செந்தில்கள். (Updated)
பள்ளிக்கூட நாட்கள்ல இருந்தே இந்த செந்தில்கள் என்னை விட்டதே இல்லை. செந்தில், செந்தில் குமார், செந்தில் குமரன், செந்தில் வேலன் இப்டி பல பெயர்கள்ல கூடவேதான் வந்துகிட்டு இருக்காங்க. சில நேரம், ஒரே வகுப்புலயே ரெண்டு செந்தில் குமார்களும் இருந்திருக்காங்க. அதுவும் ஒரே இனிஷியலோட. பல்லு எடுப்பா இருக்கற ஒருத்தனை ‘பல்லு செந்தில்’ன்னும் சந்தனப் பொட்டு வெச்சிருக்கற செந்திலை ‘சந்தனப் பொட்டு செந்தில்’ன்னும் அடையாளம் வெச்சுக்க வேண்டியிருக்கும். சில செந்தில்கள் ரொம்ப நல்லா படிச்சு எனக்கு வேட்டு வைப்பாங்க. ‘பக்கத்துல உக்காந்திருக்குற செந்திலைப் பாருடா? அவன்லாம் நல்லாப் படிக்கல? ஏன் நீ மட்டும் என் உயிரை வாங்கற? அவன் ****** வாங்கிக் குடிடா!! அப்பவாவது உனக்கெல்லாம் புத்தி வருதான்னு பார்ப்போம்’ன்னு எட்டாம் வகுப்பு வரலாறு வாத்தியார் என்னைக் கேவளப்படுத்த காரணமா இருந்திருக்கான் ஒரு செந்தில். ‘அவன் கையெழுத்தைப் பாரு. முத்து முத்தா இல்லை. நீ மட்டும் ஏன் கோழி கிறுக்கறமாதிரி எழுதற?’-ன்னு மூனாம் வகுப்புலயே மணிக்கட்டு உடைய அடி வாங்கிக் கொடுத்திருக்கான் இன்னொரு செந்தில். இதுவாவது பரவாயில்லை.
‘செந்தில் கூட நீ சேரவே கூடாது!!’ இது எங்க மாமா.
‘எந்த செந்தில்?’ வேற எங்கேயோ பார்த்துகிட்டு.
‘அதான் உன் கூட கிரிக்கெட் வெளையாட வர்றானே அவன்!!’
‘கிரிக்கெட் வெளையாடாவா? யாரு??’ பாவமான முகம்.
‘தெரியாத மாதிரி நடிக்காத. அந்த ‘டீக்கடை செந்தில்’. அவன் ஆளும் மொகறையும்’
யார் யார்கூட ஃப்ரெண்டா இருக்கணுங்கறதையெல்லாம் நீங்க சொல்லக்கூடாது-ன்னு மனசுல ஓடினாலும்,
‘அவன் கூட ஏன் சேரக்கூடாது?’ (செட்டியார் கடைல அவன் ஒளிஞ்சு நின்னு சிகரெட் பிடிச்சதை மாமா பாத்துட்டாரு-ன்னு ஏற்கனவே எனக்குத் தெரியும்)
‘ஏன்னு எதிர்த்தாக்கேக்கற? மாமா சொன்னா சரின்னு கேட்டுக்கமாட்ட??!!’ உயர்ந்த குரலில் அம்மா.
‘இல்லம்மா, ஏன்ன்னு..’
‘அவன் கூட சேராம இருந்தா என்னை மாமா-ன்னு கூப்டு. இல்லை அப்டி கூப்டறதை நிறுத்திடு’
இப்படி எங்க மாமா, அம்மாக்குப் பிடிக்காத செந்தில்கள் இருந்திருக்காங்க.
பண்ணிரண்டாவது முடிச்சுட்டு இன்ஜினியரிங் போகும்போது, ‘முருகா, ஆண்டவா, இந்த ‘சேந்தில்கள்’ட்ட இருந்து ஒரு விடுதலை வாங்கிக்கொடுப்பா’ன்னு வேண்டிகிட்டுப் போனாலும், ‘ஹாய், கவுன்ஸ்ஸிலிங்க உனக்கும் இந்தக் காலேஜ்தான் கெடைச்சுதா?’-ன்னு கூடவே வந்து ஒட்டிக்கிட்டான் பண்ணண்டாம் வகுப்பு செந்தில். ‘வேட்டு வெச்சுட்டியே முருகா’-ன்னு நெனைச்சுகிட்டு இருந்தப்பவே ‘நீ எந்த செக்ஷன்? நான் C’ என்றான். ‘நான் B’, அப்பாடா வேற சேக்ஷனுக்காவது போய் தொலைஞ்சியே-ன்னு நெனைச்சுகிட்டு முதல் நாள் வகுப்புல போய் உக்கார்ந்தேன். ‘முதல் பெஞ்ச்சுல இருந்து ஆரம்பிச்சு ஒவ்வொருத்தரா அவங்க பேரைச் சொல்லி அறிமுகம் செஞ்சுக்கங்க’-ன்னு முதல் வகுப்பை தொடக்கி வெச்ச லெக்சரர் சொல்லும்போது ஒரு த்ரில்லிங் ஆரம்பிச்சுது. முதல் வரிசைல முதல் டெஸ்க்ல செந்தில் இல்லை, இரண்டாவது டெஸ்க்ல நோ செந்தில், மூனாவது டெஸ்க்ல செந்தில் நஹி-ன்னு நீண்டுக்கிட்டே வந்த சந்தோஷத்தை மூனாவது வரிசைல மொதல் டெஸ்க்ல ஒரு செந்தில் வெரட்டியடிச்சுட்டான்.
‘குட்மார்னிங், ஐ ஆம் செந்தில் குமரன் ஃப்ரம் தேனி’.
இப்டி வழி நெடூக பல செந்தில்களோட சேர்ந்து பயணம் செஞ்சிருந்தாலும் இவங்களுக்குள்ள பொதுவான விஷயம் அதிகம் இருந்ததில்லை. ஒருத்தன் சாந்து பொட்டு நிறம், இன்னொருத்தன் சந்தனப் பொட்டு நிறம், மற்றொருத்தன் மை பொட்டு நிறம். எடுப்பான பல்லு, இந்திராகாந்தி மூக்கு, சப்பை மூக்கு மேலையும் எப்பவும் கோபம், கப்பைக் காலு, நெட்டைக் கொக்கு இப்டி ஒவ்வொரு செந்திலும் ஒவ்வொரு மாதிரி.
ஆனா, நான் இப்போ சொல்லப்போற சில செந்தில்களுக்குள்ள ஒரு பொதுவான விஷயம் இருக்கு.
முதல் செந்தில்: மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கணும்-னு ரொம்ப ஆவலா என்ஜினியரிங் கல்லூரில சேர்ந்தவன். அவன் விரும்பிய மெக்கானிக்கல் என்ஜினியரிங் கெடைச்சதுல அவனுக்கு பரம சந்தோஷம். கல்லூரி நாட்கள்ல அவனை சந்திச்ச சந்திப்புகள்ல, அவனோட ஒவ்வொரு பார்வையிலயும் அந்த சந்தோஷம் தெரியும். ஆரம்ப நாட்கள்லல்லாம் கியர் வீல் பத்தியும் சிம்பிள் மெஷின்ஸ் பத்தியுமே மணிக்கணக்குல பேசுவான். ‘யூ நோ, இன் தெர்மோடைனமிக்ஸ்..’-ன்னு ஆரம்பிச்சான்னா, ‘சாமி ஆளை விட்டுடுடா’ன்னு ஓட்டம் எடுத்துடுவேன். ‘யூ நோ, கார்லல்லாம் கார் ஓடும்போதுதான் AC போடணும். நிக்கும்போது போட்டா AC சீக்கிரமே கெட்டுப்போய்டும்’-ன்னு சொல்லுவான். ஏண்டா-ன்னா? கூலிங் சிஸ்டம், கப்ரஸர் சிஸ்டம் பத்தியெல்லாம் அரை மணி நேரம் விளக்கம் சொல்லிட்டு, ‘புரிஞ்சுதா’-ம்பான். ‘ஓ.. ஷ்யூர்’-னு சொல்லிட்டு எஸ்கேப் ஆய்டுவேன். அவன் காலேஸ் ஃபர்ஸ்ட், யூனிவர்சிட்டி செகெண்ட்-ன்னு மெடெல்லாம் வாங்கினான். மேல் படிப்புக்காக, ஐ ஐ டி-யில் தேர்வாகி, ஏர் கண்டிஷனிங் & ரெஃப்ரிஜ்ரேஷன்-லயே மாஸ்டர்ஸ் டிகிரி முடிச்சான். காம்பஸ் இண்ட்டர்வியூலயே தேர்வாகி வேலையில் அமர்ந்தான்.
இரண்டாவது செந்தில்: இவன் எலெக்ட்ரிக்கல்ஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங். வாயைத் திறந்தா மூடாத டைட். எப்பவும் எதையாவது யோசிச்சுக்கிட்டே இருப்பான். திடீர் திடீர்ன்னு எதையாவது கேட்பான். அந்தக் கேள்வி நமக்குப் புரியறதுக்குள்ள இன்னொரு விஷயத்தைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சுடுவான். ஏதாவது ஒரு ஜோக் சொன்னா எல்லோரும் சிரிச்சு முடிச்சப்புறம் பத்து நிமிஷம் கழிச்சு சிரிச்சுட்டு, ‘தட் வாஸ் அ குட் ஜோக்’ அப்டீம்பான். நடந்து போய்ட்டு இருக்கும்போது ‘ஒரு சூப்பர் ஃபிகர் போகுது பாருடா!!’-ன்னு சொன்னா, அந்தப் பொண்ணு அந்தத் தெருவைத் தாண்டிப் போனதுக்கு அப்புறம், ‘எந்த ஃபிகர்?’ம்பான். திடீர்னு ஒரு நாள் தாமஸ் ஆல்வா எடிசனைத் திட்டுவான். ‘அந்த ஆள் பண்ணின தப்புடா குண்டு பல்பைக் கண்டுபிடிச்சது’-ம்பான். ‘குண்டு பல்ப் இருக்கே, அது வெளிச்சத்தையே உண்டாக்கலை. இட் ப்ரொடியூஸஸ் ஒன்லீ ஹீட். சூட்ல இருந்து கெடைக்கற சைடு ப்ராடக்ட்தான் வெளிச்சம். அந்த ஆள் கண்டுபிடிச்சதால இப்போ உலகமே சூடாயிப் போய் கெடக்குது.’-ன்னு க்ளோபல் வார்மிங்க்கு எடிசன் ஒரு முக்கியமான காரணம்-ன்னு சொல்லுவான். ‘உலகம் பூராவும் ‘எல் ஈ டி’(LED) லைட்டுகளுக்கு மாறணும். அதுதான் ரொம்பக் கம்மியா சூட்டை உண்டாக்குது’ன்னு சொல்லுவான். சூரிய சக்தி, ‘எல் ஈ டி’, ‘ஓ எல் ஈ டி’, ஃபைபர் ஆப்டிக்ஸ், இதெல்லாம்தாண்டா எதிர்காலத்துல உலகையே ஆளப்போகுது சொல்லிகிட்டே இருப்பான். ‘ஒரு நிமிஷம் முழுக்க வாயை மூடிக்கிட்டு இருக்கணும்’-ன்னு நூறு ரூபாய் பந்தயம் வைத்து பல முறை தோத்திருக்கான்.
மூனாவது செந்தில்: ரெண்டாவது செந்திலுக்கு அப்டியே தலைகீழ் இவன். அவன் லைட் எமிட்டிங் டையோடு பத்தி பேசினா, இவன் எப்பவும் ‘மண்டையோடு’ பத்திதான் பேசுவான். ‘வாழ்க்கைல எல்லாமே ஒரு பிடி சாம்பல்தான்’-ன்னு சொல்லிட்டு ஒரு காதுல ஆரம்பிச்சு மறு காது வரைக்கும் நெத்தி வழியா ரோடு போட்ட மாதிரி திருநீரு பூசிப்பான். ‘வாழ்க்கைல பணத்தையும், மனத்தையும் மட்டுமே தேடித் தேடி எல்லாருமே அலையாதீங்க. ஆத்ம ஞானத்தைத் தேடுங்க. உங்க எல்லோருக்குள்ளேயும் ஒரு சக்தி தூங்கிக்கிட்டு இருக்கு. உங்களுக்கு அது தெரியல. அந்த சக்தி பேரு குண்டலினி. அந்த சக்தியை எழுப்பினா ஆத்ம ஞானத்தை அடையற வழி உங்களுக்குத் தெரியும். அந்த ஞானத்தைப் பெற முதல் படி, ‘ஓம்’-ங்கற மந்திரம். மனிதனோட ஆதார ஸ்வரமே அதுதான். தினமும் ஓங்காரத்தை உச்சரிச்சீங்கன்னா ஞானப் பாதைல நடக்க ஆரம்பிக்கலாம். இந்த ‘ஓம்’ இந்து மதத்துல மட்டும் இல்ல. கிருஸ்துவ மதத்துலயும் இருக்கு. இந்த ‘ஓம்’தான் அங்க போயி, ‘ஓமென்’-னு ஆகி, அதுவே இப்போ ஆமென் ஆய்டுச்சு. அதே மாதிரி இஸ்லாம்ல, ‘ஓமின்’-னு ஆகி, அதுவே மறுவி, இப்போ ‘அமீன்’ ஆயிருக்கு. இதையெல்லாம் விட்டுட்டு, கல்லூரி, படிப்பு, வேலை, காதல், கல்யாணம், குழந்தை-ன்னு வேற ஏதோதோ பாதைகள்ல நீங்க எல்லோரும் ஓடிகிட்டு இருக்கீங்க. அதையெல்லாம் விட்டுட்டு என் கூட ஆன்மீகப் பாதைக்கு வாங்க’. இதையே வெவ்வேறு நேரங்கள்ல வெவ்வேற மாதிரி சொல்லுவான். சில நேரம் தூக்கம் வராத நண்பர்களும், ‘ஊறுகாய்’ கிடைக்காத குடிமகன்களும் அவனை தூண்டி விட்டு, ‘கோயில்லல்லாம் ஏன்டா ஆபாசமான சிலைகள்லாம் வெச்சிருக்காங்க?’, ‘முருகனே வள்ளியை லவ் மேரேஜ் பண்ணியிருக்காரு. அதுவும் ரெண்டாம்தாரமா!! நாம ஏண்டா காதலிக்கக்கூடாது?’ மாதிரி கேள்விகளையெல்லாம் கேட்டு அவனோட சூடான பதில்கள்ல குளிர்காய்வாங்க.
சரி, இவங்களுக்குள்ள பொதுவான விஷயம் என்ன?
பொதுவான விஷயம் என்னன்னா, மூனு பேரும் இந்தியாவோட முன்னனி ஐடி நிறுவனங்கள்ல வேலை செய்யறாங்க.
மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பை மூச்சுக் காத்தா சுவாசிச்சுக்கிட்டு இருந்த முதலாம் செந்தில் படிப்பை முடிக்கறதுக்கு முன்னாடியே காம்பஸ் இண்ட்டர்வியூல வேலை கெடைச்சு, முன்னனி ஐடி நிறுவனத்துல சேர்ந்தான். சேர்ந்து ஒரு வருஷம் வரைக்கும் சம்பளம் வந்துதே தவிர எதுக்கு சம்பளம் தர்றாங்கன்னு அவனுக்கு புரியவேயில்லை. அவன் படிச்ச படிப்பையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறக்க ஆரம்பிச்சிருந்தப்போ, ஒருநாள் திடீர்னு, ‘உங்களுக்கு டாக்குமெண்டேஷன் வருமா?’-ன்னு கேட்டாங்க. அன்னில இருந்து அவன் டாக்குமெண்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆய்ட்டான். இன்னிக்கு அவனுக்குக் கீழ பல புதிய என்ஜினியர்கள் வேலை செய்யறாங்க. சாஃப்வேர் ப்ராஜெக்ட்களுக்கு டாக்குமெண்ட் தயாரிக்கற வேலைல. CMM லெவெல் 5 சர்ட்டிஃபிகேட் வாங்கறதுக்கு என்னென்ன டாக்குமெண்ட்டுகள் தேவை-ங்கறதெல்லாம் இப்போ அவன் விரல் நுனில இருக்கு. அவன் படிச்ச அவனோட லட்சியப் படிப்பையெல்லாம் மறந்துட்டு, அவன் வேலை பார்க்கற தளத்துல AC சரியா இல்லைன்னா உடனே அட்மினுக்கு ஃபோன் போட்டு ‘AC வேலை செய்யல, ஒரு என்ஜினியரை அனுப்புங்க ப்ளீஸ்?’ என்கிறான். அவனும் ‘ஏர் கண்டிஷனிங் ரெஃப்ரிஜ்ரேஷன்’-லாம் படிச்ச என்ஜினியர்-ங்கறது அவனுக்கே மறந்து போய்டுச்சு.
‘சூரிய சக்தி, ‘எல் ஈ டி’, ‘ஓ எல் ஈ டி’, ஃபைபர் ஆப்டிக்ஸ், இதெல்லாம்தாண்டா எதிர்காலத்துல உலகையே ஆளப்போகுது’ எதிர்காலத்தின் உயிர் நாடியை தன்னோட உள்ளங்கைகள்ல உணர்ந்த இரண்டாவது செந்திலும் ஐடி நிறுவனத்துலதான் வேலைக்கு சேர்ந்தான். வேலைக்கு சேர்ந்த புதுசுல, அவன் நிறுவனத்துல ‘ரெண்டு மெயின்ஃப்ரேம் ப்ராஜெக்ட் வருது’, ‘மெயின்ஃப்ரேம் படிங்களேன்’ என்றார்கள். அவனும் படித்தான், ஆறு மாதங்கள் காத்திருந்தபின் ‘பவர் பில்டர்’ படிக்கச் சொன்னார்கள். படித்தான். சில மாதங்களுக்குப் பிறகு வீ பீ படித்தான். அப்படியே காம் ப்ளஸ் படித்தான், அப்புறம் ஜாவா படித்தான், பின்னர் ஜெயெஸ்பி படித்தான். இப்பொழுது டாட் நெட் 1.1 படித்துக்கொண்டிருக்கிறான். டாட் நெட் 5.0 ரிலீஸாகியிருப்பது அவனுக்கு இன்னும் தெரியாது. எதிர்காலத்தைப் பற்றிய அவனோட சிந்தனைகள் கனவுகள்லாம் அவனோட நிறுவனத்துக்குத் தேவைப்படாததால அதெல்லாம் இப்போ நீரூற்றப்படாத செடிகளா வாடிப்போயிருக்கு.
ஆன்மீகப் பாதையைப் பற்றி அதிகம் சிந்திச்சுக்கிட்டு, மத்தவங்களுக்கெல்லாம் அறிவுரை செஞ்சுகிட்டு இருந்த மூன்றாவது செந்தில் இப்பவும் நிறைய பேருக்கு அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருக்கிறான். ‘வாழ்க்கைல முன்னேறனும்னா, டெக்னாலஜி மட்டும் கத்துக்கிட்டாப் போதாது. டொமைன் நாளேஜ்ஜும் வேணும். மொதல்ல அதை கத்துக்க பாருங்க. டெக்னாலஜி இன்னிக்கு வரும், நாளைக்கு மாறிடும். ஆனா டொமைன் நாளெஜ் அதுமாதிரி இல்லை. எப்பவுமே ஒன்னுதான். டெக்னாலஜி பலப்பல அவதாரங்கள் எடுக்கும். ஆனா டொமைன் நாளேஜ் எங்கே போனாலும் ஒன்னுதான். மாறிக்கிட்டே இருக்குற டெக்னாலஜிய கத்துக்கறதுல உங்க டைம வேஸ்ட் பண்ணாம டொமைன் நாளேஜ்ஜ கத்துக்கறதுல செலவழிங்க’.
‘என்னடா இன்னிக்கு ப்ரதோஷமாச்சே! கோவிலுக்குப் போகல?’-ன்னு கேட்டா, ‘ஓ இன்னிக்குப் ப்ரதோஷமா?, அதையெல்லாம் மறந்து ரொம்ப வருஷம் ஆகுதுடா. கோவிலுக்குப் போறதுக்கெல்லாம் ஏதுடா டைம். ஆபீஸ்க்கு வந்துட்டுப் போறதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது’ அப்டீங்கறான்.
ரொம்ப நல்லா இருக்கு!
என்னோட பள்ளி பருவங்களிலும் கூட நான் செந்தில்கள் கூடத்தான் கற்று வந்திருக்கிறேன் ஒவ்வொரு ஆண்டும் ஒரு செந்தில் கண்டிப்பாக உண்டு
)
யோசிச்சுபார்த்தா எவ்ளோ செந்தில்கள் …..!!!???
மூனு செந்தில்கள் வாழ்க்கையையும் ஐடி நிறுவனம் ரொம்ப மாத்தியிருக்கு. அவர்களோட கனவுகளை மறைச்சுட்டு கை நிறைய பணத்தை மட்டும் கொடுத்திருக்கு-ங்கற ஆதங்கம்தான் இந்தப் பதிவு/சிறுகதை முயற்சி.
மெக்கானிக்கல் துறையிலும், ஏர்கண்டிஷன் துறையிலும் மிகுந்த ஆர்வம் உள்ள ஒரு செந்திலோட வாழ்க்கையை கை நிறைய பணமும், வெறும் டாக்குமெண்ட்டுகளும் நிறைத்திருக்கின்றன.
“சூரிய சக்தி, ‘எல் ஈ டி’, ‘ஓ எல் ஈ டி’, ஃபைபர் ஆப்டிக்ஸ், இதெல்லாம்தாண்டா எதிர்காலத்துல உலகையே ஆளப்போகுது”-ன்னு உலகத்தோட எதிர்காலத்தை தன் உள்ளங்கையில் உணர்ந்த இரண்டாவது செந்திலின் கைகளிலும் இன்று பணம் மட்டும் நிறைந்திருக்கிறது. மழுங்கிப் போன வாளாக எதிர்காலத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாதவனாக மாற்றியிருக்கிறது அவன் பணிபுரிகின்ற ஐடி நிறுவனம்.
மழுங்கிப் போவதற்கு முதல் காரணம் “சோம்பேறித்தனம்”, அப்புறம் “செட்டிலாகிடற” மனப்பான்மை, குடும்ப பாரம், பணத்தைத் துரத்துவதில் உள்ள ஈடுபாடு, இப்படி எத்தனையோ சொல்லலாம்.
ஏன், ஐ.டி நிறுவன வேலையைத் தூக்கியெறிந்து விட்டு, பயிர் [http://payir.org] என்கிற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி சேவை செய்து வருவதும் ஒரு செந்தில் தானே?
Sarav,
In my opinion IT firms didn’t change the lives of Senthils, they themselves changed their own lives. They had so many choices such as not attending IT interviews, not to sign the dotted line, choose the firm which assist to accomplish their ambition. But it was their own decision to join the IT firms. They may have their own reasons for their decision, but eventually they are responsible for their decision to join the IT firms and diverting from their dreams.
// மூனு செந்தில்கள் வாழ்க்கையையும் ஐடி நிறுவனம் ரொம்ப மாத்தியிருக்கு. அவர்களோட கனவுகளை மறைச்சுட்டு கை நிறைய பணத்தை மட்டும் கொடுத்திருக்கு-ங்கற ஆதங்கம்தான் இந்தப் பதிவு/சிறுகதை முயற்சி. //
I didn’t understand how you claim that the IT firms changed/suppressed their dreams? Did they hired to fulfill their dreams? or Did they hired to do the companies work? Before joining the IT firm Senthils know that they are going to work in IT and not in their aspiring areas like mechanical, electrical & religious. Also everyone knows that all companies(IT or whatever industries) work with motto to generate revenue & profits and their employees have to work to achieve that goal and they are paid to do this job. IT firms hired Senthils to do IT job and they are doing their job. So no way to argue that IT firms changed the life of Senthils.
//ஏன், ஐ.டி நிறுவன வேலையைத் தூக்கியெறிந்து விட்டு, பயிர் [http://payir.org] என்கிற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி சேவை செய்து வருவதும் ஒரு செந்தில் தானே?//
I agree with Sathish, if Senthils prefers, still they have the choice to fulfill their dreams. Its upto them to do.
//மழுங்கிப் போன வாளாக எதிர்காலத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாதவனாக மாற்றியிருக்கிறது அவன் பணிபுரிகின்ற ஐடி நிறுவனம்.//
Lets roll their sleeves and do something towards what you claims that IT firms suppressed instead of blaming others for our decision.
Don’t say that they have some reasons for not leaving the IT jobs and to fullfill their dreams. If you choose to say that they have reason for not doing, then say that those reasons are not allowing the Senthils not to fulfil their dreams and blame the reasons not the IT firms.
-Dhana
I like this post..
Hi. very very vidhiyasamaana sindhanai mahaa
it jobs are very much in demand these days because of technology boom~`*