அக்கரைக் கருப்பு.

மொதல் மொதலா H1B விசால அமெரிக்கா போனப்போ, அமெரிக்கா எந்தத் திசைல இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது. வட அமெரிக்கா தென் அமெரிக்கா கண்டங்கள்னு எப்போவோ படிச்சிருக்கேனே தவிர, அதெல்லாம் மேப்ல எங்க இருக்குன்னு தெரியாது. அங்க மக்கள் எப்டி இருப்பாங்க, எப்டி பழகுவாங்க, எப்டி பேசுவாங்க, என்னென்ன மொழிகள் பேசறவங்கல்லாம் அமெரிக்கால இருக்காங்க, என்ன சாப்டுவாங்க எதுவும் தெரியாது. சாம்பிளுக்குக்கூட ஒரு பீஸ்ஸா சாப்டது கிடையாது. சபரிமலை சாஸ்தாவைத் தெரியுமே தவிர, பாஸ்த்தா-ன்னு ஒன்னைக் கேள்விப்பட்டது கூட கிடையாது.

எல்லா சாஃப்ட்வேர் மக்களுக்கும் அமெரிக்கா கனவு, அதே கனவு எனக்கும். க்ரூப் ஸ்டடி மாதிரி க்ரூப் கனவு. என் கூட வேலை பார்த்த நண்பர்களுக்குள்ள ஒரு போட்டி, யார் மொதல்ல அமெரிக்கா போறதுன்னு. அப்டி போட்டிபோட்டுதான் மொதல்ல அமெரிக்கா போனேன். ஸான் ஃப்ரான்ஸிஸ்கோ வந்து இறங்கி, இம்மிகிரேஷன்ல அவங்க என்னவோ கேட்க, நான் என்னவோ சொல்ல, போய்த்தொலைன்னு உள்ளே அனுப்பிட்டாங்க. யாரோ என்னைக் கொரியர்ல அனுப்பின மாதிரியும் அதை ஒருத்தர் வந்து பிக்கப் பண்ணிட்டு போற மாதிரியும்தான் இருந்துச்சு, என்னோட அந்த முதல் பயணம். ஒரு எக்ஸைட்மெட்டோ, சந்தோஷமான ஃபீலிங்கோ இல்லாத ஒரு காம்ப்ளிகேட்டட் ஃபீலிங். கொஞ்சம் சோகம், நிறைய பயம்.

அப்டியே கலிஃபோர்னியால ரெண்டு வாரம் ஓட்டிட்டு முதல் ப்ராஜெக்ட்டுக்காக கொலராடோ ஸ்ப்ரிங்ஸ்-ங்கற ஊருக்கு போனேன். மக்கள் கூட்டம் அதிகமா இல்லாத ஊர்(1997ல). சுத்தியும் நிறைய மலைகள். குளுமையான சூழல். அகலமான சாலைகள். வசதியான பெரிய வீடுகள். தெலுங்கு பேசற ஒரு தமிழ்க் குடும்பம், மலையாளி ஒருத்தர், சைவப் பிள்ளை ஒருத்தர், அசைவ அய்யர் ஒருத்தர்-ன்னு சில நண்பர்கள் கெடைச்சாங்க. இந்தியால இருந்த வரைக்கும் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலை செஞ்ச எனக்கு 9-5 கலாச்சாரம் புதுசா இருந்துச்சு. 9 மணிக்கு அலுவலகம் போனா, 4.30 மணிக்கு எல்லொருமே கெளம்பிடுவாங்க. ஒரு நாள்ல முடியற சின்ன வேலையைக்கூட, ‘ஒரு வாரத்துக்குள்ள முடிஞ்சிடுமா?’-ன்னு கேட்கற முதல் அமெரிக்க மேனேஜர். இப்டி கொஞ்சம் கொஞ்சமா அமெரிக்க வாழ்க்கை பழக ஆரம்பிச்சுது. பிடிக்க ஆரம்பிச்சுது. ப்ளாக் ஆலீவ்களை மட்டும் எடுத்து போட்டுட்டு பீஸ்ஸாக்களை விருப்ப ஆரம்பிச்சேன். சிக்கன் பர்கர்களும், ஃப்ரைஸ்களும் பெப்ஸிகளோடு இணைந்து சுவைக்க ஆரம்பித்தன.

(இப்போ ஒரு பாட்டு.. ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ பாட்டு மாதிரி.. பாட்டு ஓடும்போது பேக்ரௌண்ட்ல…)
தனியா வாடகைக்கு ஒரு சொகுசு வீடு பிடிக்கறேன்.
கார் ஓட்ட லைசன்ஸ் வாங்கறேன்.
புதுசா ‘ஹோண்டா’ கார் வாங்கறேன்.
ஸ்னோ பொழியுது. புது காரை ஸ்னோல ஓட்றேன்.
பல ஃபோட்டோக்களை எடுத்து ஊருக்கு அனுப்பறேன்.
நண்பர்களோட ஊர் சுத்தறேன்.
‘பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ்’ ‘ஸ்பைஸ் கேர்ல்ஸ்’ சீடி-க்கள் வாங்கறேன்.
‘I’ll do anything for you.. anything you want me to..’
‘I don’t care who you are.. what you do.. as long as you love me!!’
மாதிரி பாடல்களை பாத்ரூமில் பாடறேன்.
வார நாட்கள்ல மாலை முழுதும் விளையாட்டு-னு ஷட்டில், ராக்கெட் பால்-லாம் விளையாடறேன்.
வெள்ளி சனி-ல இரவுகள்லாம் முடிஞ்சு விடியற வரைக்கும் பல ஆட்டங்கள் ஆடறேன்.
ஆங்கிலப் படங்கள்ல வர்ற காமெடிகளுக்கு அரங்கம் அதிர சிரிக்கறேன். (எங்களுக்கும் புரியுமுல்ல!!)
சுற்றுலா வந்து வழிதெரியாம அலையற வெள்ளைக்காரங்களுக்கும் நான் வழி காட்டறேன்.

இந்தக் காட்சிகள்லாம் மாறி மாறி வருது..
(பாட்டு முடியுது.)

பாடல் முடிஞ்சு ஸ்டைலா காரை பார்க் பண்ணிட்டு அலுவலகத்துக்குள்ள போனா ஒரு அதிர்ச்சிச் செய்தி. அன்னியோட ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சு. அதாவது அந்த வேலை காலி.

கொஞ்சம் அல்லாடினப்புறம் அடுத்த வேலை கிடைச்சுது. அதுக்காக நியூ ஜெர்ஸி மாகானத்துக்கு போகணும்-னு சொன்ன உடனேயே நண்பர்கள் என் வயித்துல புளிய கரைக்க ஆரம்பிச்சாங்க.

‘நியூ ஜெர்ஸி-நியூ யார்க்-லல்லாம் கருப்பர்கள் ரொம்ப அதிகமா இருப்பாங்க. வெளில தனியா மாட்டிக்கிட்டீன்னா அவ்ளோதான். இருக்கறதையெல்லாம் உருவிகிட்டு விட்டுடுவாங்க. ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குள்ள போய்டணும். நைட்லல்லாம் இங்க சுத்தற மாதிரி சுத்த முடியாது. டாக்ஸிலல்லாம் தனியா மாட்டின, எங்கேயாவது கடத்திட்டு போய்டுவானுங்க’
‘இப்டிதான் என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு ஒருத்தன் நைட்டு 10 மணிக்கு அவங்க கிட்ட மாட்டிகிட்டான். அவன் கைல காசு இல்லாததுனால அவன அடிச்சு ATM-ல இருந்து காசு எடுத்து தர சொல்லியிருக்காங்க. ஒரு நாளைக்கு 300 டாலர்தான் லிமிட்-ங்கறதுனால 10 மணிக்கு 300 டாலர் எடுத்துட்டு நைட் 12 மணி வரைக்கும் அவனை பிடிச்சு வெச்சிருந்து 12 மணி ஆனப்புறம் இன்னொரு 300 டாலர் எடுக்க சொல்லி வாங்கிகிட்டு அடிச்சு வெரட்டீட்டாங்களாம்’
இப்டியெல்லாம் நண்பர்கள்(பாவிங்க, நண்பர்களா அவங்க!!) சொல்லச் சொல்ல எனக்கு அப்போவே வயிறு கலக்க ஆரம்பிச்சிடுச்சு.

நியூ ஜெர்சி விமான நிலையத்துல வந்து இறங்கி பேந்தப் பேந்த முழிச்சுகிட்டு டாக்ஸி ஸ்டாண்டு போனேன். ‘எடிசன்-ங்கற பாழாப்போன ஊர்ல போயி கெஸ்ட் ஹவுஸ் கட்டி வெச்சிருக்கானுங்க. விமான நிலையத்துல இருந்து நடந்து போற தூரத்துல இருக்கக்கூடாதா!! முருகா, சஷ்டியை நோக்க சரவண பவனா, சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலா, என்ன எப்டியாவது கெஸ்ட் ஹவுஸ்ல கொண்டு சேர்த்துடு’-ன்னு வேண்டிகிட்டே டாக்ஸிக்காக லைன்ல நின்னேன். லைன்ல முன்னாடி நின்னவங்க ஏறிப்போற ஒவ்வொரு டாக்ஸிலயும் கருப்பு ட்ரைவரா இல்லையான்னு பாத்துகிட்டே நின்னேன். கருப்பு ட்ரைவரா இருந்தா ஒரு நிம்மதி. அப்பாடா இந்த டாக்ஸி எனக்கில்ல-ன்னு. எனக்கு முன்னாடி நின்ன ஆட்களோட எண்ணிக்கை கொறையக் கொறைய படபடப்பு அதிகமாச்சு. வியர்த்து வழியுது. அடுத்ததா என்னை ஏத்திக்கிட்டு போகப்போற டாக்ஸி வந்து நிக்குது. கண்களை நல்லா மூடிக்கிட்டு, ‘கருப்பு ஆளா இருக்ககூடாது, முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா’-ன்னு கண்ணைத் திறந்தேன். என்னை முறைச்சு பார்த்து ஒரு கருப்பர், ‘ஹௌவ் யூ டூயுன்’ என்றார்.

அது முடிஞ்சு கிட்டத்தட்ட 10 வருஷம் ஆய்டுச்சு. சமீபத்துல அலுவலக வேலையா திரும்பவும் நியூ ஜெர்சி போயிருந்தேன். கருப்பர்கள் அதிகமா இருக்கற பகுதில தங்கறதுக்கு இடம் பார்த்திருந்தேன். ‘ஜர்னல் ஸ்கொயர்’ ரயில் நிலையத்துல இருந்து நடந்து போனா 30 நிமிஷ தூரத்துல இருந்துச்சு அந்த வீடு. பஸ்ல போனா 5 நிமிஷம் ஆகும். போற வழில ‘பட்டேல் ஸ்ட்ரீட்’-ங்கற இந்தியப் பொருட்கள் கிடைக்கற தெரு இருக்கு. இந்தியர்கள் வெச்சிருக்கற மளிகைக் கடைகள், ஹோட்டல்கள், நகைக் கடைகள், துணிக்கடைகள், சிம் கார்டு கடைகள், பீடாக் கடைகள்-ன்னு எல்லாமே இந்திய மயமா இருக்கற தெரு அது. கூட்டமும் அதிகமா இருக்கும். கட்டிடங்களோட வெளிப்புறத் தோற்றத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாததால கொஞ்சம் பழைய கட்டிடங்களாத்தான் தோற்றமளிக்கும். பான்பராக் எச்சில்களைப் பற்றியும், தேங்கி நிற்கும் தண்ணீரைப்(மழை நீர் இல்லை) பற்றியும் யாரும் அதிகம் அலட்டிக்கொள்ளாத தெரு.
ஒருநாள் வீட்ல இருந்து காலைல கிளம்பி அலுவலகம் போறதுக்காக ரயில் நிலையத்துக்கு போற பஸ்ல ஏறினேன். கூட்டம் அதிகமா இல்ல. மெக்ஸிகன் ஓட்டுனருக்குப் பின்னாடி இரண்டு பாட்டிகள், ஐ-பாடு-க்கு காதுகளைக்கொடுத்த ஒருத்தர், அப்புறம் எனக்கு முன் சீட்ல ஒரு கருப்பர் குடும்பம் உக்காந்திருந்தாங்க. ஒரு அப்பா, அவரோட ரெண்டு பசங்க. அப்பா பேப்பர் படிச்சிட்டு இருந்தாரு. பசங்க லூட்டி அடிச்சுட்டு இருந்தாங்க. பஸ் போற வழில இருந்த கடைகளையெல்லாம் பார்த்து ஜாலியா பேசிட்டே வந்தாங்க. பார்க்-கைப் பார்த்து ‘அப்பா, நாளைக்கு இங்க வரலாம்ப்பா’-ன்னாங்க. ‘ஆகட்டும்’-ங்கற மாதிரி அப்பா தலையை ஆட்டிட்டே பேப்பரை தொடர்ந்தாரு. பஸ் பட்டேல் தெருகிட்ட வந்தப்போ ரெண்டு பேரும் சில நொடிகள் கப்சிப்.
அப்புறம் பெரியவன் சொன்னான். ‘நான் ஒரு காலத்துலயும் இந்தப் பக்கமே போக மாட்டேன்ப்பா’
‘ஏன்?’ சின்னவன் கேட்டான்.
‘இது இந்தியர்கள் இருக்கற தெரு. ரொம்ப டேஞ்சரஸ்ஸான தெரு’
எனக்கு அதிர்ச்சி. அடப்பாவிகளா, யார்ற உங்களுக்கு அப்டி சொன்னா?ன்னு நெனைச்சுகிட்டு மேலும் கவனிச்சேன்.
‘இந்தத் தெருவுக்குள்ள நாம யாரும் ஈசியா போய்ட்டு வந்துட முடியாது. ரொம்ப பயமா இருக்கும்’ என்றவன், அந்தப் பக்கம் எட்டிப்பார்த்த சின்னவனோட முகத்தை திருப்பினான். ‘அந்தப் பக்கம் பாக்காத, திரும்பிக்கோ!!’ என்றான்.
அப்போதான் தோனிச்சு, இக்கரைக்கு அக்கரை கருப்புதானோ-ன்னு!!