திரை விமர்சனம்.

எழுத ஆரம்பிச்ச பல பதிவுகள் பாதில அப்டி அப்டியே நிக்குது. ஆழி பதிப்பகத்துல அறிவிச்ச சிறுகதைப் போட்டியினால போன மாசம் ஓடிடுச்சு. ஒருவழியா கடைசி நாள்ல ஒரு கதை அனுப்பினேன். அப்புறம் சுஜாதா சாரோட ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ புத்தகம் படிக்க ஆரம்பிச்சதுனால இந்த மாசம் ஓடுது. புத்தகம் பத்தி அப்புறம் சொல்றேன். இப்போதைக்கு ஒவ்வொரு பதிவா நிறைவு செய்யறேன். மொதல்ல தி.வி.

ஒரு ஊர்ல ஒரு அப்பா. அவருக்கு ஒரு பிள்ளை. அந்தக் பிள்ளைக்கு எதுவும் ஆய்டாம நல்லபடியா வளர்க்கணும்-னு ஆசைப்படறாரு. அந்தப் பிள்ளையை சீக்கிரமே பள்ளிக்கூடத்துல சேர்க்கறதுல அவருக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் பிள்ளை விரும்புதேன்னு சேர்த்துவிடறாரு. பிள்ளைக்கு மத்த பசங்க மாதிரி ஜாலியா இருக்கணும்-னு ஆசை. ஆனா பிள்ளைக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு அப்பாக்கு பயம். அந்த பயத்துனால அவர் செய்யற காரியங்கள்னால, பிள்ளைக்கு அவரு மேல கோபம்.

இப்டி பிள்ளையோட வளர்ச்சியை, வாழ்க்கைப் பயணம் அப்பாக்கு உணர்த்தற மாதிரி ஒரு கதை. இது ‘அபியும் நானும்’ படத்தோட கதை-ன்னு ஈசியா சொல்லிடலாம். கொஞ்சம் யோசிச்சா ‘ஃபைண்டிங் நீமோ’(Finding Nemo) கதையும் இதேதான். ஆனா அபியும் நானும் திரைக்கதையோட இன்னும் பலமடங்கு அழுத்தமான, ஆழமான திரைக்கதை ‘ஃபைண்டிங் நீமோ’.

அப்பா மேல எவ்ளோ கோவம் இருந்தாலும் ‘நீமோ’வுக்கு அப்பா மேல இருக்குற பாசம் கொறையவே கொறையாது. அபிக்கு அப்பா மேல பாசம் இருக்குற மாதிரி காட்சிகளே இல்லை! முக்கியமா பின் பாதில இல்லவே இல்லை!! காதலனை ரொம்ப உயர்வா காட்டணும்ங்கறதுக்கு காட்சிகள் இருக்கே தவிர அப்பா மேல அன்பைக் காட்டற காட்சிகள் மிஸ்ஸிங். ‘I know what I’m doing’-னு சொல்ற காட்சிகள்ல கோவம் இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகள்ல கொஞ்சம் சமாதானம் ஆகற மாதிரி காட்டியிருக்கலாமோ. (அண்ணாமலை அப்பாகிட்ட(ரஜினிகிட்ட) எதிர்த்து பேசற அவரோட பொண்ணு, ‘ஒரு பெண் புறா’-ன்னு அவர் பாடி முடிச்சதுக்கப்புறம் வந்து ‘சாரிப்பா’-ன்னு சொல்லி நெகிழ்த்தற காட்சி மாதிரி). அதுமாதிரி சமாதானம் ஆகற பொண்ணுகிட்டதான் பாசம் அதிகமாகும். ப்ளீஸ்-ப்பா-ன்னு அவள் சொல்லிட்டா என்ன வேணும்மாலும் செய்யற அளவுக்கு. எப்பவும் கோவப்படற பொண்ணு மேல, இந்த அளவுக்கு பாசம் இருக்க முடியுமா-னு யோசிக்க வேண்டியிருக்கு.

அபியோட அப்பா சில நேரம் ரொம்ப மெச்சூர்டா இருக்காரு. (கல்லூரில அபிக்கு வந்த காதல் கடிதத்தைப் பற்றி பேசற காட்சிகள்ல) அதே அப்பா, அபி அவளோட வருங்கால கணவனோட நடந்து வரும்போது வழுக்கி விழற காட்சிகள்ல ரொம்ப உணர்ச்சிவசப் படறாரு. அப்போ அப்டி பேசின அப்பாவா இதுன்னு கேள்வி எழுது.

அபியோட அம்மா-ட்ட ஒரு செயற்கைத்தனம் இருக்கற மாதிரி இருக்கு. அபியோட அப்பாகூட பழகறதுலயும், மகள் கூட பழகறதுலயும் ஒரு அன்யோன்யம் இருக்கற மாதிரி உணர்த்தர காட்சிகள் அதிகமா இல்லை. பின் பாதில அபிக்கு தலை சீவி விடற காட்சி மாதிரு ஒரு சில காட்சிகள் தவிர.

பின் பாதில திடீர்னு ஹிந்தி பேசற அபியோட அம்மாக்கு, ஹிந்தி தெரியும்-னு முன் பாதிலயே ஒரு காட்சில சொல்லியிருக்கலாம். அபிக்கு காலேஜ்ல அப்ளிகேஷன் சம்மத்தமாவோ, இல்ல ஹாஸ்டல் வார்டன் கிட்டயோ ஒரு ஃபோன்லயாவது யார் கூடவாவது ஹிந்தில பேசியிருக்கலாம்.

அபியோட காதலன் நல்லவன்னு சொல்லலாம். அதுக்காக இவ்ளோ நல்லவனா காட்டணுமா? இந்தியாலயே மிகச்சிறந்த புத்திசாலி, பிரதமரே ஃபோன் பண்ணி பேசுவாரு, எவ்வளவோ ஆதரவில்லாதவங்களுக்கு ஆதரவு தர்றவரு, அப்பப்பா, ‘இவன் ரொம்ம்ப நல்லவனா.. இருக்காண்டா’-ங்கற உணர்வு வருதே தவிர நடைமுறை வாழ்க்கைல இருக்குற பாத்திரமா பாக்க முடியல.

படத்துல மனசுல பதியற பாத்திரங்கள்ல முக்கியமான பாத்திரம், ‘பிச்சைக்காரன்’ ரவி சாஸ்திரி. ‘என்னோட அம்மா சார்’-னு குட்டி அபியைப் பார்த்து சொல்லும் காட்சிலயும், குடும்பத்தைப்பத்தி பாடல் பாடும் காட்சிலயும் கண்களை நனைச்சுடறாரு. ‘பன்னிங்கதான் கூட்டமா வரும். ‘சிங்’கு சிங்கிளாத்தான் வரும்’ மாதிரி அப்பப்போ அவர் நக்கலா பேசற வசனங்கள் ரசிக்கும் படியா இருக்கு.

அபியோட அப்பா செய்யும் நகைச்சுவைகளும் ரசிக்கும் படியா இருக்கு. (கொஞ்சம் ஓவரா இருந்தாலும்) சட்டை இல்லாம ரோட்ல நடந்து வரும் காட்சி, ராஜ்மாவை ராஜம்மா-ன்னு சொல்லும் காட்சி-னு பல காட்சிகள்ல நல்லாவே சிரிக்கலாம்.

குட்டிப் பையன்கள் செய்யும் லூட்டிகள் நல்லா இருக்கு. அவங்களுக்குப் பின்னாலேயும் ஒரு சோகம் இருக்குறது அவசியம்தானா? அபியோட காதலனா வர்ற ‘சிங்’ ரியலா சிங் இல்லை-ன்னு சொன்னாத்தான் தெரியும். அவ்ளோ ஒரிஜினலா இருக்காரு. பாடல் வரிகள் நல்லா இருந்தாலும்கூட இசை மனசுல பதியல.

ஆரம்பக் காட்சிகள்லயே ‘ஃபைண்டிங் நீமோ’வை ஞாபகப் படுத்திட்டதால என்னோட எதிர்பார்ப்புகள் அதிகமாய்டுச்சுன்னு நெனைக்கறேன். ஊட்டி பக்கத்துல இருக்குற யோரோ ஒரு அப்பாவோட கதையை பார்த்துட்டு வந்தமாதிரி இருக்கேத் தவிர, நீமோவோட அப்பா தந்த நிறைவை அபியோட அப்பா தரலை.

மொத்தத்துல… அப்டீன்னு சொல்லி எல்லா திரை விமர்சனங்களையும் முடிக்கற மாதிரி நானும் முடிக்கணுமா??