கோல சாஸ்த்திரம்

இன்னிக்கு தம்பி வீட்டுக்கு வந்திருந்தேன். அவங்க வீட்ல இருந்த மாதாந்திர நாட்குறிப்பை பாத்துகிட்டு இருந்தேன். கோயம்புத்தூர் பீளமேட்ல இருக்குற ஒரு சூப்பர் காஸ்ட்டிங் கம்பெனில இருந்து யாருக்கோ கொடுக்கப்பட்டு அது பல கைகளுக்கு அன்பளிப்பா போயி கடைசியா என் தம்பிட்ட வந்திருக்கணும். “மெஷின் மோல்டு சீ.ஐ ரஃப் காஸ்ட்டிங் கம்பெனிக்கும்” தினசரி வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்-னு எனக்கு தெரியல.
அந்தக் காலண்டர்ல கண்ணைக் கவர்ந்த விஷயம் ஆகஸ்ட் 15-ம் நாள், சுதந்திர தினம், ஒரு முகூர்த்த நாள்-ன்னு போட்டிருந்தது. ஆகஸ்ட் 15 அன்னிக்கு கல்யாணம் பண்ணிக்கற எத்தனை பேருக்கு அது ஒரு சுதந்திரம் கிடைக்கற நாளா இருக்கும். எத்தனை பேருக்கு சுதந்திரம் பறிபோற நாளா இருக்கும்-னெல்லாம் யோசிச்சுகிட்டு இருந்தேன்.

ஒரு ஜோக் கேள்விப்பட்டிருப்பீங்க. ஜன்னல் ஓரமா நின்னு எதையோ தீவிரமா யோசிச்சுகிட்டு இருந்த கணவன்கிட்ட மனைவி, ‘என்ன பலமான யோசனை?’-ன்னு கேக்கறா. அதுக்கு அவன், ’20 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்லதான் உங்க அப்பா என்கிட்ட, ‘என் மகளைக் கல்யாணம் பண்ணிக்கிறியா இல்ல எதாவது ஒரு கேஸப் போட்டு 20 வருஷம் உள்ளத் தள்ளிடவா’-ன்னு கேட்டாரு. அன்னைக்கு சரியாம முடிவை எடுத்திருந்தேன்னா, இன்னிக்கு எனக்கு விடுதலை கிடைச்சிருக்கும்!!’-ன்னு சொல்ற மாதிரி இருக்கும் அந்த ஜோக்.

கணவன் மனைவி சுதந்திரத்தப் பத்தி யோசிக்கறத விட்டுட்டு காலண்டரை இன்னும் ஆராய்ஞ்சப்போ, கோல சாஸ்த்திரம்-ன்னு போட்டு என்னவோ அச்சிட்டுருந்தாங்க. எதாவது பூகோல சாஸ்த்திரமா-ன்னு உத்துப் பார்த்தப்போ வீட்டு வாசல்கள்ல போடற கோலத்துக்கான சாஸ்திரம். ‘இந்த ஜெனரேஷன் மக்களுக்கு கோலம்-ன்னா என்ன-ன்னு தெரியறதே கஷ்டம். இதுல அதுக்கு சாஸ்த்திரம் வேறயா’-ன்னு நெனைச்சுகிட்டு படிச்சேன்.

“சூரியன் உதிப்பதற்கு முன் வாசல் பெருக்க வேண்டும். சானம் இல்லாமல் வெறும் தண்ணீர் வைத்து பெருக்கக்கூடாது. அன்று எடுத்த புதிய தண்ணீராக இருக்க வேண்டும். ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும். போடுகிற கோடு தெற்குப் பக்கமாக முடியக்கூடாது. கோலம் அழகாகவும் கவர்ச்சியாகவும் அமைவது நல்ல சகுணமாகும். வீட்டை நெருங்க மூதேவி அஞ்சுவாள். இரட்டை இழை கோலங்கள்தான் போடவேண்டும். அசுபக் காரியங்களுக்குத்தான் ஒன்று அல்லது மூன்று இழைக் கோலங்கள் போடலாம். அரிசி மாவில் தான் கோலம் போட வேண்டும். அதை வந்து தின்னும் காக்கை மற்றும் எறும்புகள் முதலியன நமக்கு அரிசி நன்றாக விளைய வேண்டும் என ஆண்டவனிடம் சிபாரிசு செய்யும் என்பது ஐதீகம். வேலை ஆட்களைக்கொண்டு கோலம் போடக்கூடாது. தவச நாட்களில் கோலம் போடக்கூடாது. அன்று மாலையில் கோலம் போடலாம்.”

அடுத்தத் தலைமுறை ஆளுங்ககிட்ட இதைச் சொன்னா என்ன ஆகும். என்னென்ன கேள்விகள் கேப்பாங்க?
சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடி-ன்னா, You mean mid night?.
சானம் எந்தக் கடைல கெடைக்கும்?
ஆமா, Which side is South?
வீட்ல சமயல்-ல இருந்து துணி துவைக்கறது வரைக்கும் வேலையாள் செய்றாங்க. Why not this Kolam thing?
தவச நாள் ஒரு மாசத்துக்கு எத்தனை தடவை வரும்? Twice a month??
இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ!! அவங்களுக்கு பதில் சொல்றதுக்குள்ள ‘வேண்டாம்பா, கோல சாஸ்த்திரம் ஒன்னு இல்லை. அதைப் பத்தி நான் உன் கிட்ட சொல்லவும் இல்ல’-ன்னு எஸ்கேப் ஆக வேண்டியிருக்கும்!!

எனக்கு தெரிஞ்சு வீட்டு வாசல்ல கோலம் போடறவங்க ரொம்ப கம்மிதான். கைவிட்டு எண்ணிடலாம்!!
Anyway!! ஆபீஸ்க்கு லேட்டாய்டுச்சு. மீண்டும் சந்திப்போம்!!