காதல் கொசுக்கள்.

என் காருக்குள்ள ஒரு ஜோடி காதல் கொசுக்கள் இருந்துச்சு. ரொம்ப அன்யோன்யமான கொசுக்கள். அன்றில் பறவைகள் போல ஒன்ன விட்டு ஒன்னு பிரியவே பிரியாத கொசுக்கள். சேர்ந்தேதான் பறக்கும் சேர்ந்தேதான் உக்காரும், சேர்ந்தேதான் கடிக்கும், சேர்ந்தே எஸ்கேப் ஆய்டும். கார்ல காதல் பாட்டுகள் போட்டுட்டா சேர்ந்து கூடவே பாடிக்கிட்டு சுத்திச் சுத்தி பறந்து வரும். ‘கண்கள் இரண்டால்’ பாட்டு போட்டா டபுள் குஷியாய்டும்.

தீபாவளிக்காக சென்னைல ஊருக்குப் போக நாங்க எல்லோரும் தயாரானப்போ அதுங்களும் தயாராய்டுச்சு. சிட்டி இரத்தமா குடிச்சு குடிச்சு போறடிச்சதால கிராமத்து சரக்கு குடிக்க ஆசை வந்துடுச்சு போல. என் கார்லயே ஓசில வந்து ஹனிமூன் கொண்டாடலாம்-னு கெளம்பிடுச்சு.

அவனவன் தீபாவளிக்கு ஊருக்குப் போறதுக்கு மூனு மாசம் முன்னாடி ரயில் டிக்கெட் ரிசர்வ் பண்ண முயற்சி செஞ்சு, முடியாம தவிக்கறான். மூனு மணிநேரம், நாலு மணி நேரம்-னு லைன்ல நின்னு பத்து நிமிஷத்துல அத்தனை டிக்கெட்டுகளும் வித்துடுச்சு-ன்னு பதர்றான். ஆம்னி பஸ்கள்ல மூனு பங்கு வெல குடுத்து டிக்கெட் வாங்கறான். இல்லன்னா இருவது கிலோ மீட்டர்கூட தொடர்ச்சியா ஓடமுடியாத ஒரு ‘சிறப்பு’ கவர்மெண்ட் பஸ்ல ஏறி மூச்சு விடக்கூட முடியாம ஒத்தக் கால்ல நின்னுகிட்டு பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்யறான். இந்த ரெண்டு கொசுக்களும் என்னோட சேர்ந்து சொகுசா ஊருக்கு வர கெளம்பிடுச்சு. விடுவேனா?

பெண் கொசுவைப் பிடிச்சேன்.(எப்டி பெண் கொசுவை அடையாளம் கண்டுபிடிச்சேன்னு கேக்காதீங்க). என் தம்பியோட கார்ல போட்டு கதவை சாத்திட்டேன். ஆண் கொசுவை மட்டும் என் கார்லயே கூட்டிக்கிட்டு ஊருக்கு கெளம்பிட்டேன்.

அன்றில் கொசுக்கள் ரெண்டுக்கும் கோவம் வந்துச்சு. ‘நீ ஊருக்குப் போய் சேரறதுக்கு ஆகற 8 மணி நேரத்துக்கு நான் யார் மேலயும், எது மேலயும் உக்காரம, உக்காரா நோன்பு இருப்பேன்’னு சபதம் போட்டுச்சு, பெண் கொசு. என் கூடவே வந்த ஆண் கொசுக்கும் பயங்கற கோவம். நானும் எங்கேயும் உக்காறாம பறந்துகிட்டேதான் இருப்பேன்னு சபதம் போட்டுச்சு.

வழில பெட்ரோல் போட காரை நிறுத்தினேன். சாப்டறதுக்காக நிறுத்தினேன். இயற்கையின் அழைப்புகளுக்காக நிறுத்தினேன். அப்பல்லாமும் கூட அசராம பறந்துகிட்டே இருந்துச்சு ஆண் கொசு.

270 கிலோமீட்டர் பயணம் செஞ்சு ஊர் போயி சேர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி, வேதாளம் விக்ரமாதித்தன கேக்கற மாதிரி சில கேள்விகள் கேட்டுச்சு. இதுக்கு பதில் சொல்லலன்னா உன் தலை சுக்குநூறா வெடிச்சுப் போகக் கடவது-ன்னு சொல்லிட்டு கேள்விகளை கேட்க ஆரம்பிச்சுது.

1. ‘நான் உன் கூடவே உன் கார்லயே வந்திருந்தாலும் உன் கார்ல ஒரு வினாடி கூட உக்காறல’. ‘நான் உக்காந்திருந்தா உன் காரோட எடை ஒரு கிராம் ஏறியிருக்கலாம். நான் உக்காறவே இல்ல, உன் காரோட எடை என்னால கூடல. அப்புறம் எப்டி நீ உன் கார்ல என்னை கூட்டிட்டு வந்ததா ஆகும்?’

2. ‘எட்டு மணி நேரத்துக்கும் அதிகமா நானும் என் கேர்ள் ஃப்ரெண்டும் பறந்துகிட்டே இருந்தாலும், நான் என் கேர்ள் ஃப்ரெண்டை விட்டு எவ்வளவோ தூரம் தள்ளி வந்துட்டேன். அவ அங்கேயே பறந்துகிட்டு இருக்கா. நான் நீ செஞ்ச சதியால இத்தனை தூரம் தள்ளி வந்துட்டேன். இந்த எட்டு மணி நேரத்துல யார் அதிக எனர்ஜிய செலவு பண்ணி சீக்கிரம் டயர்டா ஆகியிருப்பா, நானா இல்லை என் கேர்ள் ஃப்ரெண்டா?’

3. ‘நீ செஞ்ச, நீ செஞ்ச’, குரல் கொஞ்சம் விம்மியது. ‘நீ செஞ்ச இந்த அநியாயத்துனால..’ இன்னும் கொஞ்சம் விம்மல். ‘நீ செஞ்ச பாவத்துக்கு.!!.’

டப்.

‘பாருங்கங்க, நானும் பார்த்துகிட்டே இருக்கேன், இந்தக் கொசு நாம கெளம்புனதுல இருந்து இங்கேயே சுத்திச் சுத்தி வந்து இர்ரிட்டேட் பண்ணிக்கிட்டே இருக்கு!!’ என்று அவள் விகடனைக் காட்டினாள் என் மனைவி. அட்டைப் பட அழகியின் முகத்தில் இரத்தப் பொட்டுபோல் ஒட்டிக்கொண்டிருந்தது அந்த ஆண் கொசு.