கிருஷ்ணாவின் மனைவி.

கிருஷ்ணாவின் மனைவி, இனிமே ‘கிம’-ன்னு சுறுக்கமா அழைக்கப்படப்போற இவங்க நல்லா தமிழ் பேசுவாங்க. பெப்ஸி உமா மாதிரி அழகான கனீர் குரல். அமேரிக்கால, நியூ யார்க் நகரத்துல வேலை செய்யறாங்க. ‘கிம’ வேலை பாக்கற அலுவலகத்துல அவங்கள ரொம்ப வேலை வாங்கறாங்க. காலைல 9.30 மணிக்கு அலுவலகத்துக்குள்ள போனா, மதியம் சாப்பாட்டு இடைவேளையைத் தவிர, மாலை 5.30 மணி வரைக்கும் வேலை வேலை வேலைதான். வேலை முடிச்சுட்டு வீட்டுக்குப் போனதுக்குப்போனதுக்கு அப்புறமும் அலுவலக வேலைக்காக ‘லாகான்’ பண்ணி சில மணி நேரங்கள் வேலை பார்ப்பாங்க. வழக்கமா 8 மணி நேரம் தூங்கும் ‘கிம’ இப்போல்லாம் அவ்வளவு நேரம் தூங்க முடியறது இல்லை. ரொம்ப நாளைக்கு அப்புறம் நேத்துதான் 7 மணி நேரம் தூங்க முடிஞ்சுது. 8 மணி நேரம் நிம்மதியா தூங்கலன்னா ‘கிம’ க்கு மற்ற வேலைகள் ஒழுங்காவே ஓடாது. ஆனா ‘கி’-க்கு அப்படியில்லை. அவர் நாலு மணி நேரம் அஞ்சு மணி நேரம் தூங்கினாலும் அடுத்த நாள் வேலைக்கு சீக்கிரமா போக முடியுது. ‘கிம’க்கு அது ரொம்ப கஷ்டமா இருக்கு.

‘கிம’ அடுத்த வாரம் இந்தியாவுக்கு போறாங்க. விடுமுறைக்கு. மூனு வாரம். நிம்மதியா ஒரு வேலையும் செய்யாம ரெஸ்ட் எடுத்துட்டு வரணும். திரும்ப வரும்போது அவங்க கம்ப்யூட்டரோட பாஸ்வேர்ட்கூட அவங்களுக்கு ஞாபகம் இல்லாத அளவுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும். ரெண்டு வாரம்தான் அலுவலகத்துல விடுமுறை நாட்கள். ஒரு வாரம் ‘காம்ப் ஆஃப்’. இப்போ கடுமையா வேலை செய்யறதுனால அவங்க மேனேஜர்கிட்ட பேசி ‘காம்ப் ஆஃப்’க்கு பர்மிஷன் வாங்கிட்டாங்க. (‘காம்ப் ஆஃப்’-ன்னா என்னன்னு தெரியலையா, சம்பளத்தோட விடுமுறை. வீட்ல இருந்து அதிக நேரம் வேலை பார்த்ததுனால, மேனேஜர் மகிழ்ந்து சம்பளத்தோட ஒரு வாரம் விடுமுறை கொடுத்திருக்காரு). திரும்ப வந்து எப்டியும் ஒரு வாரமாவது ‘ஜெட் லேக்’, அது இது-ன்னு ஓ பீ அடிச்சுக்கலாம். மொத்தத்துல ஒரு நாலு வாரம் ஃப்ரீயா இருக்கணும்.

இந்தியா வரப்போறதா சொன்னொன்ன, ‘கி’வோட அக்கா ஒரு லிஸ்ட் கொடுத்துட்டாங்க. ஷாப்பிங் பண்றதுக்கு. இந்தியால உபயோகப்படுத்தற மாதிரி மொபைல் போன், ப்ளூ டூத் ஹெட் செட், ட்டாய்ஸ், சாக்லேட் இன்னும் நெறைய. இதையெல்லாம் ‘கிம’ வாங்கப்போறது இல்லை. இந்தியாலயே நல்ல மொபைல் ஃபோன்கள் கெடைக்குது. எதுக்கு இங்கேயிருந்து வாங்கிகிட்டு போகணும்? ‘கி’வுக்கும் வாங்கிட்டுப் போறதுல இஷ்டம் இல்லை. சும்மா சாக்லேட் மட்டும்தான் வாங்கிட்டு போறாங்க.

ஆமா, ‘கிம’ பத்தி இவ்ளோ தூரம் சொல்றியே, அவங்களோட பேரென்ன, உனக்கும் அவங்களுக்கும் என்ன உறவு-ன்னு கேக்கறீங்க?

அலுவலகத்துக்கு போகும்போது ரயில்ல நான் உக்காந்திருந்த இருக்கைக்கு நாலு இருக்கைகள் பின்னாடி நின்னுகிட்டு அவங்களோட நண்பர்கிட்ட பேசிகிட்டு இருந்தவங்கதான் இந்த ‘கிம’. ரயில்ல யாரோ அவங்க நண்பர்கிட்ட பேசிகிட்டு வர்ற ஒருத்தர்கிட்ட, அவங்களோட பேர, நான் எப்டி கேக்க முடியும்? அது அவ்ளோ நாகரீகமா இருக்காதுல்ல??!!