசையை மீண்டும் எண்ணினான்.
ஒன்னு, ரெண்டு, மூனு..
முன்னால் நிற்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது.
எனக்கு முன்னாடி இவ போய்ட்டா போதும். போய்டுவாளா? ஒன்னு ரெண்டு மூனு, இந்தப் பக்கம் ஒன்னு, ரெண்டு, மூனு
நினைத்ததுபோல் சுஜாதா முந்திக்கொண்டாள்.
‘பத்து கிலோ அரிசியும் இலவச வேட்டி சேலையும் குடுங்க’ தயக்கம் ஏதும் இன்றிக் கேட்டு பணத்தை நீட்டினாள் சுஜாதா. வாங்கிக்கொண்டு நகர்ந்தாள்.
அடுத்ததாக குமாரும் பத்து கிலோ அரிசியும், இலவச வேட்டி சேலையும் வாங்கிக்கொண்டு வந்தான்.

அவனுக்காகவே காத்திருந்த பாட்டி அவனிடம் நெருங்கி வந்து, ‘மாயரத்தம்மா மவன் குமாருதான நீ?, ஐநூறு ரூவாய்க்கு சில்லறை மாத்திட்டியா? உங்க அம்மா எனக்கு இருநூறு ரூபாய் தரணும். யார் கிட்டயோ ஐநூறு ரூபா கேட்ருக்கறதாவும், வந்தொன்ன தர்றதாவும் சொல்லிச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து வாங்கிக்கறேன்னு சொல்லு’ என்றாள்.